ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

இந்தியாவின் தலைநகரில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அரசு அதிகாரத் திமிருடன் மதவாதம் படை எடுக்கிறது. மாணவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கடந்த பிப்.9 ஆம் தேதி இந்தியாவின் ஆளும் பார்ப்பன ஆதிக்க சக்திகளால் முறைகேடாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு நாளில் தூக்குத் தண்டனைக்கு எதிராகவும்  இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் காஷ்மீர் மக்களுக்காகவும் மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அவ்வளவுதான். மாணவர் தலைவர் கன்யாகுமார் உள்ளிட்ட

5 மாணவர்கள் மீது ‘தேச விரோத சட்டம்’ பாய்ந்தது.  கன்யாகுமார் என்ற புரட்சிகர சிந்தனையை ஏற்றுக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வந்த இளைஞர். கன்யாகுமார் பிணையில் வெளிவந்த பிறகும் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த மாணவர்களை விட்டு வைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைமை, பல்கலைக்கழகங்களில் ‘இந்துத்துவா’ வுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது என்று மோடி ஆட்சிக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்  வெளிப் படையாகவே எச்சரித்தார்.

மாணவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய மனித வளத் துறை அமைச்சகம் முடுக்கி விட்டது. பிப்.9 ஆம் தேதி என்ன நடந்தது என்பதை விசாரிக்க 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நிய மித்தார்கள். குழுவினர் அனைவருமே இந்துத்துவா ஆதரவாளர்கள். குழுவின் பரிந்துரைகள் மிகவும் கொடூரமானவை. செமஸ்டர் தேர்வுகளை எழுத அனுமதிக்கக் கூடாது; பிஎச்.டி. ஆய்வை சமர்ப்பிக்க அனுமதி இல்லை; வளாகத்துக்குள் நுழைய அனுமதி இல்லை; கன்யாகுமார் உள்ளிட்ட 14 மாணவர் களுக்கு ரூ. 10,000லிருந்து ரூ.20,000 வரை அபராதம் என்று குழு ஆணையிட்டது. இந்த அடக்கு முறைகளை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு வித தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஏதோ பல்கலைக்கழகத்துக்காகவே தனியாக ஒரு குற்றவியல் சட்டம் இருப்பதுபோல இவர்களே கருதிக் கொண்டு செயல்படுவதை மாணவர்கள் ஏற்கவில்லை. அதே நேரத்தில் விசுவ இந்து பரிஷத் மாணவர்கள் வளாகத் துக்குள் நடத்திவரும் அத்துமீறல்கள், வன்முறைகள் தொடர்கின்றன. இஸ்லாமிய மாணவர்களை தாக்கி யுள்ளனர். நர்மதா விடுதிக்குள் சாராயத்தை ஊற்றினார்கள். மாணவர் சங்கத் தேர்தல்களில் மாணவர்களை தாக்கினார்கள். கன்யாகுமார் மீது செருப்பு வீசினார்கள். இவர்களின் அடாவடி வன்முறை நடவடிக்கைகள் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

அடக்குமுறைகளை எதிர்த்து, ‘டார்ச் லைட்’ (கை ஒளி விளக்கு) பேரணி, உண்ணாவிரதப் போராட்டம் என்று மாணவர்கள் பல்வேறு வடிவங்களில் அற வழியில் போராடுகிறார்கள். போராடும் இடத்துக்கு மாணவர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சுதந்திர சதுக்கம்’ (குசநநனடிஅ ளுளூரயசந). மாணவர்கள் போராட்டத்துக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 120 பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் 180 பேர் இந்தப் போராட்டங் களில் பங்கெடுத்தனர். பீகார், கல்கத்தா பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. ‘இந்துத்துவ பார்ப்பனியத்துக்கு எதிரான மாற்று அரசியலை முன்னெடுப்போம்’ என்ற முழக்கங்களையே மாணவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

உடலில் பெரும் பகுதி செயலிழந்த நிலையிலும் மனித உரிமைக்காகப் போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமைப் போராளி பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் துணைவியார் வசந்தகுமாரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகிறார். (ஜி.என். சாய்பாபாவுக்கு அண்மையில்தான் பிணை கிடைத்திருக்கிறது) கன்யாகுமாருக்கு விதித்துள்ள அபராதத் தொகையை மும்பையில் கூலித் தொழிலாளர்கள் நன்கொடையாகத் திரட்டி அனுப்பி வைத்துள்ளனர். உறுதிகுலையாத அடக்கு முறைகளை எதிர்த்து நிற்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை ‘தேசவிரோதிகள்; பிரிவினைவாதிகள்; பயங்கரவாதிகள்’ என்ற தலைப்பில் 200 பக்க அறிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நூலாக அச்சடித்து பரப்பி வருகிறது. காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும் தலித் மாணவர்களும் இணைந்து தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் வளாகங்களில் மாட்டிறைச்சி உணவுத் திருவிழாக் களை நடத்துவதாகவும் அந்த அறிக்கை குற்றம்சாட்டு கிறது. காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களும் ‘இந்துத்துவா’வின் தேச வரைபடத்துக்குள் இடம் பெறவில்லை என்று மதவாத பார்ப்பனியம் முடி வெடுத்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. இங்கிலாந்து தலைநகர் இஸ்லாமியர் ஒருவரை மேயராக தேர்வு செய்கிறது. இந்தியாவின் தலைநகரம் டெல்லியிலோ – தலைநகருக்கு வரலாற்றுப் பெருமை யை சேர்த்து வரும் ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் மதவெறி இந்துத்துவா கொள்கையை ஏற்க மறுக்கும் மாணவர்களை அரசு ஒடுக்குகிறது.

பெரியார் முழக்கம் 19052016 இதழ்

You may also like...