‘சமபந்தி’க்கு தடை போட்ட திருவையாறு சமஸ்கிருத கல்லூரி

1940ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அன்றைய தஞ்சை மாவட்டம் திருவை யாற்றில் ஒரு சமஸ்கிருத கல்லூரி இருந்தது. அப்போது மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு மாவட்ட வாரியம் (District Board) என்ற அமைப்பின் நிர்வாகத்தில் மாவட்டங்கள் இயங்கின. இந்த சமஸ்கிருத கல்லூரி, ‘மாவட்ட வாரிய’ நிர்வாகத்தின் கீழ் இயங்கிய ஒரு அரசு நிறுவனம். இதில் சமஸ்கிருத மொழி மட்டுமே கற்பிக்கப்பட்டது. எனவே, படித்தவர் களும் பார்ப்பனர்கள் மட்டுமே! அப்போது மாவட்ட வாரியத் தலைவராக இருந்தவர் சர். ஏ.டி. பன்னீர் செல்வம். பெரியாரின் சுயமரியாதை கருத்துகளை தீவிரமாக ஆதரித்தவர். சமஸ்கிருத கல்லூரியில் தமிழும் கற்றுத் தர வேண்டும் என்று உத்தரவிட்டார். பார்ப்பனர்களோ சமஸ்கிருத கல்லூரியில் தமிழ் நுழைந்தால் புனிதம் கெட்டுவிடும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மிரட்டலுக்கு பன்னீர்செல்வம் பணியவில்லை.

சமஸ்கிருத கல்லூரியில் தமிழ் படிக்க பார்ப்பனரல்லாத மாணவர்கள் சேர்ந்தனர். இதனால் மாணவர் விடுதியில் பிரச்சினை உருவாக்கப்பட்டது. பார்ப்பன மாணவர்களுக்கு தனி இடத்தில்  சாப்பாடு, பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு தனி இடத்தில் சாப்பாடு போட்டார்கள்.  இதற்கு மாவட்ட வாரியம் அனுமதிக்கவில்லை. அப்போது மாவட்ட வாரியத் தலைவராக (ஜில்லா போர்டு) நாடி முத்து பிள்ளையும், துணைத் தலைவராக கிருஷ்ணசாமி வாண்டையாரும் இருந்தனர். வாரியக் கூட்டத்தில் பார்ப்பனரும் பார்ப்பன ரல்லாத மாணவர்களும் ஒரே இடத்தில்தான் உணவருந்த வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றினார்கள். 1941 ஜனவரி 27ஆம் தேதி இந்தத் தீர்மானம் நிறைவேறியவுடன், பார்ப்பன மாணவர் களுக்கு விடுதியில் சாப்பிடத் தடை விதித்து, பார்ப்பன சேரியான அக்கிரகாரத்தில் பார்ப்பனர்கள் சாப்பாடு போட்டார்கள். அப்போது பார்ப்பனரல்லாத மாணவர்கள் 70 பேர்; பார்ப்பன மாணவர்கள் 45 பேர். பெரியாரின் ‘விடுதலை’ நாளேடு 1941 ஜனவரி 29ஆம் தேதி திருவையாற்றில் ‘ஜாதித் திமிர்’ என்று கடுமையாக கண்டித்து எழுதியது.

திருவையாறு பிரச்சினையை தமிழகம் முழுதும் பார்ப்பனர்கள் கொண்டு சென்றார்கள். பார்ப்பன-பார்ப்பனரல்லாத மாணவர்களை அரசு விடுதியில் ஒரே பந்தியில் உணவருந்த அனுமதித்ததை எதிர்த்து சென்னை மயிலாப்பூரில் 1941ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பார்ப்பனர்கள் பொதுக் கூட்டம் போட்டு கண்டித்தார்கள். அதில் ‘ரைட் ஆனரபில்’ சீனிவாச சாஸ்திரியார், சர்.பி.எஸ். சிவசாமி அய்யர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார், இராவ் பகதூர், ஜி.ஏ. நடேசன் போன்ற பிரபலமான செல்வாக்கு பெற்ற பார்ப்பனர்கள் ‘சமபந்தி’யை கடுமையாக சாடி னார்கள். இதே கூட்டத்தில் சைவப் பிரமுகர்களான ‘சூத்திர’த் தமிழர்கள் திவான்பகதூர் வி.மாசிலாமணிப் பிள்ளை, எம். பாலசுப்பிரமணிய முதலியார்,

எம். ராஜமன்னார் செட்டியார், வையாபுரிப் பிள்ளை போன்ற தமிழ் பண்டிதர்களும் பார்ப்பனர்களை ஆதரித்து பேசினார்கள்.

பெரியார் விடவில்லை. ‘விடுதலை’ போர்ச் சங்கு ஊதியது. 1941 ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை

கோகலே அரங்கில் (இது பிராட்வேயில் இருந்த அரங்கம்) தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் முடிவை ஆதரித்து பெரியார் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். முன்னாள் அமைச்சரும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அமுல்படுத்தியவருமான எஸ்.முத்தையா முதலியார்தான் கூட்டத்தின் தலைவர். மண்டபம் முழுதும் கூட்டம் நிரம்பி மண்டபத்துக்கு வெளியேயும் திரண்டு வழிந்தது என்று ‘விடுதலை’ (12.4.1941) பதிவு செய்தது. கூட்டத்தில் பெரியார் இவ்வாறு பேசினார்.

“இவர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கார் தஞ்சாவூர் தீர்மானத்தை கேன்சல் செய்தாலும் சரி; அல்லது கோர்ட் மூலமே அத்தீர்மானம் அமுலுக்கு வர வொட்டாமல் தடுக்கப்பட்டாலும் சரி; எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. இந்து மதத்தின் யோக்கியதையையும் ஆரியர்கள் யோக்கியதையையும் நாடு அறியக்கூடும். இந்திய சம்பந்தத்தில் (இணைப்பில்) இருந்தும், இந்து மதப் பிடிப்பிலிருந்தும் நம் மக்கள் விலக வேண்டியது அவசியம் என்பதற்கு இவை தக்க ஆதாரங்களாக எனக்கு உதவும் என்கிற தைரியம் எனக்கு உண்டு” என்றார் பெரியார். சென்னையில் மட்டுமல்ல, மதுரை, திருநெல்வேலி, திருச்சி போன்ற நகரங்களிலும் இந்தப் பிரச்சினைக்காக பெரியார் கூட்டங்கள் போட்டுப் பேசினார்.

அப்போது தஞ்சைக்கு இறந்து போன காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி பயணம் மேற்கொண்டார். அவருக்கு மாவட்ட வாரியம், பாத பூஜை செய்து, பிட்சை தருவதற்கு (நிதி தருவதற்கு) நிதி திரட்டியது. ‘சமபந்தி’க்கு தீர்மானம் போட்ட அதே நாடிமுத்து பிள்ளையும், கிருஷ்ணசாமி வாண்டையாரும் தான் இப்படி சங்கராச்சாரி ‘பாத பூஜை’க்கும் ஏற்பாடு செய்தார்கள் என்பதுதான் இன்னும் வெட்கக் கேடானது. அப்போது பார்ப்பன மாணவர்கள் – பார்ப்பனரல்லாத மாணவர்களுடன் சமஸ்கிருத கல்லூரியில் ஒன்றாக உணவருந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அறிந்து கொதித்துப் போனார் சங்கராச்சாரி. சமஸ்கிருதம் பயிலும் பார்ப்பன மாணவர்கள், தனியாகத்தான் உணவருந்த வேண்டும் என்று உத்தரவிட்ட சங்கராச்சாரி, இவர்களின் உணவு செலவுக்கு அவரே பார்ப்பனர்களிடம் பண வசூல் செய்தார். இதை பெரியார் தனது உரையில் சுட்டிக் காட்டி பார்ப்பன வெறியைக் கண்டித் தார்.

சமஸ்கிருத கல்வி பார்ப்பனரல்லாத ‘சூத்திர’ மாணவர்களுடன் ஒன்றாக உணவருந்துவதற்கே தடை போட்ட கொடுமை இங்கே நிலவியது.

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

You may also like...