நாங்கள் ‘மனிதி’; மவுனம் உடைப்போம்!

பெண்கள் அமைப்புகள், அமைப்புகளைக் கடந்து ‘மனிதி’ என்ற அடையாளத்தோடு ஒன்றுதிரண்டு ‘நடைப் பயணம்’ நடத்தினர். கடந்த அக்டோபர் முதல் தேதி சென்னை காந்தி சிலையில் திரண்ட 500 பெண்கள், முழக்கங்களோடு மெரினா வரை நடந்து சென்றனர். முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்து, பெண் விடுதலைக்கு சரியான கருத்துகளை பெரியார் விட்டுச் சென்றதை நினைவுகூர்ந்து உரையாற்றினார். தமிழகம் முழுதுமிருந்தும் பல்வேறு அமைப்புகள், இயக்கங்களைச் சார்ந்த பெண்களும் பெண்ணுரிமையை வலியுறுத்தும் ஆண் தோழர்களும் இதில் பங்கேற்று முழக்கமிட்டு வந்தனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்களும் கழக சார்பில் பங்கேற்றனர்.

உடுமலை கவுசல்யா, பேராசிரியர் சரசுவதி, ஓவியா, வழக்கறிஞர் அருள் மொழி, கவிஞர் சல்மா, செல்வி, பரிமளா, மக்கள் மன்றம் மகேசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணியில் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை பெண்கள் எடுத்தனர். மனிதியாகிய நான் மானமும் அறிவும் தன்விழிப்பும் கொண்டவளாய் இருப்பேன்; மனிதியாகிய நான் சக மனிதர்களிடம் சாதி மத வர்க்கபேதம் பார்க்க மாட்டேன்; மனிதிகள்  அனைவரின் இன்ப துன்பங்களில் பங்கேற்பேன்; என் படிப்பு, என் வேலை, என் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் தன்னுரிமையை விட்டுத் தராதவளாய் இருப்பேன்; குடும்பம், உறவுகள், நட்புகளால் என் விருப்பங்களும் கருத்துகளும் ஒடுக்கப்படுவதை எதிர்ப்பேன்;

என்னை பாலியல் பிண்டமாகவும் இரண்டாந்தரக் குடிமகளாகவும் கருதி நடக்கும் அத்தனை  அடக்குமுறைகளையும் எதிர்ப்பேன்; காதலும் இணைத்தேர்வும் மனித உரிமையே! சாதி மதம் கடந்த திருமணங்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் அது தொடர்பான சாதியக் கொலைகளைத் தடுக்கப் போராடுவேன்; அண்மைக் காலங்களில் பேராபத்தாய் அதிகரித்துள்ள ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றப் பாடுபடுவேன் சம உழைப்புக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் அனைத்துப் பணிகளிலும் ஆண் கூலி, பெண் கூலி என்ற பாகுபாட்டை ஒழிக்கப் பாடுபடுவேன்; பூமியில் பாதியாக உள்ள மனிதிகளின் நிலம் சொத்து மற்றும் அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவேன்; நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும்சமுதாயத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் 50 விழுக்காடு உரிமை கோரிப் போராடுவேன்; குழந்தை வளர்ப்பில் ஆணுக்கும் அரசுக்கும் உள்ள கடமையை உணர்த்தப் பாடுபடுவேன்; மனிதி நான் மவுனம் உடைப்பேன். மனிதி நான் உரக்கப் பேசுவேன்.

மனிதி நான் தட்டிக் கேட்பேன்.                                                  

மனிதி நான் ஒன்று படுவேன்.

மனிதி நான் ஒன்று திரட்டுவேன்.                                            

மனிதி நான் தடையுடைப்பேன்.

மனிதி நான் விடுதலை அடைவேன்.

14502824_1837067823190813_536532887328518782_n

பெரியார் முழக்கம் 06102016 இதழ்

 

 

You may also like...