பெரியார் முன்கூட்டியே கைதானார்!

1957 நவம்பர் 26 – சட்ட எரிப்புக்கு முதல் நாள் பெரியார் திருச்சியில் முன்கூட்டியே கைது செய்யப்பட்டு விட்டார். இது குறித்து ‘விடுதலை’ ஏடு வெளியிட்ட செய்தி:

ஜாதி ஒழிப்புக்கு, பெரியார் கொடுத்த 15 நாள் கெடு 18.11.57 அன்று முடிவடைந்தது. எந்தப் பயனும் இல்லாததால் நவம்பர் 26இல் சட்டம் கொளுத்தும் போராட்டம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 26.11.57 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அச்சடிக்கப்பட்ட தாள் கட்டினை எரிக்க நாடு முழுவதும் தோழர்கள் பெயர்கள் பட்டியல் தந்து போராட்டத்திற்கு ஆவலாக அணியாயிருந்தனர்.

பெரியார் அவர்கள், 25.11.57 இல் சீரங்கம் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு விரைவுத் தொடர் வண்டி (எக்ஸ்பிரஸ்) மூலம், சென்னைக்கு வந்து நவம்பர் 26இல் சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம் ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதி யில், அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட் டிருந்தார்கள்.

இந்நிலையில், 25.11.57 மாலை பெரியார் அவர்கள், அவரது புத்தூர் மாளிகையிலிருந்து சீரங்கம் பொதுக் கூட்டம் பேசப் புறப்பட்டு ஆயத்தப் படுகையில், திருச்சிக் காவல் துறைக் கண் காணிப்பாளர் (சூபரின்டென்ட்) திரு. எஸ். சோலையப்பன் அவர்கள் பெரியார் மாளிகை வந்து மாலை 6.40 மணிக்கு பெரியார் அவர்களைக் கைது செய்தார். கிரிமினல் சட்டப்பிரிவு 151இன்படி (குற்றங்களைத் தடை செய் தலுக்கான சட்டப் பிரிவு). உத்தேசிக்கப்பட்ட நவம்பர் 26ஆம் நாள் அரசியல் சட்டப் புத்தகத்தைக் கொளுத்துவதைத் தடுப்பதற்காக, கைது செய்வதாகக் கூறி, கைது செய்து தமது உந்து வண்டி (கார்)யில்  அழைத்துச் சென்றார். பின், கூடுதல் முதல் வகுப்பு நீதிபதி திரு. இராமச் சந்திரன் அவர்கள் முன்பாக, பெரியார் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு 3 நாள் ரிமான்டில் வைக்கும்படி உத்தரவிட்டார். பெரியார் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டார். டிசம்பர் 9 வரை ரிமாண்டில் வைக்கும்படி அரசு தரப்பில் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு,

3 நாள் ரிமாண்டில் வைக்கப்பட்டு நிபந்தனையின் பேரில் வெளியில் இருக்க பெரியார் அனுமதிக்கப் பட்டார்.

திராவிடர் கழகம் செய்த தீர்மானத்திற்கிணங்கவும், பெரியார் அவர்களின் ஆணைக்கு இணங்கவும் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியின் முதல் கட்டப் போராட்டமாகத் துவங்கப்பட்ட அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் தமிழ் நாடெங்கும் 26.11.57 அன்று நடந்தேறியது.

சென்னை முதல் குமரி வரை சுமார் 10 ஆயிரம் பேர் கொளுத் தினர்.

பெரியார் முழக்கம் 24112016 இதழ்

You may also like...