மதத்தை அரசியலாக்காதே; மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்காதே! பெரியார் கைத்தடி ஊர்வலம்
- பதட்டத்தை உருவாக்கக்கூடிய விநாயகன் சிலை ஊர்வலம் என்பது மத ஊர்வலம் அல்ல; மதத்தின் பெயரால் நிகழும் அரசியல் ஊர்வலம்.
- சென்னை நகரில் ‘மிலாது நபி’ ஊர்வலம் இஸ்லாமிய அமைப்புகள் நீண்டகாலம் நடத்தி வந்தன. அமைதியாக மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் நடந்து வந்தது. இதற்குப் போட்டியாக மதவாத அரசியல் சக்திகள் ‘விநாயகன்’ சிலை ஊர்வலத்தை அதற்குப் பிறகுதான் தொடங்கின.
- தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த ஊர்வலங்களால் பதட்டம் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க இரண்டு ஊர்வலங்களையும் தவிர்த்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆட்சியின் கோரிக்கையையேற்று, இஸ்லாமியர் அமைப்புகள் மீலாது நபி ஊர்வலத்தைக் கைவிடுவதாக அறிவித்தன. அது முதல், நபிகள் நாயகம் பேரணி, சென்னையில் நடக்கவில்லை. ஆனால், விநாயகன் ஊர்வலத்தை கைவிட மதவாத அரசியல்வாதிகள் மறுத்து விட்டனர்.
- 1996இல் பெரியார் திராவிடர் கழகம் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் சிலை ஊர்வலம் நடக்கும் என அறிவித்தது. தி.மு.க. ஆட்சி, இரு ஊர்வலங்களுக்கும் அனுமதி மறுத்து, பகுதி பகுதியாக விநாயகன் சிலைகளை மட்டும் எடுத்துச் சென்று கரைக்க அனுமதித்தது. ஒரே ஊர்வலமாக ‘அலம்பல்’ நடத்தும் முறைக்கு கடிவாளம் போடப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, பகுதி பகுதியாக விநாயகன் ஊர்வலம் நடத்த அனுமதியே தந்துவிட்டது. இப்போது விநாயகன் ஊர்வலங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மீலாது நபி ஊர்வலம் முடங்கியது.
- 2004 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் இராசயன பூச்சு பூசப்பட்டு, விநாயகன் சிலையை கடலில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதை சுட்டிக் காட்டி வழக்கு தொடர்ந்தது. இரசாயன சிலைகளை கரைக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. கடலில் 500 மீட்டர் தொலைவில்தான் சிலைகளை கரைக்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்று விநாயகன் சிலைகள் தயாரிக்கப்படுவது இல்லை; வண்ணப்பூச்சுகளில் இரசாயனம் கலக்கப்படுகிறது. காவல்துறை அவற்றை கண்காணிப்பதும் இல்லை.
- பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு ஒரு சில இடங்களில் மட்டுமே ‘கெடுபிடி’ களுடன் அனுமதி தரும் காவல்துறை, விநாயகன் சிலை ஊர்வலங்களுக்கு மட்டும் விதிகளை மீறி சிலைகளை வைக்க அனுமதித்தது.
- குஜராத்திலிருந்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கோயில்களை அகற்றிட வேண்டும் என்று கூறியுள்ளதோடு, மாநில அரசுகளிடம் நடைபாதைக் கோயில்கள் பற்றிய விவரங்களைக் கேட்டது. தமிழ்நாட்டில் 70,000 கோயில்கள் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவலை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், அந்தக் கோயில்களை அகற்ற உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை செய்த பிறகும் எந்த நடவடிக்கையும் தமிழக ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை.
- விநாயகன் சிலை ஊர்வலம் சென்னையில் இஸ்லாமியர் மசூதி பகுதி வழியாகவே போக வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் இராம. கோபாலன் ஊர்வலம் நடக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார். அவரை சில மணி நேரம் தடுத்து வைத்து பிறகு விடுதலை செய்வதை ஆட்சியாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வழக்குகள் பதிவு செய்வதில்லை.
- வீடுகளுக்குள் பக்தர்கள் நடத்தும் ‘விநாயகன் வழிபாடு’ அவர்களுக்கான உரிமை. ஆனால், வீதிகளில் நடக்கும் இந்த ஊர்வலம் மத நிகழ்வு அல்ல; மத வெறி அரசியலை மதத்தின் போர்வையில் திணித்து, பதட்டத்தை உருவாக்கும் முயற்சியேயாகும். இந்த ஊர்வலங்களை நடத்துவதும் வெவ்வேறு இந்து மத அரசியல் அமைப்புகளே! வீதிகளில் காட்சிப் பொருள்களாக நிறுத்தப்படும் இந்த வண்ண வண்ண விநாயகன் உருவங்கள், கோயில்களில் உள்ளதைப்போல் பார்ப்பன புரோகிதர்கள் ‘வேத மந்திரம்’ ஓதி, ‘சக்தி’யூட்டப்பட்டவை அல்ல என்பதாலும், நமது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உருவாக்கிய சிலைகள் என்பதாலும் அவைகளை நீரில் மூழ்கடித்துவிட வேண்டும் என்று கூறி – அதற்கு ‘விசர்ஜனம்’ என்று பெயர் சூட்டி விட்டார்கள். இப்படி ஒரு அவமானத்தை நாமே போய் தேடிக் கொள்ளலாமா என்று சிலைகளை நிறுவும் நமது மக்களான, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே நமது உரிமையான வேண்டுகோள்!
மதத்தின் பெயரால் சமூகத்தில் பதட்டத்தையும் கலவரத்தையும் திணிக்கும் மத அரசியலையும் அதில் அடங்கியுள்ள சட்ட மீறல், சுற்றுச் சூழல்கேடு, தமிழின இழிவுகளையும் மக்களுக்கு எடுத்துரைத்து எதிர்ப்பைப் பதிவு செய்வதை சமுதாயக் கடமையாகக் கருதுகிறோம்.
எந்தப் பெரியார் – இந்த இழிவுகளுக்கு எதிராக தமிழினத்துக்காகப் போராடினாரோ அந்தப் பெரியாரின் கைத்தடியை குறியீடாக்கி, பெரியார் கைத்தடிகளுடன் திராவிடர் விடுதலைக் கழகம் ஊர்வலமாகப் புறப்படுகிறது!
நாள் : 11.09.2016, ஞாயிறு மாலை 4 மணி
திருவல்லிக்கேணி அய்ஸ்அவுஸ் மசூதி அருகிலிருந்து.
தலைமை : பால். பிரபாகரன்
(திராவிடர் விடுதலைக் கழக பரப்புரைச் செயலாளர்)
முன்னிலை: இரா. உமாபதி
(சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர்)
அணி அணியாய் திரண்டு வாரீர்!
பெரியார் முழக்கம் 08092016 இதழ்