பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (2) கொளத்தூர் மணி

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)

மொழித் தூய்மைவாதம் என்பது தன் மொழி மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தை எதிர்ப்பது. சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் என்று நம் மீது செலுத்தப்படும் எல்லா ஆதிக்கத்தையும் எதிர்க்கும் நாம், நம் மொழி மீது வேற்று மொழி ஆதிக்கம் செலுத்துவதை எதிர்ப்பது நியாயம் தான். பெரியாரும் பேசியிருக்கிறார் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்கும்போது னுளைiகேநஉவயவே என்ற சொல்லுக்கு பூத நாசினி என்று சொல்லுகிறார்கள். நச்சு நீக்கி என்று சொன்னால் என்ன? நுடநஉவசடிடலளளை என்ற சொல்லை ஏன் விக்தியோஜனம் என்று மொழிபெயர்க்கிறீர்கள்? மின் பருக்கை என்று ஏன் கூற மறுக்கிறீர்கள்? பெரியார் கேட்கிறார்.

நம் மொழி மீது இன்னொரு மொழியின் ஆதிக்கம் வேண்டாம் என்பது சரி; ஆனால் இனத் தூய்மை வாதம் பேசுகிறபோதுதான் சிக்கலே வருகிறது. இனத் தூய்மைவாதம் பேசுகிறவர்களிடம் நாமும் சில கேள்விகளை முன் வைக்க வேண்டிய தேவை வருகிறது. சோழப் பேரரசின் பெருமைகளைப் பேசுகிறவர்கள் தங்களை இரத்தப் பரிசோதனை செய்தால் தெரியும் தாங்கள் தூய தமிழர்களா என்று. ஆனால், அது நமது நோக்கம் அல்ல. ஆரியர் திராவிடர் என்ற கருத்தாக்கம் எப்போதிருந்து பெரியாருக்கு இருக்கிறது. 1929ஆம் ஆண்டு காங்கிரசை விமர்சித்துப் பேசும்போது “தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு எப்போதெல்லாம் தங்களது மாயாஜாலம் பலிக்கவில்லையோ அப்போதெல்லாம் வெளிநாட்டிலிருந்து ஆட்களைக் கூட்டி வருகிறார்கள்” என்று கூறுகிறார். சர்தார் வல்லபாய் படேலை தமிழ்நாட்டிற்கு கூட்டி வந்தபோது “முதலில் காந்தியைக் கூட்டி வந்தார்கள். பிறகு பஜாஜை கூட்டி வந்தார்கள். இப்போது படேலைக் கூட்டி வந்திருக்கின்றனர்” என்று குடிஅரசில் எழுதுகிறார். ஆக 1929ஆம் ஆண்டே வடநாட்டை வெளிநாடு என்றுதான் அழைத்திருக்கிறார். ஒரு அறிஞரின் ஆய்வறிக்கையைப் படித்தேன். அதில் அவர் பெரியார் தன்னை ஒரு கன்னடன் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார். உண்மையில் அவர் ஒரு தெலுங்கர் என்று எழுதியிருந்தார்.

பெரியாரைப் பற்றி நீங்கள் என்ன எழுதியிருந்தா லும் அது அவர் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியும். அவர் தன் இளமைக் காலத்தில் செய்த மைனர் சேட்டைகள் என்றாலும் சரி அவர் கன்னட பலிஜா நாயுடு சாதியைச் சேர்ந்தவர் என்றாலும் சரி அது அவரின் எழுத்து மூலமாகத்தான் உங்களுக்கு தெரியும். எதையும் நீங்கள் ஆய்வு செய்து கண்டு பிடிக்கவில்லை. வெளிப்படையாக தன்னைப் பற்றிய உண்மைகளை கூறிக் கொண்டவர் பெரியார். விதவா விவாக விளக்கம் என்ற நூலுக்கான அணிந்துரையைப் பெரியார் எழுதுகிறார், “என் அக்கா மகளுக்கு திருமணம் நடந்தது. அவரின் கணவர்இறந்து விட்டார். மறுமணம் பற்றி பேச்சு வந்தது. நாங்கள் கன்னட பலிஜா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்கள்; எங்களுக்குள் விதவை மறுமணம் வழக்கம் கிடையாது என்று சொன்னார்கள். நான் அதை மாற்றி மறுமணம் செய்து வைத்தேன்” என்று எழுதியிருக் கிறார். அப்படித்தான் அவர் இன்ன சாதி என்று நமக்குத் தெரியும். அவர் எந்த இடத்திலும் சாதி பெருமை பேசவில்லை; பெருமையாக தன் சாதியை சொல்லிக் கொள்ளவும் இல்லை.

பெரியார் பெங்களூரு சென்றிருந்தபோது கன்னடத்தில் பேச சொல்லுகிறார்கள். நான் முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு இரண்டொரு வார்த்தை பேசுகிறார். பிறகு மன்னிக்கணும் எனக்கு கன்னடம் வரவில்லை. வேண்டுமானால் தெலுங்கிலோ மலையாளத்திலோ பேசுகிறேன். வியாபாரம் செய்ய சென்றபோது கொஞ்சம் கற்றிருக்கிறேன் என்று கூறிவிட்டு தமிழில் பேசுகிறார். இதற்கான பதிவுகள் இருக்கின்றன. சரி, அவர் தெலுங்கர்களையாவது நம்மவர்களாக நினைத்தாரா என்றால் அதுவும் இல்லை. நெல்லூரில் நீதிக்கட்சி (தென்னிந்திய நல உரிமை சங்கத்தின்) மாநாடு நடக்கிறது. பெரியார் காங்கிரசோடு ஒப்பிட்டு பார்த்தால் ஒப்பீட்டளவில் நீதிக்கட்சியை ஆதரித்துக் கொண்டிருந்த காலம். அந்த மாநாட்டில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளலாம் என்று ஒரு முன்மொழிவு இருப்பதாக அறிகிறார். அதனால் ‘நெல்லூர் மாநாடு’ என்ற தலைப்பில் 22.9.1929இல் ஒரு அறிக்கை எழுதுகிறார். “இம்மாநாடு தெலுங்கு நாட்டில் கூடுவது நமக்கு மிகவும் பலவீனமானது என்றே தோன்றுகிறது. ஏனெனில் தெலுங்கு நாட்டு மக்களுக்கு இவ்விசயம் அவ்வளவு கவலைப்படத்தக்கதாக இல்லை. அவர்களுக்கு இன்னும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என்ற விஷயம் அர்த்தமான தாகவே சொல்வதற் கில்லை. இதற்கு முக்கிய உதாரணம் என்னவென் றால் ஆந்திர தேசத்தில் இன்னும் காங்கிரசுக்கு மதிப்பு இருப்பதே ஆகும். ஆந்திர தேசத்து பார்ப்பனர் அல்லாதவர்கள் இன்னும் மத சம்பந்தமான புராணங்களிலும் குருட்டு நம்பிக்கைகளிலும் ஈடுபடுபவர்கள் ஆவர். எவ்வளவுக்கெவ்வளவு குருட்டு நம்பிக்கைகளிலும் புளுகு புராணங்களிலும் ஈடுபடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் மேதாவிகள் எனவும் பெரியவர்கள் எனவும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள். எனவே மூட நம்பிக்கைகளிலிருந்தும் கண்முடி பின்பற்றும் குருட்டு நடவடிக்கைகளிலிருந்தும் என்று ஆந்திர தேசத்தவர் விடுதலை பெறுகிறார்களோ அன்றுதான் அவர்கள் பார்ப்பனர்களின் மதிப்புகளிலிருந்தும் அரசியல் புரட்டுகளிலிருந்தும் விடுதலை அடைய முடியும். ஆதலால் நாம் எந்த வகையிலும் ஆந்திர தேசத்தவரை பின்பற்றுவது மறுபடியும் நம்மைப் படு குழியில் கொண்டு போய் தள்ளும்” எனத் தமிழர் களை, தமிழ்நாட்டுத் தலைவர்களை எச்சரிக்கிறார்.

பிறகு 1956ஆம் ஆண்டு மீண்டும் எழுதுகிறார், “பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்து நாட்டு பிரிவினையில் எனக்கு கவலையில்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் சீக்கிரம் பிரிந்தால் தேவலாம் என்று எனக்குத்  தோன்றியது. அதற்குக் காரணம் கன்னடியனுக்கோ மலை யாளிக்கோ இனப்பற்றோ, இன சுய மரியாதை உணர்வோ பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். சூத்திரன் என்பது பற்றி இழிவோ வெட்கமோ பெரும்பாலானோருக்குக் கிடையாது. எப்படியெனில் அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. மத மூட நம்பிக்கைகளில் மூழ்கி விட்டவர்கள்.

மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்கு அவர்கள் நாடு  அடிமையாய் இருப்பது பற்றி அவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை. ஆகவே இவ்விரு துறை களிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணம் கொண்ட வர்களை நாம் எதிரிகள் என்றே சொல்லலாம். அதுமட்டும் அல்லாமல் அவர்கள் ஏழில் ஒரு பாகஸ்தர்களாக இருந்துகொண்டு தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைந்து கொண்டு, இவர்கள் கலந்திருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்று சொல்வதற்குத் தடையாக தடுத்தாண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். இவர்கள் சீக்கிரம் ஒழியட்டும் எனறே கருதி வந்தேன். அந்த வகையில் நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் இந்த பிரிவினையை நான் ஆதரிக்கிறேன்” இவ்வாறு மொழிவாரி மாநிலங்களாக பிரிந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறார் பெரியார். இவரைத்தான் திராவிடர், திராவிடம் என்று பேசி தமிழ்நாட்டில் அன்னியர் ஆதிக்கத்தை உண்டாக்கிவிட்டார் என்று குற்றம் சாற்றுகின்றனர்.

இவர்களிடம் நான் கேட்கிறேன், பெரியார் பொது வாழ்விற்கு வந்த பிறகுதான் கன்னடர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் தமிழ்நாட்டிற்கு வந்தார்களா? பெரியார்தான் இவர்களை எல்லோரை யும் கூட்டிக் கொண்டு வந்தாரா? அவர்கள் எப்போதும் இங்கேதான் இருந்தார்கள். நம்முடைய தமிழ் மன்னர்களுக்கும் வேறு மன்னர்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மராட்டியர்கள், நாயக்கர்கள், முகலாயர்கள் என்று பல மன்னர்கள் தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அப்படி வேற்று மன்னர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோதெல்லாம் அவர்கள் தங்கள் ஆட்களை கூட்டிவந்து இங்கே பொறுப்பில் உட்கார வைத்து விடுவார்கள். அப்படி வந்தவர்கள்தான் வேற்று மொழி பேசும் மக்கள். அதனால்தான் வளமான இடங்களில் அவர்கள் வசிக்கிறார்கள. நமது மன்னர்கள் வேறு நாடுகளைப் பிடித்தபோது இவ்வாறு குடியேற்றங்கள் எதையும் நிகழ்த்தவில்லை. அந்த நாட்டு மன்னனையே ஆட்சியில் இருக்க அனுமதித்தார்கள். அவன் வருடத்திற்கு ஒருமுறை இம்மன்னன் பிறந்த நாள் அன்று வந்து வணங்கி திரை கட்டி சென்றால் போதும் என்றே எண்ணினார்கள். தமிழர்களும் பிற தேசங்களுக்கு சென்றார்கள். ஆனால் கூலிகளாக சென்றார்கள், ஆட்சியாளர் களாக இல்லை.

பெரியார் ‘குடிஅரசி’ல் எழுதியதோடு நின்று விடாமல் 26.10.1956ஆம் தேதி திராவிடர் கழகத்தின் மத்திய குழுவைக் கூட்டி “வடநாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து முழு சுதந்திரத்துடன் விலக வேண்டும் எனும் முயற்சிக்கு ஒத்துழைக்க இஷ்டப்படாத ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக நாடுகள் திராவிட நாட்டிலிருந்து விலக்கமடைந்து விட்டதற்கு இக்கமிட்டி மகிழ்ச்சி அடைவதோடு, இனி தமிழ்நாடு முழு சுயேட்சை விடுதலைக்கு அதிதீவிரமாக பாடுபட வேண்டியதென

இக்கமிட்டி தீர்மானிக்கிறது” என்று தீர்மானம் இயற்றுகின்றார்.

பெரியார்  மீதான இன்னொரு குற்றச்சாட்டு, அவர் இனவாதி என்கிறார்கள். பெரியார் பார்ப்பனர்களே கூடாது என்றார் என்கிறார்கள். தவறு, பெரியார் கூறினாலும் தவறுதான். இவர்களெல்லாம் பெரியார் பார்ப்பனர்களை பற்றி என்ன வரையறை வைத்திருந்தார் என்று படிக்காமல் பேசுகிறார்கள் என்றுதான் கூறுவேன். பார்ப்பனர் ஒருவர் வந்து நானும் திராவிடன் என்று சொன்னால் நமக்கென்ன சிக்கல் என்று சொல்கிறார். அவரிடம் சில கேள்விகளை மட்டும் கேட்பேன் என்கிறார். “உனக்கேன் முதுகில் பூணூல்? உனக்கேன் தலையில் உச்சிக் குடுமி? என்று கேட்பேன். இரண்டையும் மறுத்தால், எடுத்துவிட்டால் எனக்கென்ன சிக்கல்? அதற்குப் பிறகு உனக்கு குறள் உயர்ந்ததா, கீதை உயர்ந்ததா? எனக் கேட்பேன். குறள் உயர்ந்ததா, வேதம் உயர்ந்ததா? எனக் கேட்பேன். தமிழ் உயர்ந்ததா, சமஸ்கிருதம் உயர்ந்ததா? எனக் கேட்பேன். அவன் குறள்தான் உயர்ந்தது, தமிழ்தான் உயர்ந்தது என ஒப்புக் கொண்டால் எனக்கென்ன ஆட்சேபணை?” எனக் கூறுகிறார். “எல்லோரையும் ஒன்றாக்க வேண் டும் என்பதுதான் என் நோக்கமே தவிர ஏதாவது ஒரு காரணம் கூறி ஒருவரை விலக்கி வைப்பது என் நோக்கம் அல்ல. ஜன சமூகம் ஒன்றாக இருக்க வேண்டும்; அதற்குத் தடையாக இருக்கும் பார்ப்பனர் தான் என் எதிரி” என்கிறார். அதை அவர்கள் விட்டுவிட்டு என்னோடு வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதில் எனக்கென்ன தடை என்கிறார்.

திராவிடர் என்ற சொல்லை ஒரு குறியீட்டு சொல்லாக்கத்தை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருளை நாம் ஏற்றுகிறோம். அதற்கு இருக்கும் பொருள் வேறாக இருக்கலாம். வகுப்பு அல்லது கிளாஸ் என்றொரு சொல் உள்ளது. அதை ஒரு ஆசிரியர் பார்த்தால் ஒரு பொருள்; அதை ஒரு பொதுவுடைமையாளர் பார்த்தால் அதற்கு வேறு பொருள். ளுரதெநஉவள என்றொரு பதம் உண்டு. பள்ளிகூடத்தில் அதற்கு ஒரு பொருள். அதே சொல் ஆட்சியாளர்களுக்கு தன்னிடம் அடிமைப்பட்டு கிடப்பவர்கள் என்று பொருள். யவடிஅ என்றொரு சொல் இருக்கிறது. அப்படியென்றால் பிளக்க முடியாதது என்று பொருள். ஆனால் இதை அதைப் பிளக்க முடியும் என்று கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் அதை இன்னும் யவடிஅ என்றுதான் அழைக்கிறோம்.

ஏன்? அதைத் தான் பிளக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டாயிற்றே? அது அந்த பொருளுக்கு இந்த சொல்லைப் பொருத்தி, ஏற்றி நீண்ட காலம் ஆகிவிட்டது. ‘திராவிடர்’ என்ற சொல்லில் பெரியார் ஏற்றி இருக்கிற பொருள் “சாதியத்திற்கு, இந்து மதத்திற்கு, பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரானவர்கள்” என்பதேயாகும்.

(தொடரும்)

“நாம் எந்த வகையிலும் ஆந்திர தேசத்தவரை பின்பற்றுவது மறுபடியும் நம்மைப் படு குழியில் கொண்டு போய் தள்ளும்” எனத் தமிழர்களை, தமிழ்நாட்டுத் தலைவர்களை எச்சரித்தவர் பெரியார்.

பெரியார் பார்ப்பனர்களை பற்றி என்ன வரையறை வைத்திருந்தார் என்பதை படிக்காமல் சிலர் பேசுகிறார்கள்

பெரியார் முழக்கம் 26052016 இதழ்

You may also like...