முகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி தாடகை நாச்சி அருவி பக்கத்தில் இரமணகிரி மடம் உள்ளது. அதில் அருகிலுள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரியின் மகன் ஆனந்த சுவாமி (22) சாமியாராக இருக்கிறார். மழை வேண்டியும் மக்கள் நலனுக்காகவும்
இந்த சாமியார் வெள்ளிக்கிழமை (சூன் 11, 2004) இரவு 8 மணிக்கு 7 அடி ஆழத்தில் மூடிய குழிக்குள் தவம் இருக்கத் தொடங்கினார். ஞாயிறு காலை சரியாக 8 மணிக்கு வெளியில் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் என
அவரது சீடர்கள் அறிவித்தார்கள். இதைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தார்கள். இந்தச் சாமியார் இதற்கு முன்னர் குழிதோண்டி
குழிக்குள் ஒரு நாள் தவம் இருந்து உயிரோடு வெற்றிகரமாக வெளியே வந்து தனது ‘சக்தி’யை பக்தர்களுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். முதலில் நிலத்துக்குள் குழி தோண்டி அதற்குன் முன்கூட்டியே சுவாமி சிலைகள், படங்கள், பூசைப் பொருள்கள், பழங்கள், தண்ணீர் முதலியன வைக்கப்படும். அதன் பிறகு ஆனந்த சுவாமி காவி உடையில் தவக்கோலத்துடன் குழிக்குள் இறங்கியதும் குழியின் மேற் பகுதியை சாமியாரின் சீடர்கள் மூடி விடுவார்கள். சாமியார் குழிக்குள் இறங்கிய பிறகு மேற்பகுதியை எந்த
மாதிரி மூட வேண்டும் என்று சீடர்களுக்கு யோசனை சொல்லப்படும். அம்மாதிரி மூடும்பொழுது குழிக்குள் காற்றுப் புகுவதற்கு ஏற்றவாறு மூடப்பட வேண்டும் என்பது நியதி. சீடர்களைத் தவிர வேறு பொது மக்கள் யாரும்
குழியை மூடுவதற்கு அனுமதிப்பது கிடையாது. ஏனென்றால்
பக்தர்கள் குழிக்குள் காற்று நுழைய முடியாதபடி மூடி விடுவார்கள் என்ற பயமேயாகும். குழி மேல் வராதபடி உள்ளே சுவாமி இருக்கிறார், கால் படக் கூடாது எனப் பக்தர்கள் பயமுறுத்தி விடுவார்கள். அப்படித்தான் ஆனந்த சுவாமி தவக் கோலத்தில் குழிக்குள் இறங்கியதும் அவரது சீடர்கள் குழியை
மூடினார்கள். வழக்கமாக இந்தச் சாமியார் குழிக்குள் தவம் இருக்கும்பொழுது சுற்றிலும் சுவர் கட்டுவது இல்லை. ஆனால், இம்முறை தவம் இருந்தபொழுது சுற்றிலும் செங்கல் வைத்துச் சுவர் எழுப்பி விட்டனர். சீடர்கள் முறைப்படி மூடி, குழிக்குள் காற்று புகுவதற்கு ஏற்றபடி செய்து விட்டுப் போய்விட்டனர். ஆனால், அதற்குப் பிறகு அங்கு வந்த பக்தர்கள் குழிமேல் மண்ணை போட்டுப்
பலமாக மூடி விட்டனர். இதனால் காற்று குழிக்குள் புக முடியாதவாறு தடைபட்டுவிட்டது. இதனால் குழிக்குள் தவமிருந்த சாமியார் மூச்சுத் திணறிய நிலையில் மூடியைத்தள்ளிவிட்டு வெளியேற முயற்சித்தார். அப்பொழுது குழியின் மேல் போடப்பட்டு இருந்த பலகை சற்று அசைந்தது.
ஆனால், மண் பலமாகப் போட்டு மூடப்பட்டு இருந்ததால் பலகை முற்றாக அசைந்து கொடுக்கவில்லை. சாமியார் தவக் கோலத்தில் குழிக்குள்ளே இறங்கும் பொழுது சுற்றிலும் தீ மூட்டம் போடும்படியும் கூறி இருந்தார்.
பலகை அசைந்ததும் சாமியார் தீ மூட்டத்தான் சொல்கிறார் என்று நினைத்துச் சுற்றிலும் நின்ற பக்தர்கள் தீயை மூட்டி விட்டனர். தீயில் இருந்து வெளியான வெப்பம் குழிக்குள் புகுந்து சாமியாரைத் திணறடித்திருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை ஆனந்த சுவாமி தவக்குழியில் இருந்து வெளிவரும் காட்சியைப் பார்க்கப் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமியின் தாய் தந்தையரும் கூடிவிட்டனர். ஆனால், நேரம் ஆகியும்
சாமியார் வெளிவரவில்லை. பக்தர்களுக்கு அய்யம் ஏற்பட்டது. இருப்பினும் சீடர்கள் சுவாமி சிறிது நேரத்தில் வெளியே வந்து விடுவார் என்று
கூறிக் கொண்டே காலம் கடத்தியதைப் பக்தர்கள் நம்பிக் காத்திருந்தனர். பின்னர் குழியில் இருந்து கெட்ட நாற்றம் வருவதை அறிந்த சீடர்கள் கலக்கம் அடைந்தனர். இந்த நிலையில் குழியின் மேல் மூடப்பட்டிருந்த
பலகையைப் பிரித்துப் பார்த்தபொழுது, ஆனந்தசுவாமி கவிழ்ந்த நிலையில் குப்புறப் பிணமாகக் கிடந்தார். அவர் முகத்தில் காயங்கள் இருந்தன.அவர் பிணமாகி இரண்டு நாட்கள் இருக்கும் என்றும் அதனால்தான் அவரது உடல் அழுகிவிட்டதென சவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
குழிக்குள் காற்றுப் புகமுடியாது போகவே சாமியார் இறங்கிய 4 அல்லது 5 மணி நேரத்தில் “பரலோகம்” போய்விட்டார்! (‘தினகரன்’ சூன் 15, 2004)
மேலும் இரண்டு செய்திகள்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பூவலம்பேடு ஊரில் அமாவாசை நாளன்று (சூன் 16, 2004)
ஊரில் கடவுள் குற்றம் நிகழ்ந்துவிட்டதாகவும், வரும் அமாவாசை நாளன்று ஊரைச் சேர்ந்த ஒரு குழந்தையும் அதன் தாயும் மரணமடைவார்கள் என்றும் அந்த ஊரில் ‘அருள்’ வாக்குச் சொல்லும் பெண்மணி கூறியுள்ளார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களது வீடுவாசல்களைப் பூட்டிவிட்டு அக்கம் பக்கம் உள்ள ஊர்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம்
புகுந்தார்கள். மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால்ஊர்ப் பள்ளிக்கூடமும் மூடப்பட்டுவிட்டது. ஊரும் வெறிச் சோடிக் கிடந்தது. ஏறத்தாழ 2000 பேர் வசிக்கும் அந்த ஊரில் கடந்த 6 மாதத்தில் 16 பேர் பல்வேறு நோய்கள் தாக்கிப் பலியாகியுள்ளனர். அமாவாசை முடிந்த பின்னர்தான் மக்கள் ஊருக்குத் திரும்புவார்கள் என்று தெரிகிறது! ‘அருள்வாக்கு’ சக்தியை நம்பியதால் ஏற்பட்ட மோசமான விளைவு இது! கிருஷ்ணா பிரபல தெலுங்கு நடிகர், மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ஆர். அவர்களின் மகன். சூன் 8 ஆம் நாள் தனது வீட்டுக்கு வந்த படத் தயாரிப்பாளர் சுரேஷ், சோதிடர்
சத்திய நாராயணா இருவரோடும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார். பின்னர் வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியபொழுது கிருஷ்ணா அவர்களைத் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இருவரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
சோதிடர் சத்தியநாராயணா சுடப்பட்டதற்குக் காரணம் “உமது சாதகத்தின் பிரகாரம் இனி உமக்குச் சினிமாத்துறையில் இறங்குமுகம்தான்” என்று அவர் பலன் கூறியதுதான். பாவம் சோதிடர், தனக்குக் கண்டம் இருப்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. எல்லோருக்கும் சொல்கிற பல்லி, தான் மட்டும் கழு நீர் பானைக்குள் விழுந்த கதைதான்.சோதிடர்கள், மனித கடவுளர்கள், மாந்திரிகர்கள், அருள்வாக்குச் சொல்வோர் ஆகியோரது கணிப்புகள் பலிக்கிறதோ இல்லையோ எப்படியாவது எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையில் மக்கள் அவர்களது வீட்டுக் கதவைத் தொடர்ந்து தட்டிக்
கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது சோதிடத்தின் கதவே பலமாகத் தட்டப்படுகிறது.
அவ்வளவு மூடநம்பிக்கை! – ‘நக்கீரன்’ எழுதி, கழகம் வெளியிட்ட ‘சோதிடப் புரட்டு’ நூலிலிருந்து
இதேபோல் தனது ஆன்மீக சக்தியால் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மழை பெய்யச் செய்ய முடியும் என்று சவால் விட்டார் ஒரு சாமியார். ஆனால் மழை பெய்யவில்லை. சேலம் ஓட்டல் ஒன்றில் வாங்கியிருந்த சாமியாரை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் முற்றுகை யிட்டு மோசடியை அம்பலமாக்கினர். சாமியார் ஓட்டலின் பின்புற வழியாக தப்பி ஓடினார்.