டெல்லி மக்களை முகமூடி போட வைத்த ‘மகாவிஷ்ணு’

‘மகா விஷ்ணு’ டெல்லியில் பொது மக்களை யெல்லாம் முகமூடி போட வைத்து விட்டார். தீபாவளி பட்டாசு வெடிப்புக்குப் பிறகு புதுடில்லியில் ‘காற்று மாசு’ அதிகரித்து மக்கள் உயிருக்கு ஆபத்துகளை உருவாக்கியுள்ளது.  பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வைக்கோல் போன்ற விவசாய கழிவுப் பொருள்களை எரிப்பது இதற்கு ஒரு காரணம். இதை மேலும் சிக்கலாக்கியது தீபாவளி பட்டாசு வெடிப்பு. புதுடில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன. மக்கள் முகமூடியுடன் நடமாடுகிறார்கள்.

இந்திய வானியல் துறை முன்னாள் தலைமை இயக்குனரும் விஞ்ஞானியுமான ‘இலட்சுமண் சிங்’ நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மணப்பாறையில் பெரியார் பிறந்த நாள்

மணப்பாறை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் பெரியார் பெருந்தொண்டர்  சேகர் தலைமையில் நடைபெற்றது. தனபால், திராவிடர் கலைக் குழு சங்கீதா;  திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பிரதிநிதி துரைஅழகிரி, ஆதி தமிழர் பேரவை ஆதிசக்தி, திராவிடர் கழகத் தோழர்கள் தியாகசுந்தரம், அறிவுச்செல்வம்,  சி.ரா.ஆனந்தன்,  இராஜா, கார்த்திகேயன்  அஞ்சம்மாள் மற்றும் குழந்தைகள் யாழினி, யாழிசை, தேன்மொழி, பிரவின் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் சமத்துவபுரத்திலும், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில்

காவிரி உரிமைக்கு கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய மோடி ஆட்சியை கண்டித்து 24.10.2016 அன்று கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் சி.ஆசைத்தம்பி தலைமை வகித்தார். க.இராமர், ராஜேஷ், ந. வெற்றிவேல், மதி, சென்னை ஜான் மண்டேலா, விழுப்புரம் அய்யனார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருப்பாளர்கள் ச.கு. பெரியார் வெங்கட், மு. நாகராஜ், வேலாயுதம், குப்புசாமி, முருகன், கோவிந்தன், குமார் உள்பட பல பகுதிகளிலிருந்தும் தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 10112016 இதழ்

You may also like...