அந்த காலத்தில் பார்ப்பனர்களை திருமணத்துக்கு அழைப்பதில்லை

பார்ப்பானை வைத்துத் திருமணம் செய்வதெல்லாம் ஒரு நூற்றாண்டுக்குள்தான் பரவிற்று என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது – 60, 65 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வந்து 500 பேர்களுக்கு மேலாக மொய் (அன்பளிப்பு) எழுதினார்கள். அவர்களுக்குத் திருப்பி மொய் எழுதுவதற்கு என்னைத்தான் என் வீட்டிலே அனுப்புவார்கள். அதனால் பல திருமணங்களைப் பார்த்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இப்படி எல்லோரும் பார்ப்பானைத் திருமணத்திற்கு அழைப்பதில்லை. அப்படி திருமண வீட்டிற்குப் பார்ப்பான் வந்தால் பிச்சை வாங்குவதற்காகத்தான் அங்கு வருவான். அதுவும் உள்ளேகூட அழைப்பதில்லை. வெளியே ஒரு திண்ணையில் வந்து உட்கார்ந்துவிட்டுப் போகும்போது ஆளுக்கு ஒரு அணா, இரண்டனா, பெரிய மனிதர்களாக இருந்தால் ஆளுக்கு 8 அணா, 1 ரூபாய் பிச்சையாய்க் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு சென்று விடுவான். கலியாணம் செய்து வைக்கப் பரியாரி (நாவிதன்) தான் வருவான். அவன்தான் மணமக்களை ஆசி கூறி வாழ்த்திச் செல்வான்.

அப்பொழுதெல்லாம் மணப்பெண்ணுக்கு யார் தாலி கட்டியது என்றுகூட அப்பெண்ணுக்குத் தெரியாது. மணப்பெண் வரும்போதே முகத்தை நன்றாக இழுத்து மூடிக் கொண்டே வரும்! இந்த நிலையில் எப்படித் தாலிக் கட்டுவது? அல்லது தாலி கட்டியவர்கள் யார் என்று பெண்ணுக்கு எப்படித் தெரிய முடியும்? மாப்பிள்ளைக்கு அக்காளோ, தங்கையோ, அத்தையோதான் பெண்களுக்குத் தாலி கட்டுவார்கள். இந்த வழக்கமெல்லாம் சாதாரணமானவர்களல்ல; பெரிய மனிதர், ஊத்துக்குழி ஜமீன்தார், பட்டக்காரர் வீட்டிலேயெல்லாம்கூட இருந்து வருகிறது.

நாயக்கர் சாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் சொல்ல அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் – எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தானியையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம். அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்துவிட்டது. சாத்தாணி தட்சிணை வாங்குவனாகி விட்டான். அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விழைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது, நாம் கீழ்ச்சாதி என்பதுதான்.

ஆகவே இதுபோன்ற நிலையை உடைப்பதுதான் எங்கள் வேலை. இதையெல்லாம் சொல்லிவிட்டால், நா கூசாமல், நம்மைப் பார்த்துப் பார்ப்பான் நாஸ்திகன் என்று கூறிவிடுவான்! நம் இன மடையர்கள் அதை நம்பி விடுவார்கள்! நம் மக்களுக்கு இன உணர்ச்சியே இல்லாத காரணத்தால்தான், நாம் சமுதாயத்தில் இன்னும் மலக்குழியில் வாழ்கின்ற புழுக்களைப்போல் வாழ்கின்றோம்! மலத்தைச் சாப்பிட்டுவிட்டு மலத்திலேயே உழன்று வாழ்கின்றோம். சடங்கு பலவிதமாக வந்தது.

திருமணத்தில் எதற்காகக் கடவுளை அழைக்க வேண்டும்? திருமணத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம், அவசியந்தான் என்ன? ஓட்டலுக்குப் போகிறபோதும், கக்கூசுக்குப் போகிறபோதும் கடவுளைக் கூப்பிடுகிறோமா? அங்கெல்லாம் கூப்பிடாத கடவுளை, திருமணத்தில் எதற்காக அழைக்க வேண்டும்? இதைக் கேட்டால் உடனே நம்மை நாஸ்திகன் என்று சொல்லிவிடுவான். இது என்ன நியாயம்?

– பெரியார் (‘வாழ்க்கைத் துணைநலம்’ நூலிலிருந்து)

You may also like...