‘பேய்’ எனும் ‘மூடநம்பிக்கை’
ஒரிசா பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாநிலம். மயூர்மஞ்ச் மாவட்டத் தில் பழங்குடி மக்களிடையே பேய், பிசாசு, சூன்ய நம்பிக்கைகள் தலை விரித்தாடுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ‘பேய் பிடித்தவள்’, ‘சூன்யக்காரி’ என்று அறிவித்து 47 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் பழங்குடி மக்களிடையே இந்த மூட நம்பிக்கை களுக்கு எதிராக பகுத்தறிவாளர்களைக் கொண்டு பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வருகிறது. ‘சூன்யக்காரி’ தங்கள் பகுதியில் வாழ்வதால் பல தீங்குகள் வருவதாக மக்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டிலும் பல கிராமங்களில் இதே போன்ற மூட நம்பிக்கைகள் இருக்கின்றன.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக வாழ் நாள் முழுதும் பேராடியவர் மறைந்த டாக்டர் கோவூர். இலங்கையைச் சார்ந்த மனநல மருத்துவர். பேய், பில்லி, சூன்யம், ஆவி மோசடிகளை அம்பலப்படுத்தியவர். சென்னையில் பல முறை மூடநம்பிக்கைக்கு எதிரான பரப்புரைகளை செய்தவர். ‘மந்திர வாதி’களால் ஏமாற்றப்பட்டு, பிறகு தன்னிடம் மனநல சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் கதைகளை அவர் பதிவு செய்திருக் கிறார். திராவிடர் கழகம், சூலூர் பாவேந்தர் பேரவை போன்ற அமைப்புகள் கோவூர் கட்டுரைகளை நூலாக வெளி யிட்டிருக்கின்றன. அதிலிருந்து ஒரு கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.
1973ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது. கேரளாவிலிருந்து கொழும்பில் குடியேறிய ஒரு குடும்பத்தைச் சார்ந்த மேரி என்ற பெண்ணுக்கு ‘பேய்’ பிடித்துவிட்டதாக நம்பினார்கள்.
ஒரு நாள் தோட்டத் தொழிலாளி ஒருவர் நடுங்கிப் போய் ஓடிவந்து மேரியிடம் ‘மாடசாமி’ எனும் பேய் தன்னை துரத்துகிறது; முதுகில் அடித்தது என்று கூறினார். உடனே மேரியின் சகோதரர் ஒருவர், கையில் ஒரு வாளை எடுத்துக் கொண்டு ஓடினார். அங்கே இருட்டில் ஒரு பெரிய உருவம் நிற்பதுபோல் தோன்றி யது. பயந்து போய் திரும்பி விட்டார். மீண்டும் திரும்பியிருந்தபோது உருவம் மறைந்துவிட்டது.
அடுத்த நாள் மலையாள மந்திர வாதி ஒருவர் அழைக்கப்பட்டார். அவர் ‘மை’ போட்டு பார்த்தார். குடும் பத்துக்கு சொந்தமான தோட்டத்தில் பழைய முதலாளியின் ‘ஆவி’ நடமாடு கிறது என்றும், அதுதான் அச்சுறுத்து கிறது என்றும் கூறினார்.
பேயை விரட்ட ‘மந்திரவாதி’, மேரியின் வீட்டில் பூஜை போட்டார். ‘பூஜை’ நடந்து கொண்டிருக்கும் போதே, வீட்டிலிருந்த இரண்டு பெண்கள் ‘சாமி’ வந்து ஆவேசமாக ஆடினார்கள். உடனே சேவல், கோழி பலி கொடுக்கப்பட்டது. உடனே ‘சாமியாட்டம்’ நின்று விட்டது.
கடைசியில் மந்திரவாதி ஒரு ‘கண்டுபிடிப்பை’ வெளியிட்டார். அந்த குடும்பத்தினர் குடியிருந்த வீட்டின் அடித்தளத்தில் ‘நீலக்கல்’ ஒன்று புதையுண்டு கிடக்கிறது. அதை எடுத்துவிட்டால் ‘பேய்’ ஓடிவிடும் என்றார். பல ஆயிரம் செலவிடப் பட்டு, ‘நீலக்கல்’ தேடும் படலம் தொடங்கியது. அப்படி எந்தக் கல்லும் கிடைக்கவில்லை. ‘மந்திரவாதி’ முயற்சிகள் தோல்வி அடைந்தன.
அடுத்த சில நாட்களில் மேரி, ‘பேய்’ ஆட்டம் போட்டார். “நான் அகோர பத்ரகாளி” என்று கூச்சலிட் டார். இப்போது ஒரு கிறிஸ்துவ பாதிரியார் வந்தார். அவர் ஆசீர்வாதம் வழங்கி அறைகளில் ‘புனித’ நீரை தெளித்தார். பிறகு வீட்டை மாற்றினார்கள். ‘மேரி’யின் நிலை மேலும் மோசமானது. அடிக்கடி மயங்கி விழுந்தார். பயங்கர சத்தத்துடன் ஏப்பம் விடுவார். தேவாலயத்துக்கு அடிக்கடி ‘பிரார்த்தனை’க்கு அழைத்துப் போனார்கள். தொடர்ந்து குடும்பத்துக்குள் மேரியின் தம்பி இறந்தார். மேரிக்கு வயது 27. அவருக்கு திருமணம் ஆகாதோ என்று குடும்பத்தினர் அஞ்சினர். கடைசியாக டாக்டர் கோவூரிடம் அழைத்து வந்தனர்.
“மேரியின் நடவடிக்கைகளுக்கு பேய், நீலக்கல், மந்திரம் எதுவுமே காரணமில்லை. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் மேரியைப் பிடித்திருக்கிறது” என்றார் கோவூர்.
“பயம் காரணமாகவே எல்லாப் பிரச்சினைகளும் தலைதூக்கியிருக்கின்றன. தொழிலாளி மாடசாமி என்ற பேயைக் கண்டதாகக் கூறிய சம்பவமும், மலையாளிக்கு உரித்தான பாணியில் அடிக்கடி ‘அகோர பத்ரகாளி’ என்ற பேயைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததுமே இந்தப் பரிதாபத்துக்கு மேரி ஆளாகக் காரணமாகும்.”
“மேரியின் சகோதரரும் கற்பனையில் தான் மாடசாமியைக் கண்டிருக்கிறார்.”
“மலையாள மாந்திரீகர் தான் மேரியின் கோளாறை அதிகரிக்கச் செய்தவர். மேலும், மேரி ஏப்பமிடுவதை நான் அவதானித்தேன். அவர் ஏப்பமிடுவதை செயற்கையாகவே செய்கிறார். அது இயற்கையாக வரும் ஏப்பம் இல்லை.”
இப்படி விளக்கமளித்த கோவூர், மேரியைத் தன்னால் குணப்படுத்த முடியும் என்றார்.
ஆனால், இதற்குமுன் அந்த குடும்பத்தவர் தனக்குச் சில வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் என்றார்.
இனிமேல் எந்த மாந்திரீகரிடமும் செல்லக்கூடாது. மேரிக்குத் தொடர்ந்து இவ்வியாதி ஏற்படுமானால், மனோ வைத்திய நிபுணரைத்தான் கலந்தாலோசிக்க வேண்டும். இனிமேல் மேரியின் முன்னிலையில் பேய், பிசாசு, மந்திரம், மாயம் என்ற கதைகளையே பேசக் கூடாது.
இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே தன்னால் மேரியைக் குணப்படுத்த முடியும் என்றும் கோவூர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
குடும்பத்தினர் இதற்குச் சம்மதித்தனர். உடனே மேரியை மேலே அழைத்து வரும்படி கூறிய கோவூர், மேரி வந்ததும் தனது மனைவியின் உதவியுடன் அவரை ஹிப்னாட்டிஸ் (ஆழ் மனநிலைக்கு உள்ளாக்குதல்) செய்தார்.
ஹிப்னாட்டிஸ் மூலம் மேரியின் உள்ளுணர்வுகளுக்கு தைரியம் கூறினார் கோவூர்.
இதன் பின் “இப்பொழுது ‘அகோர பத்ரகாளி’ உன்னைக் கடைசி முறையாகப் பிடித்துக் கொள்ளும்” என்று கோவூர் மேரியின் செவிகளில் ஓதினார்.
அடுத்த வினாடி பயங்கரமாக ஏப்பமிட்ட மேரி துள்ளிக் குதித்துக் கொண்டு எழுந்தாள்.
கோவூரின் மனைவி அவளை அந்நேரம் பிடித்துக் கொண்டிருக்காவிட்டால் மேரி கீழே விழுந்திருப்பாள்.
இச்சமயம் கோவூர், “அகோர பத்ரகாளி உன்னை விட்டுப் போகிறது” என்றார். அதோடு மேரி அமைதியானாள். இதன் பின்பு கோவூர் பல ஆலோசனைகளை வழங்கி, மேரியை நித்திரையிலிருந்து எழுப்பிவிட்டார்.
சிரித்த முகத்துடன் கீழே இறங்கி வந்த மேரியைப் பார்த்ததும் சூசை தம்பதியரும், தோமஸூம் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
பத்து வருடங்களாக சோகத்தையே அனுபவித்த அந்த உள்ளங்கள் அன்றுதான் முதன்முதலாகக் கவலையை மறந்து சிரித்தன.
ஒரு மாந்திரீகரால் ஒரு குடும்பமே அழிந்துவிடும் நிலை உருவாகியது கண்டு கோவூர் வருந்தினார்.
குடும்பம் பெல்மதுளையில் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வருகிறது.
பெரியார் முழக்கம் 26052016 இதழ்