இலங்கை துணை தூதரக முற்றுகைப்போராட்டம் ! சென்னை 26102016

யாழ் பல்கலை மாணவர்கள்  சிங்களக் காவல்துறையால் சுட்டுக் கொலை:

இலங்கைத் தூதரகம் முற்றுகை – 400 பேர் கைது.

கடந்த 2016 அக்டோபர் 21அதிகாலை கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன், சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் (பவுன்ராஜ்) சுலக்சன் ஆகிய யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சிங்களக் காவல்துறை இரு தமிழ் மாணவர்களைச் சுட்டுக் கொன்ற உண்மையை மறைத்து, அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் காட்டவே முதலில் முயன்றனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை இப்போது சிறிலங்கா அரசு ஒப்புக் கொண்டிருந்தாலும், அது சொல்லியிருக்கும் சமாதானங்கள் ஏற்புடையவையாக இல்லை. இரு மாணவர்களும் காவலரணில் வண்டியை நிறுத்தாமல சென்றதால் சுட நேரிட்டது என்ற விளக்கத்தை இப்போதைய சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள மனோ கணேசனே ஏற்கவில்லை. துரத்திப்பிடிக்கத்தானே உங்களுக்கு அதிநவீன 1000 சிசி மோட்டார் சைக்கிள்கள் தரப்பட்டுள்ளன என்று அவர் கேட்டுள்ளார். சுடுவதென்றாலும் முதலில் வான் நோக்கியும் பிறகு முழந்தாளுக்குக் கீழேயும் சுட்டிருக்கலாமே? என்று அவர் கேட்டுள்ளார். மேலும் ஒரு மாணவரின் நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளதை உடற்கூராய்வு மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச்சூடு ஒரு விபத்து என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனா காட்ட முற்பட்டதை இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சிங்கள மாணவரான இலகிறு வீரசேகரா வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழுயிர்களைப் பறித்த சிங்களப் பேரினவாதக் கொலைவெறி இன்னும் தணியவில்லை என்பதையே இந்த யாழ் மாணவர்கள் படுகொலையும் உணர்த்தி நிற்கிறது. இந்த உண்மையை சர்வதேசச் சமுதாயமும் கணக்கில் கொண்டு தமிழீழ மக்களுக்கு நீதி கிட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு 26-10-2016 அன்று இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டத்தை ஈழத் தமிழர் உரிமைக் காப்புக் கூட்டமைப்பு அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்தது.

அவ்வழைப்பையேற்று பல்வேறு கட்சி, அமைப்புகளின் தோழர்கள் இலயோலாக் கல்லூரி அருகே திரண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், செய்தி தொடர்பாளர் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மறுமலர்ச்சி தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் நென்னை மாவட்ட செய்லாளர் ஜுனைத் அன்சாரி, தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி. தமிழ்த் தேசிய பேரியக்கப் பொதுச் செயலாளர் வெங்கட்டராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, இளந்தமிழகம் செந்தில், சி.பி.எம்.எல். ( மக்கள் விடுதலை ) காஞ்சி மக்கள் மன்றம் மகேஸ், ஜெஸ்ஸி, த.பெ.தி.க தோழர்கள், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் சேகர், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், கி.த.பச்சியப்பன், ஓவியர் சந்தனம், புலவர் இரத்தினவேல் ஆகியோரும் கட்சி, அமைப்பு பொறுப்பாளர்களும் தோழர்களும் ஏறத்தாழ 400 பேர் கலந்துகொண்டனர்.

தொல். திருமாவளவனும், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணியும் உரையாற்றியவுடன் பேரணி இலங்கைத் தூதரகத்தை நோக்கிப் புறப்பட்டது.

மாணவர் படுகொலையைக் கண்டித்தும், மாகாணப் பேரவைக்கு காவல், நில அதிகாரங்களை வழங்கு – தமிழர் பகுதியில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தை விலக்கு – பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு – என்பன போன்ற முழக்கங்களை எழுப்பிய வண்ணம் சென்ற பேரணியை, காவல் துறையினர் இடைமறித்து கைது செய்தனர்.

சூளைமேடு ஜெயலட்சுமி திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டத் தோழர்களை மாலை 6-00 மணியளவில் விடுதலைசெய்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பெரு எண்ணிக்கையில் தோழர்களும், ஏராளமான பெண்களும் முற்றுகையில் கலந்துகொண்டு கைதாகினர்.

பெரியார் முழக்கம் 03112016 இதழ்

 14516494_1828612264089332_4558470695455277292_n 14522995_1828612524089306_5140889592863615952_n 14523279_1827114270905798_6651395447963314361_n 14611047_1828612777422614_3576572002130624336_n 14639781_1828612224089336_3458347595768735404_n 14639875_1828612474089311_7730936262273510791_n 14691008_1828612654089293_6316485123236328522_n 14725535_1828612884089270_5620482950691611183_n 14732187_1828612424089316_4853679383659355550_n 14906824_1828612370755988_4503809549263948425_n ூ

You may also like...