குஜராத், தலித் மக்களின் புரட்சி
செத்த மாட்டைப் புதைக்க மாட்டோம்; சாக்கடைக் குழியில் இறங்க மாட்டோம்!
குஜராத், தலித் மக்களின் புரட்சி
“செத்த மாடுகளைப் புதைப்பது உள்ளிட்ட இழிவான வேலைகளை செய்ய மாட்டோம்” என்று, தலித் மக்கள் போர்க்கொடி உயர்த்திய மகிழ்ச்சியான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் செத்த பசுமாட்டுத் தோலை உரித்தார்கள் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ள ‘பசு பாதுகாப்பு’ அமைப்பைச் சார்ந்த வன்முறையாளர்கள், தலித் இளைஞர்களை ஆடைகளைக் களைந்து மூர்க்கத்தனமாக தாக்கினர். இந்த செய்தி குஜராத் தலித் மக்களை கொதித்தெழச் செய்துவிட்டது. மாட்டுத் தோலை விற்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் தலித் மக்கள். செத்த மாடுகளின் தோலை உரிக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் வன்முறையில் ஈடுபடுவது அவர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கிறது. இனி செத்த மாடுகளை புதைக்க மாட்டோம் என்று குஜராத்தில் தலித் மக்கள் அறிவித்து விட்டதால், 200 செத்த மாடுகள் புதைக்கப்படாமல் துர்நாற்றம் அடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சபர்மதியில் தலித் மக்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ஆச்சர் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட தலித் மக்கள் ஓர் உறுதிமொழியை ஏற்றனர்.
“ஆண்டாண்டு காலமாக எங்கள் மீது திணிக்கப்பட்ட செத்த மாட்டைப் புதைக்கும் வேலை; சாக்கடை, மலக்குழிகளில் இறங்கி சுத்தம் செய்யும் வேலையை இனிசெய்ய மாட்டோம்” என்று உறுதி ஏற்றுள்ளனர். ‘உனா தலித் அத்யாச்சர் லதாத் சமிதி’ என்ற அமைப்பு இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ‘ஜெய்பீம்’ முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
“நரேந்திர மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார்? எங்கள் துயரங்களை ஏன் பகிர்ந்து கொள்ள மறுக்கிறார்?” என்று கேட்டார், பேரணியின் அமைப்பாளர் ஜிக்னேஷ் மேவானி. ‘ஜமாய்த் உல்மா-இல்-இந்த்’ என்ற இஸ்லாமிய அமைப்பு பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
இதற்கிடையே ‘உனா’ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷம் குடித்த தலித் இளைஞர் அகமதாபாத் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவரைத் தவிர, வேறு மூன்று தலித் இளைஞர்கள் விஷமருந்தியதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் தலித் மக்களின் புரட்சிகர முடிவு மாநிலம் முழுதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. “குஜராத் காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உனா – வன்முறை தாக்குதலை விசாரிக்கும் புலனாய்வுப் பிரிவுதான், தங்காத் என்ற இடத்தில் 4 தலித் தோழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கையும் விசாரித்தது. ஆனால் நீதி கிடைக்கவில்லை. ‘இஷ்ராத் ஜஹான்’ போலி என் கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தலைமை காவல்துறை இயக்குநரிடம்தான் தலித் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை புலனாய்வுத் துறை அளித்திருக்கிறது. எங்களுக்கு நீதி கிடைக்காது” என்கிறார் பேரணி அமைப்பாளர் மேனாவி. செத்த மாட்டுத் தோலை உரித்த இளைஞர்களை தாக்கிய வழக்கில் பசு பாதுகாப்பாளர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் இனப் படுகொலையில் மோடி ஆட்சிக்கு எதிராக துணிவுடன் சாட்சியமளித்த முன்னாள் அய்.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மாவும் இப்போது தலித் மக்களுக்கு ஆதரவாக அகமதாபாத்திலிருந்து உனா வரை பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
பெரியார் முழக்கம் 04082016 இதழ்