மாவீரர் நாள் பாடல்
மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை
முடிசூடும் தமிழ் மீது உறுதி.
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி.
விழிமூடி, இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம், தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.