ஜாதி வெறியர்களை கண்டித்து சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் 03112016
தலித்துகள் மீதான வன்கொடுமை தாக்குதல்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மையனூர் கிராமத்தில் ஏசு குழந்தை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாளர் பாதிரியார் சகாயராஜ் இந்த பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்களை செப்டம்பர் 5 அன்று அங்கு படிக்கும் மாணவர்களின் செருப்பை திருடியதாக பிடித்து, அதற்கு தண்டனையாக அடித்தும், விளையாட்டு திடலை சுற்றிவர சொல்லியும் கொடுமை படுத்தியுள்ளனர். நான்கு பேரில் இருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட்டு,இருளர் சமூகத்தை சேர்ந்த இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர் .அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று வெளியூர் போக பணம் இல்லாததால் வீடு திரும்ப முயன்றபோது, பள்ளி ஊழியர்கள் பார்த்து பள்ளிக்கே கொண்டு சென்றனர். செய்தி பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் பாதிரியார் சகாயராஜை சந்தித்து விவரம் கேட்டபோது, அவர் பெற்றோர்களை மிரட்டியதோடு இது பிற்படுத்தப்பட்டோர் பலம் வாய்ந்த பகுதி அவர்களை அழைத்து உங்களை தாக்குவேன். நாளை காலை வந்து விடுப்பு சான்றிதழ் ( TC ) பெற்றுக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார். இவர்களும் இது கல்வி விசயம் என்பதால் தவறு செய்த பாதிரியாரிடமே மன்னிப்பு கேட்டு பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துள்ளனர். அதை தொடர்ந்து செப்டம்பர் மாத இறுதியில் அந்த பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட பிற்படுத்தப்பட்ட இனத்தை சார்ந்த சிலரை இருளர் சமூக இளைஞர்கள் சிலர் தடுத்து தட்டி கேட்டுள்ளனர். பிரச்சனை கைகலப்பு வரை போகவே இவர்கள் RTO வை வரவழைக்க, அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட முதலாளிகள் பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தனர். அந்த பகுதியில் 200 பேரே மக்கள் தொகை இந்த சமுதாயம் நம்மை கேள்வி கேட்பதா என அவர்களுக்குள் பேசி, பொது பிரச்சனையாய் நம்மூர் பாதிரியாரையே மிரட்டுவதா என்று கேள்வியை எழுப்பி தீபாவளியன்று ஊருக்குள் நுழைந்து பெரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ததோடு நில்லாமல் பாதிக்கப்பட்டோரையும் மருத்துவமனைக்கே வந்து பதினெட்டு பேரை கைது செய்து வழக்கு பதிந்துள்ளது காவல் துறை . அதுவும் வன்கொடுமை பிரிவில் வழக்கை பதியாமல் இரதரப்புக்குள் மோதல் என வழக்கு பதிந்துள்ளனர். இதை கண்டித்து வன்கொடுமை பிரிவில் வழக்கை பதிய கோரியும், மோதலுக்கு மூலகாரணமான பாதிரியார் சகாயராஜை கைது செய்யக்கோரி விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் 03 : 11: 2016 வியாழக்கிழமை அன்று பகன்டை கூட்ரோடில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினர். காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தினர் . ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலை 6 :00 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு ஜாதி வெறியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.