சமூகத்தை பார்ப்பனியமாக்கிய சமஸ்கிருதம்
சமஸ்கிருதத்தை கல்வி நிறுவனங்களில் பா.ஜ.க. ஆட்சி திணிப்பது பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பேயாகும். சமஸ்கிருதத் திணிப்பால் சமூகத்தில் நடந்த பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்புகளை எதிர்த்து போராடிய, போராடி வரும் நாடு தமிழ்நாடு. இது குறித்து முனைவர் பொற்கோ எழுதிய கட்டுரையிலிருந்து…
வடமொழிச் செல்வாக்கு சமயங்களையும் அரசர் களையும் தன்னுள் அகப்படுத்திய பிறகு சமுதாய வாழ்விலும் ஊடுருவிப் பரவியது. சங்க காலத் தமிழரசர்களின் பெயர்களையும் பிற்காலச் சோழ பாண்டிய வேந்தர்களின் பெயர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வடமொழிச் செல்வாக்கின் வளர்ச்சி தெளிவாகப் புலப்படும்.
ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதிராஜன், குலோத்துங்கன், விக்ரமன், ராஜகேசரி, பரகேசரி முதலான பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ்ப் பெயராக இல்லை. மாறவர்மன், சடையவர்மன், குலசேகரன் முதலான பெயர்களும் வடமொழிச் செல்வாக்கின் உச்சநிலையை நமக்கு உணர்த்துகின்றன. அரசர்களின் பெயர்களே இப்படி மாறிவிட்ட பிறகு அவர்கள் வழங்கும் பட்டங்களும் சிறப்புப் பெயர்களும் எப்படி இருக்கும்? அவையும் வடமொழி மயமாயின.
தமிழகத்திலுள்ள ஊர்ப் பெயர்கள், கோயிலின் பெயர்கள், தெய்வத்தின் பெயர்கள், மக்களின் பெயர்கள் – இப்படி எல்லாப் பெயர்களும் வடமொழி மயமாயின. வடமொழிச் செல்வாக்கினால் மயிலாடுதுறை மாயூரமா யிற்று. (நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பெயர் மாற்றப் பட்டது) திருமுதுகுன்றம் விருத்தாசலமாயிற்று; மரைக்காடு மறைக்காடாகி அது திருமறைக்காடாகிப் பின் வேதாரண்யமாயிற்று.
தியாகேசர், நடராஜர், வைத்தீஸ்வரன், வெங்க டேஸ்வரன், லோகாம்பாள், அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி, பிரம்மபுரீஸ்வரா, பிரம்மவித்யா நாயகி, ஆபத்சகாயஸ்வரர், பிரம்மவித்யா நாயகி, கோகிலேஸ்வரர், சொர்னபுரீஸ்வரர், சகல புவனேஸ்வரர், அருணாசலேஸ்வரர் என்று இவ்வாறு தெய்வப் பெயர்கள் வடமொழி மயமாக மாறின.
ஊர்ப் பெயர்களும் தெய்வப் பெயர்களும் வடமொழ மயமாக்கப்பட்ட நிலையில் வடமொழிச் செல்வாக்கு இங்கே வேரூன்றத் தொடங்குகிறது. படிப்படியாக மக்களுக்கு இடும் பெயர்களும் வடமொழி மயமா கின்றன. லக்ஷ்மி, ஜானகி, சக்ஸ்ரநாமம், புருஷோத்தமன், புஷ்பவல்லி என்று இவ்வாறு மக்களின் பெயர்களிலும் வடமொழிச் செல்வாக்கு பரவியது.
வடமொழிச் சொற்கள் தமிழில் மிகுதியாகப் பரவியதன் விளைவாக நல்ல தமிழ்ச் சொற்களும் அன்றாட வழக்கிலிருந்து மறையத் தொடங்கின. மக்கள் வாழ்க்கையில் நடைபெறும் திருமணம் முதலான சடங்குகளிலும் வடமொழி புகுந்து செல்வாக்கு செலுத்தும் நிலை உருவாயிற்று.
விவாஹம், கர்ணபூஷணம், கிரஹப்பிரவேசம், புஷபவதியாதல், கன்னிகாதானம், சஷ்டியப்தபூர்த்தி, ஸ்ரார்த்தம், தீர்த்த யாத்திரை முதலான சொற்கள் வாழ்க்கைச் சடங்குகளில் புகுத்தப்பட்டன.
அன்றாட வாழ்வில் பயன்படும் பேச்சு வழக்கில்கூட வடமொழிச் செல்வாக்குப் பரவியதும், சௌகரியம், nக்ஷமம், ஜலம், ஸ்நானம், யஜமான், புருஷன், உபயோகம், பிரயோஜனம், யோஜனை, விசேஷம், விசுவாசம், நமஸ்காரம், லக்ஷ்ணம், அவலக்ஷ்ணம் – இப்படி ஏராளமான வடமொழிச் சொற்கள் வந்து குவிந்தன.
இப்படியெல்லாம் தமிழ்ச் சமுதாய வாழ்வில் எல்லா நிலையிலும் வடமொழிச் செல்வாக்கு ஓங்கிய நிலையில்தான் இங்கே வடமொழி மேலாண்மைக்கு எதிர்ப்பு உருவாயிற்று. நாம் முன்பே குறிப்பிட்டது போல இருபதாம் நூற்றாண்டில்தான் வடமொழி மேலாண்மை முறியடிக்கப்பட்டு தமிழ் மறுமலர்ச்சிக்கு உரிய சூழல் உருவாகியுள்ளது.
அரசியல், சமுதாயம், சமயம், மொழி, இலக்கியம் போன்ற எல்லா எல்லைகளிலும் வடமொழிச் செல்வாக்கு ஓங்கியது. இதன் விளைவாகத் தமிழ்ச் சமுதாயமும் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் ஒடுக்கப்பட்டு இவற்றின் சீரும் சிறப்பும் புறக்கணிக்கப்பட்டு மறைக்கப்பட்டன. இந்த நிலை எல்லை மீறிப் போனபோது தமிழகத்தில் வடமொழி மேலாண்மை கடுமையான எதிர்ப்புக்குள்ளா யிற்று.
அரசியல், சமுதாயம் முதலான எல்லைகளில் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் ஏனைய திராவிட இயக்கத் தோழர்களும் வடமொழி மேலாண்மையை முறியடித்தார்கள். சமயம், மொழி, இலக்கியம் முதலான எல்லைகளில் வள்ளலார், மறைமலையடிகள், ச.சோம சுந்தர பாரதியார் முதலான பெருமக்கள் வடமொழி மேலாண்மையை எதிர்த்துப் போராடிப் பெரு வெற்றிப் பெற்றார்கள்.
மறைமலையடிகளார் வடமொழியில் அறிவு பெற்றவர்; ஆனால், அவர் வடமொழி மேலாண்மையை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்து நின்றவர்.
‘சமஸ்கிருத மயமாக்கம்’ நூலிலிருந்து
இப்போது மீண்டும் சமஸ்கிருதத் திணிப்பு
தொடங்கிவிட்டது; தமிழர்களே! எதிர்க்க வேண்டாமா?
பெரியார் முழக்கம் 30062016 இதழ்