மதுரையில் 480 தோழர்கள் கைது ஆணவக் கொலைகளைத் தடுக்காத காவல்துறை அலுவலகம் முற்றுகை

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத் தவறிய காவல்துறையைக் கண்டித்து, தென்மண்டல காவல் துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் 3.11.2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணி திரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள்கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர்கொளத்தூர்மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக் கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு ஆகியோர் உரையாற்றிய பின்னர் ஐ.ஜி அலுவலகத்தை நோக்கிப் பேரணியாக தோழர்கள் புறப்பட்டனர்.

சுமார் 200 மீட்டர் தூரம் கடந்தபோது காவல் துறையினர் தோழர்களைத் தடுத்து கைது செய்தனர். காவல்துறையினர்  கணக்குபடி கைது செய்யப்பட்ட

480 தோழர்களும் பத்மசூர்யா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அரங்கில் மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில்  ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமை யில் கருத்தரங்கம் தொடங்கியது. பாகவி பொது சிவில் சட்டத்தின் மோசடிகள் குறித்தும், அப்துல் சமது மோடி ஆட்சியின் மதவெறிப் போக்கைக் குறித்தும், திருமுருகன் மோடி ஆட்சியில் தமிழர்கள் உரிமைகள் பறிக்கப் படுவதைக் குறித்தும், புரட்சிகர இளைஞர் முன்னணித் தோழர் குமரன் உள்ளிட்டோரும் உரையாற்றினர். மாலை 6-00 மணியளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 10112016 இதழ்

You may also like...