மூடப்படும் அரசுப் பள்ளிகள்: கொளத்தூர் மணி கண்டனம்
திருநெல்வேலி மாவட் டம் பாவூர் சத்திரத்தில் பெரியார் 138ஆவது பிறந்த நாளான 17.9.2016இல் கல்வியை காவி மயமாக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத் தின் சார்பில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கீழப்பாவூர் ஒன்றிய கழகத் தலைவர் குறும்பை அ. மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு பொருளாளர் ந. சங்கர், துணைச் செயலாளர் மூ.சபாபதி முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட கழக அமைப்பாளர் பொ.பெ.சு. அன்பரசு வரவேற்புரையாற்றினார். காவை இளவரசனின் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்வோடு பொதுக்கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் நெல்லை மாவட்ட கழகத் தலைவர் பால்வண்ணன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு மற்றும் இராம. உதயசூரியன் (ம.தி.மு.க.), கலிவரதன் (ஆதித் தமிழர் பேரவை), கூ.சு. இராமச்சந்திரன் (தி.மு.க.), டேனியல் (வி.சி.க.), சொ. சு. தமிழினியன் (விசிக) ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், பெரியாரின் பணியினை நினைவு கூர்ந்ததோடு,
“இடஒதுக்கீட்டின் மூலம் பார்ப்பனரல்லாதார் வளர்ச்சிக்கு பெரியாரியக்கம் ஆற்றிய பணியினையும், புதிய கல்வி கொள்கை என்பது உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்றும், பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் (வியாபாரிகள்) இங்கே தனது வியாபாரத்தைத் தொடங்கலாம் என அறிவித்து பணக்காரர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும் – கல்வி வள்ளல் காமராசரைப் பயன்படுத்தி தந்தை பெரியார் கிராமம் தோறும் பள்ளிகளை திறக்க வைத்தார். அந்த பள்ளிகளை மாணவர் குறைவு என காரணம் கூறி பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்று பள்ளிகளை மூடப் பார்க்கிறார்கள். சிறு குழந்தைகள்கூட 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்றுதான் இனி கிராமப்புற குழந்தைகள் படிக்க நேரிடும். இராஜாஜி நேரடியாக பள்ளியை மூடினார். மோடியோ ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் பள்ளியை மூடப் பார்க்கிறார். மொத்தத்தில் இழப்பு நமக்குத்தான். புதிய கல்விக் கொள்கை என்பது இராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தின் மறு பெயர்தானே தவிர வேறல்ல.
இந்துத்துவா சக்திகளின் ஒற்றை முழக்கமாகிய “வேத காலத்திற்கு மீண்டும் திரும்புவோம்” என்பதை நடைமுறைப்படுத்த நம்மவர்கள் கல்வி கற்கக் கூடாது, முடியாது என்ற நிலைக்குக் கொண்டு செல்லவே இந்த புதிய கல்வி கொள்கை. வில்வித்தை கற்ற ஏகலைவன், கட்டை விரல் வெட்டி வித்தையை பயன்படுத்த முடியாமல் செய்த வேத காலம் திரும்ப வேண்டுமாம். இதை மக்கள் மத்தியில் தெரிவிக்கவே பெரியார் பிறந்த நாளை பயன்படுத்துகிறோம். பெரியாரை புகழ்வதற்கல்ல என விரிவாக உரையாற்றினார். கீழப்பாவூர் ஒன்றியச் செயலாளர் ச. சுப்பையா நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 17112016 இதழ்