தலையங்கம் மதுரை உயர்நீதிமன்றத்தின் பாராட்டுக்குரிய அறிவுறுத்தல்
மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜாதி வெறி கொலைகளுக்கு எதிராக பிறப்பித்துள்ள உத்தரவு பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய தாகும். மதுரை மாவட்டம் மதிச்சியம் காவல் சரகப் பகுதியில் வசிக்கும் சூர்யபிரகாஷ் என்ற இளைஞர், ஜாதி மறுப்பு திருமணம் செய்து திருமணத்தையும் பதிவு செய்துள்ளார். குடும்பத்துடன் வாழத் தொடங்கிய அவருக்கு பெண்ணின் சகோதரரும் தந்தையும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். மதுரை நகர காவல் நிலையமும் பாதுகாப்பு தர முன் வரவில்லை. உயிருக்கு உரிய பாதுகாப்பு தர, மதுரை மாநகர காவல் பிரிவுக்கு ஆணையிட வேண்டும் என்பது அவரது கோரிக்கை. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி எஸ். விமலா, கடுமையான மொழிகளில் காவல்துறையை எச்சரித்துள்ளது. ஜாதி எதிர்ப் பாளர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ‘உச்சநீதிமன்றம்’ லதாசிங் வழக்கில் வழங்கிய அறிவுறுத்தலை நீதிபதி காவல்துறையிடம் எடுத்துக் காட்டினார்.
“ஜாதி மறுப்பு மத மறுப்பு திருமணங்களை தேச நலன் கண்ணோட்டத்தில் வரவேற்க வேண்டும்; ஜாதி மறுப்பு திருமணங்கள் வழியாகவே ஜாதி அமைப்பு ஒழியும்; ஜாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பில் அழுத்தமாக வலியுறுத்தியது. உச்சநீதிமன்றம் அத்துடன் நிற்கவில்லை. தீர்ப்பின் நகலை அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாவட்ட அரசு நிர்வாகத்துக்கும் அனுப்பியது. “ஜாதி-மத மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக வயதுக்கு வந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ துன்புறுத்தலுக்கோ அச்சுறுத்தலுக்கோ உள்ளாக்கப்பட்டால், அவர்களுக்கு பாதுகாப்பு தருவது அரசின் காவல்துறையின் கடமை” என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அதில் அறிவுறுத்தியிருந்தது.
மனுதாரர் தனக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் புகார் தந்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீதிபதி உச்சநீதிமன்றத்தின் சரியான தீர்ப்பினை எடுத்துக் காட்டியிருக்கிறார். ‘ஜாதி வெறி சக்திகளுக்கு காவல்துறை துணை போவது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும்’ என்பது இதில் அடங்கியிருக்கும் அர்த்தம். மனுதாரரின் வாக்குமூலத்iப் பதிவு செய்த நீதிபதி, அதைத் தொடர்ந்து தெரிவித்த கருத்துகளும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை.
“கவுரவக் கொலைகள் என்ற பெயரில் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. அதுவும் மனுதாரர் வசிக்கும் காவல் சரகத்தில் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் பாதுகாப்பு தரவேண்டிய கடமை காவல்துறைக்கு கட்டாயம் உண்டு” என்று கூறிய நீதிபதி, ‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் இந்தக் கொலைகளை குறிப்பிடுவதையே கண்டித்திருக்கிறார்.
“தங்களுடைய விருப்பத்திற்கேற்ப ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம் புரிந்து கொள்வோரை கொலை செய்வதை, எப்படி கவுரவக் கொலை என்று கூற முடியும்? இது நவீன சமூகத்தில் காட்டுமிராண்டி செயல்; வெட்கப்பட வேண்டியது. இந்தக் கொடூரமான நிலபிரபுத்துவ எண்ணம் கொண்டோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்” என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.
ஜாதி வெறிப் படுகொலைகளை தடுப்பதற்கு மத்திய அரசே ஒரு சட்டம் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக சட்ட ஆணையம் தயாரித்த மசோதா, மாநிலங்களின் கருத்து கேட்டு சுற்றுக்கு விடப்பட்டது. வேதனை என்னவென்றால் இந்த மசோதா மீது இது வரை கருத்து தெரிவிக்காமல் கிடப்பில் போட்டிருக்கும் ஒரே தென் மாநிலம் தமிழ்நாடுதான். ஜாதி வெறிப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவை என்ற கருத்து தமிழ்நாட்டின் ஜாதி-தீண்டாமை எதிர்ப்பு இயக்கங்களிடமிருந்து வலிமையாக ஒலித்து வந்தாலும் தமிழ்நாடு அரசு அந்தக் குரலை அலட்சியப்படுத்தி வருவது அழுத்தமான கண்டனத்துக்கு உரியதாகும்.
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த கண்டனக் குரல் – தமிழக காவல்துறைக்கு எதிரானது மட்டுமல்ல;
தமிழக அரசுக்கும் எதிரானதுதான் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.