‘அட்சய திருதியை’ சிறப்பு வினா-விடை!

‘அட்சய திருதியை’ நாளில் தங்கம் வாங்கினால், அது மேலும் மேலும் பெருகும்.  – நகைக்கடை விளம்பரங்கள்

                அப்படின்னா, கடைக்காரங்க தங்கத்தை வாங்கத் தானே வேண்டும்! ஏன், கூவிக் கூவி விக்குறாங்க?

‘அட்சயம்’ என்றால், ‘வளரும்’ என்பது அர்த்தம். தங்கம்தான் வாங்க வேண்டுமென்பது அல்ல, எதை வாங்கினாலும் வளரும்.              – செய்தி

                அப்ப இந்தியா, உலக வங்கியிடம் கடன் வாங்குவதற்கும் அதுதான் உகந்த நாள்ன்னு சொல்லுங்க!

‘அட்சய திருதியை’ நாளில் ஒவ்வொரு நொடியும் புனிதமானது. தனியாக முகூர்த்த நேரம் பார்க்க வேண்டியதில்லை.          – செய்தி

                ஆமாம்! வர்த்தக நலன் கருதி அன்றைக்கு ‘ராகு காலம்’, ‘எமகண்டம்’ எல்லாம் ‘தள்ளுபடி’!

வைகாசி மாதத்தில் வளர்பிறை மூன்றாம் திதியில் வருகிற திருதியைதான் உண்மை அட்சய திருதியை திருநாள். இந்த நாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்து விட்டால், நன்மை பயக்காது என்பதற்காக, அது சித்திரை மாத வளர்பிறை நாள் திருதியைக்கு மாற்றப்பட்டு, அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.       – குமார சிவாச்சாரியார் கட்டுரை

                போச்சுடா. அனுசரிக்கப்படும் ‘அட்சய திருதியை’ நாளே ‘டுபாக்கூர்’ தானா?

இந்த நாளில் மூதாதையர்களுக்கு வேத பண்டிதர்களை அழைத்து, ‘திதி’, ‘தர்ப்பணம்’ செய்வது நல்லது. – செய்தி

                அப்போதுதானே, ‘திதி’, ‘தர்ப்பணம்’ தொழிலும் வளரும்; நல்ல யோசனைதான்!

அட்சய திருதியை நாளில் வெயில் கொடுமைதீர, குடை விசிறி, காலணி வழங்கினால், இன்ப வாழ்வு உண்டாகும்.            – செய்தி

                சொல்றதுதான் சொல்றீங்க… ஒரு ‘ஏர்கண்டிஷனர்’, ஒரு ‘கூலிங் கிளாஸ்’ன்னு சொல்லக் கூடாதா?

அட்சய திருதியையில் தங்கம், பசுமாடு மற்றும் தானியங்களை தானம் தரவேண்டுமே தவிர, விற்பனை செய்யக் கூடாது எனக் கூறுகிறது, ‘பவிஷ்ய புராணம்’.     – செய்தி

                அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. விற்பனை தள்ளுபடி 5 சதவீதம் என்பதை ‘தானம்’ 5 சதவீதம் என்று மாற்றிக் கொள்ளலாம்.

ஆலம் இலையில் ‘மிருத்யுஞ்சய’ மந்திரத்தை ஜெபித்து, வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும்; எதிரிகள் தொல்லை நீங்கும்.               – செய்தி

                ஆமாம்! திருட்டு பயமும் இருக்காது; ‘இன்சூரன்சும்’ தேவையே இல்லை.

இந்து இதிகாசப்படி – ‘அட்சய திருதியை’ நாளில் தான் வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளை யிட்டார்.         – செய்தி

                அப்ப, மகாபாரதத்துக்கு ‘காப்பி ரைட்’ விநாய கனுக்குத் தானா? வியாசருக்கு இல்லையா?

‘அட்சய திருதியை’யன்று குழந்தைத் திருமணம் நடத்த முயன்ற 6 பெற்றோர்கள் ராஜஸ்தானில் கைது.       – செய்தி

                இந்த நல்ல நாளில் கைதாகி சிறைக்குப் போவது பெரும் ‘பாக்கியம்’. அதற்கெல்லாம் ‘கொடுத்து வைத்திருக்கணும்’!

பூமியில் சத்திரிய அரசர்களையெல்லாம் அழிப்பதற்கு விஷ்ணு பகவான் கையில் கோடாலியுடன் (வெட்டும் கருவி) பரசுராமனாக ‘அவதரித்தது’ – இந்த நாளில்தான்.                 – செய்தி

                அப்ப, பயங்கரவாதத்துக்கும் இதுதான் ‘புனித நாள்’ன்னு சொல்லுங்க!

வறுமையில் வாடிய குசேலன், கிருஷ்ண பகவானுக்கு அன்புடன் வழங்கிய ‘அவல்’ உணவை பகவான் சாப்பிட குசேலன் வீட்டுக் கூரை, தங்கக் கூரையாக மாறியது.                – செய்தி

                பரவாயில்லையே! தங்கமே கண்டுபிடிக்காத காலத்திலேயே அதை இறக்குமதி செய்து பகவான் கூரையாகவே போட்டாரா? வளர்ச்சியிலே மோடியையே மிஞ்சிட்டாரு போங்க!

அட்சய திருதியை நாளில் தான் உணவு கட வுளான ‘அன்னபூரணி’ அவதரித்தாள்! – செய்தி

                அப்படியா? இது ஓட்டல் முதலாளிகளுக்கு தெரிஞ்சா, அவர்களும் ‘தள்ளுபடி’ வியாபாரத்தை தொடங்கிடுவாங்களே!

                (செய்திகளுக்கு ஆதாரம் : புராண புரட்டுகளை செய்தி கட்டுரைகளாக்கி, ‘அட்சய திருதியை’ நாளில் வாசகர்களுக்கு விற்பனை செய்து வியாபாரத்தைப் பெருக்கிய தமிழ்நாளேடுகள்)

பெரியார் முழக்கம் 12052016 இதழ்

You may also like...