ஈரோடு அழைக்கிறது! கழகத் தோழர்கள் கவனத்துக்கு…

12.8.2012 அன்று ஈரோட்டில் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் சந்திப்பு நடக்கும் இடம்:

செல்லாயி அம்மாள் திருமண மண்டபம், (ஈரோடு பேருந்து நிலையம் அருகில்)

நேரம் : காலை 10 மணி

 

பாழ்பட்டு, சீர்க்கெட்டு ஆமைகளாய் ஊமைகளாய்க் கிடந்த தமிழினத்துக்கு ‘மானமும் அறிவும்’ பெற்றுத் தர சூளுரை மேற்கொண்டு, தன்மானத்தை இனமானத்துக்காக ஈகை செய்த அறிவு ஆசான் நமது தலைவர் பெரியார் பிறந்த ஈரோட்டில், நாம் சந்திக்கிறோம்.

சுயமரியாதை இயக்க வரலாற்றில் ஈரோட்டுக்கு தனிச் சிறப்புகள் உண்டு.

  • 1917 ஆம் ஆண்டில் தனது 38 ஆம் அகவையில் பெரியார் நகர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஈரோட்டில்தான்!
  • 1921 இல் காந்தியார் கட்டளையை ஏற்று 144 தடை உத்தரவை மீறி பெரியார் கள்ளுக்கடை மறியலை தலைமையேற்று நடத்தியதும் இதே ஈரோடுதான்! பெரியாரின் துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மாளும் மறியலில் கைதானார்கள். மறியல் தீவிரமாகி, 10000 பேர் கைது செய்யப்பட வேண்டிய நிலையில் பதறிப் போன நிர்வாகம், சென்னை மாகாண அரசுக்கு தந்தி வழியாக தகவல் தந்து, அறிவிப்பு கால வரம்புக்கு முன்கூட்டியே 144 தடை உத்தரவை நீக்கிக் கொண்டது. அறிவிக்கப் பட்ட காலம் வரை தடையை நீட்டிக்காமல் முன்கூட்டியே பெரியார் நடத்திய போராட்டத்தின் அழுத்தத்தினால் தடை திரும்பப் பெறப்பட்டது, வரலாற்றில் அதுவே முதல் முறை! இந்த அடக்கு முறைக்கு எதிரான சரித்திரம் நிகழ்ந்ததும் – இதே ஈரோட்டில் தான்!
  • வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று, அருவிகுத்தி காவல் நிலையத்தில் ஒரு மாதமும், மீண்டும் திருவாங்கூர் சிறையில் 24 மணி நேர கை-கால் விலங்குடன் நான்கு மாதமும் சிறையிலிருந்து பெரியார் விடுதலையானார். தாயாரை சந்தித்து, ஒரு வாரம் ஓய்வெடுக்கலாம் என்று வந்தபோது, அதற்கு 7 மாதத்துக்கு முன்பு கதர் பிரச்சாரம் செய்தபோது பேசிய பேச்சுக்காக அரசு வெறுப்பு குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டது – இதே ஈரோட்டில் தான்!
  • தமிழின வரலாற்றில் மகத்தான சமூகப் புரட்சிக்கு வித்திட்ட பச்சை அட்டை ‘குடிஅரசு’ வார ஏட்டை 1925 ஆம் ஆண்டு திருப்பா திருப்புலியூர் ஞானியார் அடிகளைக் கொண்டு பெரியார் தொடங்கியதும் இதே ஈரோட்டில் தான்!
  • 1928 இல் ‘ரிவோல்ட்’ ஆங்கில ஏட்டை பெரியார் தொடங்கியதும் இதே ஈரோட்டில் தான்!
  • 1933 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தில் ‘சமதர்மப் பிரிவை’த் தொடங்க திட்டமிட்டு, அதற்கான திட்டங்களை தனது இல்லத்தில் கலந்து ஆலோசித்து உருவாக்கி ஈரோடு சமதர்மத் திட்டத்தை பெரியார் வெளியிட்ட பெருமைக்குரிய நகரமும் ஈரோடு தான்! இதன் காரணமாக பெரியார் பொதுவுடைமை பேசுகிறார் என்று சக தோழர்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அரசும் அடக்குமுறையை ஏவியது. 1933 இல் ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’ என்று ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதியதற்காக அரச வெறுப்புக் குற்றத்தின் கீழ் பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • ‘சமதாய கொள்கையிலும் அரசியலிலும்’ பெரியாருக்கு நேர் எதிர்துருவமாக செயல்பட்டு, அதே நேரத்தில், நண்பராகவும் இருந்த இராஜகோபாலாச்சாரி பார்ப்பனர், காங்கிரசிலிருந்து விலகி, பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்துக் கொண்டு, 1942 இல் பெரியார் இல்லம் வந்து, திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததும் இதே ஈரோட்டில் தான்!
  • 17.9.1971 பெரியாரின் 93 ஆவது பிறந்த நாள் ! அந்த நாளில் பெரியார் தொண்டுக்கு நன்றி செலுத்த ஈரோடு மக்கள் திரண்டனர். ஈரோடு நகராட்சி மன்றம் பெரியாருக்கு வரவேற்பு தந்தது. அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரியார் சிலையை ஈரோட்டில் திறந்தார்.

– வரலாற்ற வரைபடத்தில் ஈரோட்டைப் பதிவு செய்த தலைவர் பெரியார் பிறந்த மண்ணில் –

பெரியார் லட்சியத்தை முன்னெடுக்கத் துடிக்கும் தோழர்களாய் நாம் ஒன்று கூடுகிறோம்.  இயக்கப் பாதையை தீர்மானிப்பதில் ஒருமித்த கருத்தும், ஒருமித்த உணர்வும் கொண்ட கொள்கைத் தோழர்களாக சங்கமிக்கிறோம்.

பெரியாரியலுக்கு பல்வேறு எதிர் முகாம்கள் ‘அவதார’மெடுக் கின்றன. இந்தி எதிர்ப்பிலிருந்து சாதி ஒழிப்பு வரை பெரியாரின் வரலாற்றுப் பங்களிப்பை குறைத்து, சில நேரங்களில் சிறுமைப்படுத்தி இருட்டில் தள்ளி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

மானத்தையும் உரிமைகளையும் மீட்பதற்கு பெரியார் இயக்கம் நடத்திய மகத்தான போராட்ட வரலாறுகளை மறைத்து புதிய தலைமுறையை குழப்பத்திலாழ்த்தும் சூழ்ச்சிகள் சூழ்ந்து நிற்கின்றன.

பார்ப்பனியமும் – திராவிடர் எதிர்ப்பும் கைகோர்க்கும் மய்யத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நாமும் அவதானித்தே வருகிறோம்.

சமூக ஒடுக்குமுறைக்கு நச்சு வேர்களாக நிற்கும் பார்ப்பனியமும், மதமும், கடவுளும், மூடநம்பிக்கையும் கைகோர்த்து நிற்கின்றன. இந்த சக்திகளை உரமூட்டுவதற்கு உறுதியாக்குவதற்கு இந்திய தேசியமும், அதனால் வளர்க்கப்படும் தனியார் பன்னாட்டு நிறுவனங்களும் அரண் அமைத்துத் தருகின்றன.

சமூக விடுதலைக்காக சுயமரியாதைக் கொள்கைகளை தாங்கி நிற்கும் நாம் – கட்சி அதிகார அமைப்பு வாதங்களுக்குள் சிக்கிக் கொண்டு கொள்கைப் பாதைகளில் முட்டுக்கட்டைகளை எதிர் கொள்வதற்கான சூழலும் காலமும் இதுவல்ல.

கொள்கைப் பயணத்துக்கு வழியமைத்துத் தரும் நெகிழ்வோடு தொடர்ந்து அணியமாவோம்,

தன் முனைப்புகளை ஒதுக்கிவிட்டு சமூகத் தன்மான மீட்புக்கு தயாராவதே உண்மை பெரியாரியல்வாதிக்கான கடமை, பொறுப்பு என்ற உணர்வோடு ஈரோட்டில் கூடுவோம்;

வாருங்கள் தோழர்களே!

 

பெரியார் முழக்கம் 09082012 இதழ்

You may also like...