வேத மரபு மறுப்பு மாநாடு – ஏன்?
வேதங்களை பார்ப்பனர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அதை அச்சில் ஏற்றவில்லை. எனவே அதற்கு ‘கேளாக் கிளவி’ என்ற பெயரும் உண்டு.
தங்கள் மூளைக்குள்ளே பரம்பரையாக வேதங்களை மனப்பாடம் செய்து வந்தவர்கள் கடவுள்களோடு பேசும் உரிமை தங்களுக்கும் தங்கள் வேதத்துக்கும் மட்டுமே உண்டு என்று சமூகத்தை நம்ப வைத்தார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய இந்த பார்ப்பன மேலாதிக்க சூழ்ச்சி இன்று வரை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது?
அர்ச்சர்கர் ஆகும் உரிமை; யாகம் நடத்தும் உரிமை; கும்பாபிஷேகம் செய்யும் உரிமை; மதச் சடங்கு, பரிகாரங்கள் செய்யும் உரிமை; ஆளுநர் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், உயர் அதிகாரிகளுக்கு எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் உரிமை அத்தனையும் இப்போதும் யாரிடம்? பார்ப்பன புரோகிதர்களிடம் தானே!
- இப்படி வேதத்தை கடவுளை அரசியல் தலைவர் களை வழி நடத்துதலை தங்கள் வசமாக்கிக் கொண்டவர்கள் ஒரு காலத்தில் படிப்பையும் இதேபோல் தங்களுக்கே உரித்தாக்கினர். உத்தியோகத்தை வெகு மக்களுக்கு மறுத்தார்கள். வர்ணாஸ்ரமம் வழியாக ஜாதியமைப்பை திணித்து அது முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணித்தார்கள்.
- ‘வேதகாலத்துக்கு திருப்புவோம்’ என்பதே அவர்களின் முழக்கம். அதுவே ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க.வின் கொள்கை. அதற்காகவே அதிகாரத்தைப் பயன்படுத்து கிறார்கள். சமஸ்கிருதத்துக்கும் வேத பண்பாட் டிற்கும் கோடிகோடியாக அரசு பணம் விரயமாக்கப்படுகிறது.
- பிரிட்டிஷ் ஆட்சியின்போது இஸ்லாமியர் அல்லாத மக்கள் அனைவரையும் தங்களின் வேதமத பார்ப்பனியப் பிடிக்குள் இழுத்துக் கொண்டார்கள். அப்போது பிரிட்டிஷார் சூட்டிய பெயர்தான் ‘இந்து’ என்பது. ‘இந்து’ என்ற குடைக்குள் நாம் அனைவரும் ‘வேத மரபுக்குள்’ தள்ளப்பட்டோம். ஆனால், கல்வி, உத்தியோகம் என்று வரும்போது நமது மக்களோடு பகிர்ந்து கொள்ள பார்ப்பனர்கள் மறுத்தார்கள்.
- இந்த வேதமரபு அடக்குமுறைக்கு எதிராக வெகுமக்கள் உரிமைப் போராட்டங்கள் வெடித்தன! பார்ப்பனர்களுக்கு எதிராக ‘கல்வி, வேலை வாய்ப்பு – சூத்திரர் இழிவு ஒழிப்பு’ போராட்டங்களை பெரியார் தொடங்கினார், ஏன்? இந்த கொடூரமான வேதமரபு என்ற பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துத்தான். ஆனால், கொடுமை என்னவென்றால் பெரியார் இந்துக்களை எதிர்க்கிறார் என்று பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக திசை திருப்பினார்கள். இப்போதும் அதே பிரச்சாரம்தான்!
- தோழர்களே! வேத காலத்திலேயே வேத மரபு எதிர்ப்பும் தொடங்கி விட்டது. ‘சார்வாகர்கள்’ வேத பார்ப்பனியத்தை எதிர்த்தார்கள்; அவர்கள் நூல்கள் முற்றாக அழிக்கப்பட்டன. சித்தர்கள் எதிர்த்தார்கள்; புத்தர் எதிர்த்தார்; சமணர்கள் எதிர்த்தார்கள்; வடலூர் வள்ளலார் எதிர்த்தார்; அத்தனை எதிர்ப்புகளையும் பார்ப்பனியம் எதிர்த்து – ஊடுருவி – இருட்டடித்து ஒழித்தே விட்டது.
- நமது சங்க இலக்கியங்கள் – நமது திருக்குறள் வேத மரபுகளை எதிர்த்தன. ‘பிறப்பில் வேற்றுமை இல்லை’ என்பதே நமது திருக்குறள் நெறி. ‘பிறப்பில் வேறுபாடு உண்டு; அதை கடவுளே படைத்தார்’ என்பது பார்ப்பனிய மரபு நூலான பகவத் கீதை கூறும் ‘நெறி’.
- ‘வேதங்களை மறுப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள். அவர்கள் நாத்திகர்கள்’ என்று எச்சரித்தார், இறந்து போன காஞ்சி சங்கராச்சாரி.
- நெஞ்சில் நிறுத்துங்கள்; வேத மரபு எதிர்ப்பு என்பது ‘இந்து’க்களின் எதிர்ப்பு அல்ல; அது ‘இந்து’ வெகு மக்களுக்கு மறுக்கப்படும் அநீதிகளுக்கான எதிர்ப்பு; அவர்கள் மீது சுமத்தப்படும் இழிவுகளுக்கான எதிர்ப்பு.
நமது முன்னோர்கள் சார்வாகரும் – புத்தரும் – வள்ளலாரும் – பெரியாரும் வேத மரபு எதிர்ப்பை நமக்காக – நமது உரிமைகளுக்காகவே உயர்த்திப் பிடித்தார்கள். அந்தப் பதாகையை – அந்த மரபை – அந்தப் போராட்டக் குரலையே இப்போது நாமும் உரத்து முழங்குகிறோம்!
‘கடவுள்’ நம்பிக்கையாளர்களும் தங்களை ‘இந்து’ என்று நம்பிக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாத நமது தமிழ் மக்களையும் பங்கேற்க உரிமையோடு அழைக்கிறோம், வாருங்கள்!
வேத மரபை மறுப்போம்
வெகுமக்கள் உரிமை மீட்போம்!
– திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் 15122016 இதழ்