‘பேய்’ உண்டா? சவால் விட்டவர்கள் ஓட்டம்

  • திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை ஒன்றியம் கோளம்பட்டி கிராமத்தில் சோழ ராஜா கோயில் இருக்கிறது. ஆடி மாதத்தில் மூன்று நாள்கள் நடக்கும் இந்தக் கோயில் திருவிழாவில் கொடூரமான சித்திரவதைகள் அரங்கேறுகின்றன. பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களைக் கொண்டு வந்து  நிறுத்தி, முகத்தில் தண்ணீரைத் தெளித்து, சாம்பிராணி புகைப்போட்டு, ‘உனக்கு பேய் பிடித்திருக்கிறது. அது எந்த ஊர் பேய்?” என்று  கேட்டு சாட்டையால் இரத்தம் சொட்ட சொட்ட அடிக்கிறார்கள். அடி தாங்க முடியாத பெண்கள், ‘பேய் ஓடி விட்டது’ என்கிறார்கள். அந்தப் பெண்ணின் தலை முடியை எடுத்து ஓர் ஆணியில் சுற்றி அப்பகுதி புளிய மரத்தில் அடிக்கிறார்கள்.
  • பேயைப் பற்றி காசார் பிரைட் என்ற பிரிட்டனைச் சார்ந்தவர் ஓர் ஆய்வை நடத்தினார். 800 வருட பழமையான பங்களா ஒன்றில் ‘பேய் பிசாசு’ பிடித்தவர்கள் என்று கூறப்பட்டவர்களை கொண்டு போய் தங்க வைத்து, அவர் ஆய்வு செய்தார். குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது  வழக்கத்துக்கு அதிகமான ‘காந்தப் புலன்’ ஏற்படுவதும் மூளை நரம்புகளின் பாதிப்புகளுமே இதற்குக் காரணம் என்று அவர் கண்டறிந்தார்.
  • 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘கலைஞர்’ தொலைக்காட்சியில் ‘ஆவி-பேய்’ குறித்து விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. திருநங்கை ரோஸ் நடத்திய நிகழ்ச்சி அது. ‘பேய் இருப்பது உண்மை’ என்று ஒரு அணியும், மறுப்பாளரும் வாதிட்டனர். “பேய் இருப்பது உண்மையானால் அதை எங்கள்  மீது ஏவி விடுங்கள் பார்ப்போம்” என்று சுரேந்தர் என்பவர் சவால் விட்டார். “சுரேந்தர் மீது பேயை ஏவி விட்டு அவருக்கு கேடுகளை உருவாக்கிக் காட்டினால் 10 இலட்சம் ரூபாய் தரத் தயார்” என்று சந்திரசேகர் என்பவர் பேய் ஓட்டும் ‘மந்திரவாதிகளுக்கு’ சவால் விட்ட தோடு, அங்கேயே ரூ.10 இலட்சத்துக்கான காசோலை யையும், பின் தேதியிட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் வழங்கினார். “ஒரு மாதத்துக் குள் பேயை ஏவி விடுகிறேன்” என்று சசிகுமார் என்பவர் சவாலை ஏற்றார். ஒரு மாதத் கெடு முடிந்தது. மீண்டும் அதே நிகழ்ச்சியில் தோழர் சுரேந்தர் தனது துணைவியாருடன் மகிழ்ச்சியாக நிகழ்ச்சிக்கு வந்தார். ‘பேயை’ ஏவிவிடுவதாக சவால்விட்ட சசிகுமார், அய்யப்ப பக்தர் கோலத்தில் நிகழ்ச்சிக்கு வந்தார். இருவரும்  நேரடியாக விவாதித்தனர். ‘பேயை’ நம்பும் தரப்பினர் தங்களது  தோல்வியை நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டனர். இதேபோல் ‘விஜய்’ தொலைக்காட்சியில், ‘நீயா, நானா?’  நிகழ்ச்சியிலும் ஒரு மந்திரவாதி, ‘பில்லி சூன்ய’த்தை ஏவி அதை நம்ப மறுத்த ஒருவரை ஒரு மாதத்தில் மரணமடையச் செய்வதாக சவால்  விட்டார். சவாலை ஏற்றுக் கொண்டவர் ஒரு மாதம் கழித்து மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்து உயிருடன் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தி, மந்திரவாதியின் முகத்திரையைக் கிழித்தார்.

பெரியார் முழக்கம் 28072016 இதழ்

You may also like...