அறிவியல் வழியாக நிரூபணம் ‘பிரார்த்தனை’ எந்தப் பயனும் தராது

‘எனக்காக – எனது நோய் தீர்வதற்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ – இது நோயாளிகளைப் பார்க்க வருவோரிடம் நோயாளிகள் வைக்கும் கோரிக்கை. “செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து முடித்து விட்டோம்; இனி நம் கையில்  எதுவும் இல்லை; எல்லாம் ஆண்டவனிடம் தான்” – இதுவும் வழக்கமாக கேட்கப்படும் உரையாடல்கள்.

பல மருத்துவர்கள் – அறுவை சிகிச்சையை முடித்த பிறகு, “சிகிச்சை வெற்றி பெற்றுவிட்டது; ஆனாலும் இறுதி முடிவு ஆண்டவனிடம்தானே!” என்று கூறுவது அவர்களுக்கான பாதுகாப்பு. அறுவை சிகிச்சை தோல்வி அடைந்து விட்டால் பழியை ஆண்டவன் மீது போட்டு தப்பித்துக் கொள்ளும் தந்திரம்தான்!

‘பிரார்த்தனை’யால் நோய் தீருமா? ‘பிரார்த்தனை’யால் பலன் கிடைக்குமா?

‘பிரார்த்தனை’ என்பது ஒரு மூட நம்பிக்கைதான். பிரார்த்தனைகளில் நம்பிக்கை உள்ள குடும்பங்களுக்கு கடவுள் ஏன் நோயைத் தரவேண்டும்? நோயைத் தராமலே இருந்திருக்கலாம் அல்லவா? கடவுள் நோயைத் தருவார்; பிறகு அதைத் தீர்க்க அதே கடவுளிடம் ‘பிரார்த்தனை’ செய்ய வேண்டும் என்றால், உடனே இது எந்த ஊர் நியாயம்? என்று திருப்பிக் கேட்கத் தோன்றுகிறதா, இல்லையா? ஆனால் அப்படி பலரும் கேட்க மாட்டார்கள். காரணம், அது பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட நம்பிக்கை.

சரி; ‘பிரார்த்தனை’ நோய் தீர்க்குமா? என்ற கேள்விக்கு ‘தீர்க்காது’ என்று ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் ஒரு சில வரலாற்று செய்திகளை பார்ப்போம்.

உயிரின் பரிணாம வளர்ச்சியை அறிவியல்பூர்வமாகக் கண்டறிந்து, உலகுக்கு அறிவித்த விஞ்ஞானி டார்வின். அவரது நெருங்கிய நண்பர் ஃபிரான்சிஸ் கால்டன். அவர் ‘பிரார்த்தனை’ பயன் தருமா? என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பிரிட்டிஷ் இளவரசர் குடும்பம் நலம் பெற வேண்டும் என்பதற்காக அந்த நாட்டிலுள்ள சர்ச்சுகளில் கூடும் அவ்வளவு பேரும் பிரார்த்தனை செய்தார்கள். மற்ற குடிமக்களோ தங்களின் குடும்ப நலன்களுக்காக தாங்களோ அல்லது உறவினர்களோ மட்டுமே ‘பிரார்த்தனை’ செய் கிறார்கள். அரச குடும்பத்துக்காக நாடே செய்யும் ‘பிரார்த்தனை’ ஏனைய தனிநபர் பிரார்த்தனைகளைவிட வலிமையாக இருந்திருக்கிறதா? பயன் தந்திருக்கிறதா? அதற்காக கள ஆய்வுகளில் இறங்கி புள்ளி விவரங்களை சேகரித்து ஆராய்ந்த போது இரண்டு ‘பிரார்த்தனை’ களுக்கும் வேறுபாடுகள் இருப்பதை புள்ளி விவரங்கள் நிரூபிக்கவில்லை.

அதன் பிறகு சில வயல்வெளிகளை தேர்வு செய்து அங்கே வளரும் பயிர் களுக்காக ‘பிரார்த்தனை’ செய்தார். பயிர்கள் செழித்து, விரைவாக வளருகிறதா என்பதை அறிவதற்கான முயற்சி; ‘பிரார்த்தனை’களால் அப்படி ஒன்றும் வளரவில்லை என்பதை கண்டறிந்தார்.

இதேபோல் பிரிட்டனில் தலை சிறந்த மத சிந்தனையாளர்களாக கருதப்படும் மூவரில் ஒருவர் ரஸ்ஸல் ஸ்டன்னார்டு இயற்பியல் விஞ்ஞானியான அவர் ‘பிரார்த்தனை’ பயன் தருகிறதா என்பதற்கு ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

அமெரிக்காவின் பாஸ்டன் மருத்துவமனையில் புகழ் பெற்ற இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஹெர்பர்ட் பென்சன். ‘மருத்துவ சிகிச்சை வெற்றி பெறுவதற்கு பிரார்த்தனைகள் நல்ல பயனைத் தருகின்றன’ என்பது இவரது நம்பிக்கை. தனது நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்த அவர் திட்டமிட்டார். இது மிகப் பெரும் ஆய்வு. இந்த ஆய்வுக்கு ‘டெம்பிள்டன்’ அறக்கட்டளை 24 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்ய முன் வந்தது. இந்த ஆய்வு குறித்து பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வில் மத நம்பிக்கையுள்ளவர்கள் மட்டுமே பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டனர். ஆறு மருத்துவமனைகளில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தயாராக இருந்த 1802 நோயாளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.  அவர்கள் மூன்று பிரிவினர்களாக படுக்க வைக்கப்பட்டனர். முதல் பிரிவினருக்காக தனித்தனியாக அவர்களுக்கு குறியீட்டுப் பெயர்கள் தந்து பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. ஆனால் தங்களுக்காக ‘பிரார்த்தனை’ நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. இரண்டாவது பிரிவு நோயாளிகளுக்காக ‘பிரார்த்தனை’ ஏதும் நடத்தப்படவில்லை. தங்களுக்காக ‘பிரார்த்தனை’ ஏதும் நடக்கவில்லை என்பது இவர்களுக்கு தெரியாது. மூன்றாவது பிரிவினருக்கு ‘பிரார்த்தனை’கள் நடத்தப்பட்டன. தங்களுக்காக ‘பிரார்த்தனை’கள் நடப்பதை அவர்கள் அறிவார்கள். ‘பிரார்த்தனை’ நடத்தப்பட்டவர்களுக்கும் நடத்தப்படாதவர் களுக்கும் ஒப்பீடு செய்வதே இதன் நோக்கம். தங்களுக்காக பிரார்த்தனை நடக்கிறது என்பதை ஒரு நோயாளி அறியும்போது அதனால் ஏற்படும் மன அழுத்தத்தைக் கண்டறிவதற்கே மூன்றாவது அணி.

மூன்று சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் பிரார்த்தனைகளை செய்தனர். ஒரு சர்ச் மின்னசோடாவிலும், மற்றது மாசூசெட்சிலும் மற்றது மிசோரியிலும் இருந்தன. இவை அனைத்தும் மூன்று மருத்துவமனைகளிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. பிரார்த்தனைக்கு உரிய நோயாளியின் முதற்பெயரும் குடும்பப் பெயரின் முன்னெழுத்தும் தரப்பட்டிருந்தன. (இங்கே அர்ச்சனைக்கு பார்ப்பனர்களிடம் பெயர், நட்சத்திரம் கொடுக்கும் அதே கதைதான்) ஆய்வுகள் தரமாகவும் துல்லியமாகவும் நடந்தன. “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிய வேண்டும். சிக்கல்கள் இன்றி விரைந்து நலம் பெற வேண்டும்” என்பதே ‘பிரார்த்தனை’.

ஆய்வின் முடிவுகள் என்ன? ‘பிரார்த்தனை’ செய்யப்பட்ட நோயாளிகளுக்கும் செய்யப்படாதவர்களுக்குமிடையே எந்த வேறுபாடும் இல்லை. அதாவது ‘பிரார்த்தனை’க்காக பலன் ஏதும் கிடைக்கவில்லை. ‘பிரார்த்தனை’ செய்யப்படாமைக்காக ‘தீங்கு’ ஏதும் நிகழவில்லை. ஆனால், தங்களுக்காக ‘பிரார்த்தனை’ நடந்தது என்பதை தெரிந்தவர்களுக்கும் ‘பிரார்த்தனை’ பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கும் இடையே வேற்றுமை காணப்பட்டது. ‘பிரார்த்தனை’ நடப்பதாக அறிந்தவர்களுக்கு அறியாதவர்களைவிட அதிக சிக்கல்கள் நிகழ்ந்தன. தங்களுக்காக ‘பிரார்த்தனை’ நடத்தப்பட்டதாக அறிந்த நோயாளிகள், விளைவு என்னவாகுமோ என்று கூடுதல் மன அழுத்தத்துக்கு உள்ளானார்கள். “அய்யோ, டாக்டரே எனக்காக பிரார்த்திக்கிறாரே; அப்படியானால், எனது வியாதி மிகவும் ஆபத்தானதோ” என்ற கூடுதல் அச்சம் அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கலாம் என்று உளவியல் மருத்துவ ஆராய்ச்சியாளர் சார்லஸ் வெத்யா கூறினார்.

அமெரிக்க ஆய்வு இதழ் (ஹஅநசiஉயn ழநயசவ துடிரசயேட) ஏப்.2006இல் இந்த ஆய்வு பற்றிய விரிவான செய்திகளை பதிவு செய்தது.

மதம் கட்டமைத்த நம்பிக்கை சரிந்து வீழ்ந்துவிட்டதே என்று பதறிய மதவாதிகள், இப்படி ஆய்வு நடத்தப்பட்டதை எதிர்த்து கண்டனம் தெரிவித்தார்கள்.

ஆய்வை நடத்தியது முழுக்க முழுக்க மத நம்பிக்கையாளர்கள் ஆய்வு குறித்து முன்கூட்டியே விளம்பரம் செய்யப்பட்டது. அப்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், முடிவுகள் – தங்கள் முகத்திரையைக் கிழித்தெறியும்போது துள்ளி குதித்தார்கள்.

‘பிரார்த்தனை’ எந்தப் பயனையும் தராது; காலம் முழுதும் சடங்குகளிலும் ‘பிரார்த்தனை’களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் சங்கராச்சாரிகளே மரணத்தைத்தான் தழுவுகிறார்கள். வேண்டுமானால், அவர்களை முக்தி அடைந்தார்கள் என்றும், மற்றவர்களை காலமானார்கள் என்றும் கூறிக் கொள்ளலாம்; அவ்வளவுதான்!

ஆதாரம்: ரிச்சர்ட் ஹாக்கின்ஸ் எழுதிய “கூhந ழுடின னுநடரளiடிn” நூல்.

 

You may also like...