பட்டேல்கள் நடத்தும் கலவரம்:  இடஒதுக்கீட்டை ஒழிக்கும் சதி!

தற்போது முன்னேறிய வகுப்பில் உள்ள பட்டேல் இன மக்கள் தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் இணைத்து இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 22 வயது இளைஞரான ஹார்த்திக் பட்டேல் தலைமையில் பல இலட்சக்கணக்கான பட்டேல் இன மக்கள் திரண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையே பாதிக்கும் வகையில் தீவிரமான  போராட்டத்தை நடத்தி வருவது குறித்து ஊடகங்கள் நாள்தோறும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.
இந்த போராட்டம் குறித்த பல்வேறுவிதமாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. இந்த போராட்டத்தை, அதன் போக்கை அந்த போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவரின் கருத்துக்களை கூர்ந்து நோக்குகையில் இந்த பட்டேல் இன மக்களின் போராட்டத்தின் நோக்கம் என்பது, இட ஒதுக்கீட்டு உரிமையை பெறுவதை விட இடஒதுக்கீட்டு உரிமையை முழுமையாக இரத்து செய்ய வைப்பதுதான் முதன்மையானதாக தெரிகிறது.
போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் ஹார்த்திக் பட்டேல் தன்னுடைய பேட்டிகளில், “இட ஒதுக்கீடு எங்களுக்கும் வழங்க வேண்டும், அல்லது யாருக்கும் இட ஒதுக்கீடே வழங்க கூடாது” என்றும் “இந்த நாட்டில் இட ஒதுக்கீட்டை நீக்கிவிடுங்கள் அல்லது அனைவரையும் இட ஒதுக்கீட்டின் அடிமைகளாக அறிவியுங்கள்” (“Either free the country from reservation or make everybody a slave of reservation.”) எனவும் கூறியுள்ளார். இன்று இட ஒதுக்கீடு கேட்டு போராடும் இதே பட்டேல் இன மக்கள்தான் 30 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ கல்வியில் தாடிநத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மிக கடுமையாக எதிர்த்தவர்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
பட்டேல் இன மக்களின் இதுபோன்ற கருத்துகளை முன்வைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, “தற்போது ஜாதி அடிப்படையில் வழங்கப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டை இரத்து செய்வது குறித்து பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது” என கூறியுள்ளது. போராட்ட குழு, ‘இந்தியா முழுமைக்குமான போராட்டமாக இதனை வளர்த்தெடுக்கப் போகிறோம்’ என்று அறிவித்துள்ளார்கள்.
இவர்களின் போராட்டத்தின் மூலம் ஏற்கனவே இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்இராஜஸ் தான் குஜ்ஜார் இன மக்கள், ஹரியானாவின்  ஜாட் இன மக்கள் ஆகியோரின் கருத்துகளை மையப்படுத்தி ஒட்டு மொத்தமாக இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்க இந்துத்துவா சக்திகள் திட்டமிடுகின்றனவோ என்கிற ஐயம் எழுகிறது.
இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆய்வு செடீநுத மண்டல் குழு, தன் பரிந்துரையில் சொல்லியுள்ள பிற்படுத்தப்டோர் பட்டியலில் பட்டேல் இனம் இல்லை என்பது முக்கியமானது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் வைத்யாவும், இடஒதுக்கீட்டு எதிராக தற்பொழுது கருத்து தெரிவித்திருப்பது, இவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு நாடு தழுவிய கருத்துருவாகத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
குஜராத்தின் பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் பட்டேல். மாநில முதல்வரும் மாநில பா.ஜ.க. தலைவரும் பட்டேல்கள் என்பதோடு சட்டமன்றத்தில் 40 பேர் இந்த சமூகத்தினர். பிற்படுத்தப்பட்டோரின் நிலையை அறிய ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணையங்களோ, ஆய்வறிக்கைகளோ ஏதும் பட்டேல் இன மக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என இதுவரைஅறிவிக்காத நிலையில், பரந்த பொருளாதார வலிமையும், அரசியல் அதிகாரத்தில் மிகப்பெரிய பங்கும் வகித்துக் கொண்டிருக்கிற இந்த பட்டேல் இனமக்கள் எந்தவித ஆணையத்தின் பரிந்துரையும் இன்றி தன்னிச்சையாக தாங்களாகவே முன் வந்து தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் என அறிவித்துக் கொண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வன்முறையை ஏவிவிடும் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
பாரதிய ஜனதா கட்சி – தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு கொள்கையில் புதிய அணுகுமுறையைப் பின்பற்றுவதாகக் கூறியது. இதற்கு விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘சில குறிப்பிட்ட பகுதிகளில் தத்தெடுத்து, அங்குள்ள மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே இடஒதுக்கீடு’ என்று கூறினார். ஆக, இட ஒதுகீட்டிற்கு எதிரான சக்திகள் இந்த சூழலை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி தங்கள் ஊடக பலத்தால் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை உருவாக்க முயல்வார்கள் இந்த பின்னணியை சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் கவனமாக கருத்தில் கொள்வது தற்போதைய காலத்தின் தேவையாகும்.

பெரியார் முழக்கம் 03092015 இதழ்

You may also like...

Leave a Reply