காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்
மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த தோழர் செங்கொடியின் முதலாம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி 28.8.2012 செவ்வாய் கிழமை அன்று காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. அன்று காலை 8 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் மன்ற கொடியினை ஏற்றி வைத்தார். காலை 10 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. வந்திருந்து நினைவுச் சுடரையேற்றி நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
மாலை 6 மணிக்கு நினைவேந்தல் பொதுக் கூட்டம் பறை ஆட்ட நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காஞ்சி மக்கள் மன்றப் பொறுப்பாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சிறுவர்களின் நடனம், கவிதை, இடையிடையே உரை என்று நடைபெற்றது. ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உரையாற்றி முடிந்ததும் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. எனவே கூட்டம் தடைபட்டது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரின் சார்பாகவும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நிறைவுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 06092012 இதழ்