70 ஆண்டு மூட நம்பிக்கையை தகர்த்த – ஆத்தூர் தோழர்கள் அறிவியல் பரப்புரை

சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே ஒரு கிராமத்தில் 70 ஆண்டு களாக மாடி வீடுகளே கட்டப்படுவது இல்லை; அது ‘சாமி குத்தம்’ என்று மக்கள் அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் கழகத் தோழர்கள் அந்த கிராமத்தில் அறிவியல் பரப்புரை நடத்தி மக்களின் அச்சத்தைத் தகர்த்தனர். இது குறித்த செய்தி:

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மல்லியக்கரை அஞ்சலுக்குட்பட்ட கருத்த ராஜப்பாளையம் என்ற கிராமத் தில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அடுக்கு மாடி வீடும் கட்டப்படவில்லை.காரணம் அங்கு அனைவராலும் மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள பெரியசாமி கோவிலின் கோபுரத்தின் உயரத்திற்கு மேல்  அந்த பகுதியில் எந்த ஒரு வீடு கட்டினாலும் அவர் இறந்து விடுவார் அதுபோல் இறந்தும் இருக்கிறார் என்ற மிகப்பெரிய மூட நம்பிக்கையில் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த செய்தி ‘சன்’  மற்றும் ‘மக்கள்’ தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பட்டுள்ளது. செய்தித்தாள் களிலும் வெளி வந்துள்ளது. அங்கு பொருளாதார வசதி படைத்தவர்களும் மூடநம்பிக்கைக்கு பயந்து ஓடு வீடுகளிலும், அட்டைகள் போட்ட வீடுகளிலும் பெரும் அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்த செய்தியை அறிந்து அங்கு அச்சம் போக்கும்  அறிவியல்  பரப்புரை பிரச்சாரம்  செய்ய வேண்டும் என்று ஆத்தூர் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் திட்டமிட்டனர்; காவல்துறையில் அனுமதி கோரினர்.

இதனை தொடர்ந்து 30.10.2016 ஞாயிற்று கிழமை மாலை 6.00 மணி யளவில் சேலம் பிரபு, சரவணன், ஆத்தூர் ராமுலு தோழர்கள் பறை முழக்கத்துடன் அந்த ஊரில் அறிவியல் பரப்புரை நடத்தினர். ஆத்தூர் மகேந்திரனின்  மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும், சேலம் பிரபு தலைமையில் வீதிநாடாகமும் நடந்தது.இந்த நிகழ்ச்சிகளை அப்பகுதி மக்களும், மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்களும், இளைஞர்களும் கண்டு ரசித்தனர்.

இதையடுத்து இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாரம் ஒருமுறை மற்றும் மாதம் ஒரு முறை நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற கோரிக்கை களை முன்வைத்தனர்.

மேலும்  அப்பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து  இருளில் நிகழ்ச்சிகளை செய்து காண்பித்த தோழர்களுக்கு மின்விளக்கு ஏற்பாடுகளும் மற்றும் தோழர்களுக்கும் காவல்துறைக்கும் தேனீர் வசதியும் செய்து தந்தனர். இந்த சிறப்பான வரவேற்பினால் தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அடுத்த பரப்புரைக்கு தயாராகினர்.

செய்தி: ஆத்தூர் மகேந்திரன்

பெரியார் முழக்கம் 10112016 இதழ்

 

You may also like...