சரஸ்வதி பூஜை-ஆயுத பூசை ஆபாசங்கள்!
சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி
செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே, அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்” என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஒரு ஆண்மான் உருவமெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும் சிவன் வேட உருவமெடுத்து அவளைப்பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவமெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக மீண்டும் சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை கூறுகிறது. இரண்டாவது, ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையின்போது வெளிப்பட்ட இந்திரியத்தை ஒருகுடத்தில் விட்டு வைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப் படுகிறது. அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி, மகன் வயிற்றுப் பேத்தியா கிறாள். எனவே சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும். நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயம். அதாவது, சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழி லுக்கு ஆதாரமானவை ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு, சரஸ்வதி பூசை ஆயுதபூசை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக்கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கின்றார்கள். இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்களையும், தராசு, படிக்கல், அளவு மரக்கால், படி , உழக்கு, பெட்டி முதலியவற்றையும்; தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சேலைகளையும் நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களையும் இதுபோல் ஒவ்வொரு வரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார்கள். இதனால் அந்தத் தினத்தில் தொழில்கள் நின்று அதனால் வரும்படிகளும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச்
செலவழித்து, போதாவிட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதைவிட இதனால் யாதொரு நன்மையும ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை. சரஸ்வதி பூசை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்நிறை நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக்கணக்கு எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து விழுந்து கும்பிடுவார்களே தவிர அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ, தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ சொல்லுவதற்குஇடமில்லாமல் இருக்கின்றார்கள். அதுபோலவே புத்தகங்களையும், கூளக் குப்பைகளையும் அள்ளி அவற்றிற்குப் பொட்டு வைத்துப் பூசை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டு விட்டால், தொட்டுக்கண்ணில் ஒத்திக் கொள் கின்றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100க்கு 5 பேர்கள் என்று தான் உள்ளார்கள். இவ்வளவு ஆயுத பூசை – சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும் அவதிப்பட்டுக்கொண்டு இருக் கின்றார்கள். சரஸ்வதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள் 1,000த்துக்கு 9 பேர்கள் படித்து உள்ளார்கள் இதன் காரணம் என்ன? நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க் கற்பனையா? என்பவை யாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத் தான் இருக்கவேண்டும்.
இவையாவும் சுத்த முட்டாள்தனமான கொள்கைகள் என்பது தான் எனது அபிப்பிராயம். அயல்நாட்டானைப் பார்த்தால் அவனுக்கு சரஸ்வதி என்ற பேச்சோ கல்வித்தெய்வம் என்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது. அன்றியும், நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய்க் கருதிக்கொண்டும், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டும் நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மலங்கழித்தால் சரஸ்வதியைக் கொண்டே (காகிதத்தை) மலம் துடைத்தும் வருகிறான். ஆனால் 100-க்கு 60 பெண்கள் அவர்களில் படித்து இருக்கிறார்கள்உண்மையிலேயே சரஸ்வதி என்ற தெய்வம் ஒன்று இருக்கும் என்றால், பூசை செய்பவர்களைத் தற்குறியாகவும் மலம் துடைப்பவர்களை அபார அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்று தயவுசெய்து யோசித்துப் பாருங்கள். உண்மையில் யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால், அதைப்பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவும், சரஸ்வதியைக் கனவிலும் கருதாது, சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து “முட்டாள்கள், அறிவிலிகள், காட்டு மிராண்டிகள்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூசையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகிறது என்று பாருங்கள்! இராசாக்கள் கொலு இருப்பது, பொம்மைகள் கொலு இருப்பது, சாமிகள் கொலு இருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, அறிவுச் செலவு செய்வது, லட்ச ரூபாய்க்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேளவாத்தியம் வாழைக்கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர் போக ரயில் சார்ஜ் ஆகிய எவ்வளவு செலவாகின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா? என்று கேட்கிறேன். ஒரு வருஷத்தில் இந்தப் பூசையில், இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்ற கணக்குப்பார்த்தால், மற்றப் பண்டிகை, உற்சவம் புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை .
(‘இந்துமத பண்டிகைகள்’ நூலிலிருந்து)
பெரியார் முழக்கம் 06102016 இதழ்