சுயமரியாதை இஞ்சினைப் பலப்படுத்தி…

சுயமரியாதை என்கின்ற ஒரு இஞ்சினைப் பலப்படுத்தி, சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்துவிட்டால், பிறகு எந்த எந்திரத்தைக் கொண்டு வந்து அதோடு இணைத்துத் தோல் பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லு கின்றோம். மற்றபடி, எல்லா உணர்ச்சிகளையுமவிட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தக்கதுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடமிருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் இலட்சியம்.  ஒரு இயந்திரத்தைச் சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறு வேகம்போல், இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது; மற்றபடி பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின்  போதுதான் அதன் உண்மை சக்தியும் பெருமையும வெளியாகும்.

பெரியார் – குடிஅரசு – 17.02.1929

 

ஒழுக்கம் என்பது…

சுயமரியாதைக்காரர்களாகிய நாமும் தனிப்பட்ட எந்த வகுப்பாருடைய வும், சுயநலத்துக்கு மாத்திரம் பயன்படும் எந்த ஒழுக்கத்தையும், தனிப்பட்ட மதவாதிகளுக்கு மாத்திரம் பயன்படும் எந்த ஒழுக்கத்தையும் ஒப்புக் கொள் ளாமல் எல்லா மக்களுக்கும் எந்த வகுப்பாரானாலும், எந்த நிலையிலுள்ள வர்களானாலும், எந்த மதக்காரரானாலும் யாவருக்கும் ஒன்றுபோல் பயன்படும்படியான காரியங்களையே நாம் ஒழுக்கம் என்கிறோம். இதனால் சுயநலத்தையே பிரதானமாய்க் கருதிக் கற்பித்துக் கொண்ட ஒழுக்கங்களை உடைத்தெறிவது சுயமரியாதைக்காரர்கள் கடமை என்பது விளங்கும்.

தாசிக்கு ஒழுக்கம் ஒரு புருஷனையே நம்பி ஒருவனிடத்திலேயே காதலாய் இருக்கக் கூடாது என்பதாகும்.

குல ஸ்திரீ என்பவளுக்கு ஒழுக்கம் அயோக்கியனானாலும், குஷ்ட ரோகியானாலும் அவனைத் தவிர வேறு ஒருவனை மனத்தில் கூட சிந்திக்கக்கூடாது என்பதாகும்.

இதுபோலவே, முதலாளிக்கு ஒழுக்கம் எப்படி வேண்டுமானாலும் யாரையும் ஏமாற்றலாம் என்பதாகும்.

தொழிலாளிக்கு ஒழுக்கம் ஒரு விநாடி நேரம்கூட வேலை செய்யாமல், முதலாளிக்குத் துரோகம் செய்யலாகாது என்பதாகும்.

இந்துவுக்கு ஒழுக்கம் – பசுவை இரட்சிக்க வேண்டும் என்பதாகும்.

முஸ்லீமுக்கு ஒழுக்கம் – பசுவைப் புசிக்கலாம் என்பதாகும். இந்து வட்டி வாங்கலாம். முஸ்லீம் வட்டி வாங்கக் கூடாது என்பவை ஒழுக்கம்.

சைவனுக்கு ஒழுக்கம் – விபூதி பூச வேண்டும் என்பதாகும்.

வைணவனுக்கு ஒழுக்கம் – நாமம் போட வேண்டும் என்பதாகும்.

மாத்துவனுக்கு ஒழுக்கம் – முத்திரை அடித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

இந்துவுக்கு அக்காள் மகளை, அத்தை மகளைக் கட்டிக் கொள்வதும்; சிற்றப்பன் மகள் தங்கை என்பதும் ஒழுக்கம்.

முஸ்லிம் – சிற்றப்பன் மகளைக் கட்டிக் கொள்வது ஒழுக்கம்; அக்காள் மகளைக் கட்டக் கூடாது என்பது ஒழுக்கம்.

ஆகவே, இன்று உள்ள ஒழுக்கங்கள் என்பவைகள் எல்லாம் சட்டம்போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவைகளே தவிர, எல்லோருக்கும் பொருந்தியவைகள் அல்ல.

பெரியார், குடிஅரசு – 24.11.1940

பெரியார் முழக்கம் 23082012 இதழ்

You may also like...