‘ஜோக்கர்’ : சமூக இயக்கங்கள் ஆதரிக்க வேண்டிய அற்புத திரைக் காவியம்

ஜோக்கர் – தமிழ்த் திரைப்பட வரலாற்றில்  புதிய மைல் கல். ராஜு முருகன் எழுத்து இயக்கத்தில் உருவாகி யுள்ள இத்திரைப்படம், இன்றைய சமூகத்தின் சமூக அரசியல் பொருளாதார அவலங்களை சமரசமின்றி சாட்டையால் அடிக்கிறது. பயன் கருதாமல் சமுதாயத் தின் மீதான கவலையோடு போராடும் இயக்கங்களுக்கான படம் என்றே கூற வேண்டும். சாதி வெறிக்கு, மதவாதத்துக்கு எதிராகவும் இயற்கை வளச் சுரண்டல் களுக்கு எதிராகவும், மனித உரிமைக் காகவும் எந்த பொருள் வசதியும் இல்லாத இயக்கங்கள் போராடினாலும் சரி, விளக்கக் கூட்டங்களை நடத்தினாலும் சரி, துண்டறிக்கைகளை வழங்கினாலும் சரி, அதை கேலிப் பேசவும், ‘வேறு வேலை இல்லாத கூட்டம்’ என்று அலட்சியப் படுத்தவும் செய்யுமளவுக்கு சமூகத்தின் பொதுப் புத்தி சீழ் பிடித்து கிடக்கிறது.

இந்த புறச் சூழல் எதிர்ப்பை புறந்தள்ளி, களத்தில் நிற்கும் இயக்கங்களுக்கு தன்னம்பிக்கையையும் உந்து சக்தியையும் தருகிறது ‘ஜோக்கர்’. அதுவே இப்படத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்ச மாகும். ஜாதி-மத-ஓட்டு அரசியல்களுக்கு வெளியே காவல்துறை அதிகாரவர்க்க அடக்குமுறைகளுக்கு நடுவே களமாடும் இயக்கங்கள். ஆதரித்து வரவேற்கப்பட வேண்டிய படம் ‘ஜோக்கர்’. இதற்காக படைப்பாளி ராஜு முருகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

“நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?” “ஜனாதிபதி வீட்டு கரன்ட் பில்லு எவ்ளோனு கேட்டாக் கூட சொல்லணும்”, “சகாயம் பண்ணுங்கன்னு சொல்லலை… சகாயம் மாதிரி பண்ணுங்கன்னு தான் சொல்றோம்”, “இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா… இப்போ பேள்றதை யும் கஷ்டமாக்கிட்டானுங் களே!…”, “குண்டு வைக்கிற வனையெல்லாம் விட்டுருங்க, உண்டக்கட்டி வாங்கி தின்னுட்டு கோயில் வாசல்ல தூங்குறவனப் புடிங்க”, “உழைக்கிறவன் வண்டியைத் தான போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வெச்சுக்கிடுது? எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூ.வோ துருப்பிடிச்சு நின்னுட் டிருக்கா?…”, “கக்கூஸ் கட்டுன காசு நாறாது” என்று ராஜு முருகன், முருகேஷ் பா வசனங்கள் அனைத்தும் கை தட்டல்களை அள்ளுகின்றன.

“சூப்பர் சிங்கர்ல நம்ம புள்ள கலந்துக்கணும்… அதைப் பார்த்து நாம அழுவணும்… அதை டி.வி.ல காட்டணும்!..” “அவ அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக் கணும்னு குடிக்கிறான்” “இப்போல்லாம் ஹீரோவை விட வில்லனைத்தான் சனங் களுக்குப் பிடிக்குது”, “உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக் காரன்னு தோணுச்சுன்னா… அது எங்க தப்பில்ல!” – இப்படி உண்மையான சமூகத்தின் ஜோக்கர்களை அடையாளம் காட்டும் வசனங்கள் படம் முழுதும் பட்டையைக் கிளப்பு கின்றன.

மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளைப் பயன்படுத்திக் கொண்டு மதம் வளர்த்து விடும் மூடநம்பிக்கைகளையும், இலஞ்ச ஊழல் அதிகார வர்க்கத்தை பார்ப்பனர்கள் எப்படி சூழ்ச்சிகரமாக வழி நடத்துகிறார்கள் என்பதையும் நுட்பமாக சித்தரிக்கிறது திரைப்படம்.

படத்தைப் பார்த்து விட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு, இயக்குனர் ராஜு முருகனிடம் ஓவியம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதில் “விதைத்துக் கொண்டே இரு; முளைத்தால் மரம்; இல்லாவிட்டால் உரம்” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தன. இப்படத்துக்கு வழங்கப்பட்ட மிகச் சரியான பரிசு இது.

“நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா!” என்ற அறைகூவலுடன் படம் நிறைவடைகிறது. படம் முடிந்து கனத்த இதயத்துடன் வாய் பேச முடியாத நிலையில் மக்கள் அரங்கைவிட்டு வெளியேறுவதே இப்படத்தின் வெற்றிக்கான சாட்சி. சமுதாய மாற்றத்துக்கான இயக்கங்கள் ஆதரித்து வரவேற்கப்பட வேண்டிய படம், ‘ஜோக்கர்’.

– இரா

பெரியார் முழக்கம் 25082016 இதழ்

You may also like...