கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பா.ஜ.க.

தமிழ்நாட்டில் கூட்டணிக்கு கட்சி கிடைக் காமல் தனித்து விடப்பட்டிருக்கிறது பாரதிய ஜனதா. இந்து மக்கள் கட்சி நடத்தும் அர்ஜுன் சம்பத் கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவில்லை. அவர் வேட்பாளர்களை தனியாக நிறுத்தப் போவதாகக் கூறுகிறார். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருக்கும் எச். ராஜா என்ற பார்ப்பனர், மத்தியில் அதிகாரத்துக்கு வந்துவிட்ட இறுமாப்பில், தடித்த வார்த்தைகளைப் பேசி வந்தார். இந்தியாவே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதைப்போல அவர் காட்டிய திமிர் இப்போது பேர் சொல்வதற்குக் கூட ஒரு ஆதரவு கட்சி இல்லாமல் அநாதையாக அலையவிட்டிருக்கிறது. சமத்துவ மக்கள் கட்சியை நடத்தும் சரத்குமாரும், பா.ஜ.க.வோடு கூட்டணி பேசி முடித்த பிறகு ‘அம்போ’ என்று கைவிட்டு மீண்டும் போயஸ் கார்டனுக்கு ஓடி விட்டார். வாசனின் த.மா.க.வுடன் இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என்றார். மாநில தலைவர் தமிழிசை, வாசனும் ‘டாட்டா’ காட்டி விட்டார்.

“எங்கள் ஆதரவின்றி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது” என்று அவ்வப்போது நகைச்சுவை விருந்தளித்து வருகிறார், மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன். முகத்தை அவ்வளவு கடுமையாக வைத்துக் கொண்டே இப்படி எல்லாம் ‘ஜோக்’ அடிக்கும் அவரது திறமையை பாராட்டத் தான் வேண்டும்.

பெரியார் முழக்கம் 14042016 இதழ்

You may also like...