என்னை சுய ஜாதிக்குள் அடைத்து விடாதீர்கள்! ‘நான் ஜாதியற்றவன்’ – ப.ரஞ்சித்

  • பெரியாரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்று சிலர் வைக்கும் குற்றச் சாட்டை எப்படி எதிர் கொள்கிறீர்கள்? அம்பேத்கர் குறித்த உரையாடல் எதுவும் இங்கு நிகழவில்லை. இரட்டை மலை சீனிவாசனையும் எம்.சி. ராஜாவையும் இங்கு யாருக்கும் தெரியாது. ஆனால், பெரியார் தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் அறிமுகமானவர். யாருக்கும் தெரியாதவர்களை ஒரு போட்டோவாகவாவது  அறிமுகப்படுத்த வேண்டுமென எண்ணுகிறேன். அதன் விளைவே  இவர்களின் படங்களை வைத்தது. என் தாத்தா ஒரு  பெரியாரிஸ்ட்தான் . பெரியாரை காண்பிக்கக்கூடாது என்று ஒருபோதும் எண்ணியதில்லை. என் அடுத்த ஸ்கிரிப்டான  ‘சார்பட்டா பரம்பரை’யில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை பெரியாரிஸ்டாகத்தான் எழுதியிருக்கிறேன். படம் வரும்போது தெரியும். எனக்கு பெரியாரைப் பிடிக்கும் என்று எல்லா இடங்களிலும் தொடர்ந்து  சொல்கிறேன். எனக்கு  திராவிட இயக்கங்கள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் பெரியார் மீது ஒரு விமர்சனமும் கிடையாது. சரியான வாய்ப்பு வரும் போது இதைப் புரிந்து  கொள்வார்கள் என நம்புகிறேன்.
  • சமூக வலைத்தளங்களில் கபாலியை ஒட்டி உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? எதிர்ப்பை விடுங்கள். ஆதரவை முதலில் நான் கண்டிக்கிறேன். என் ஜாதியொழிப்பு நிலைக்காக  என்னை ஆதரிப்பவர்களைச் சொல்ல வில்லை. சுயபெருமையையும் சுய தம்பட்டத்தையும் நிறுத்த வேண்டும் முதலில். ஏதோ ஓரிடத்தில் எனக்கு பேனர், போஸ்டர் வைத்து பால பிஷேகம் செய்ததாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சி யாகிவிட்டது. என்னை ஒரு  ஜாதிப் பெயர் போட்டு எழுதுவதை நான் விரும்புவதில்லை. என்னை ஒரு ஜாதிக்குள் அடைத்துப் பார்க்க வேண்டாம். நான் ஜாதியை ஒழிக்க வேண்டு மென்று வந்திருக்கிறேன். நான் செய்யும் வேலைக்கு என்னை ஜாதியற்றவன் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆளாக நிறுத்துவதை நான் ஆதரிக்க மாட்டேன். சுயஜாதி பெருமிதம் எதற்கு இங்கே? அந்தப் பெருமிதம் தான் நாளடைவில் உனக்குக் கீழே இன்னொரு ஜாதியை ஒடுக்க நினைப்பதில் போய் முடிகிறது. ஆகவே ஜாதிப் பெருமை வேண்டாம். அதிகாரம் உன்னிடம் இருக்கும்போது அது இன்னொருவனுக்குப் போகிறதென்றால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதிகாரம் கிடைக்கும்போது பிரபலப்படுத்தி, ஆண்டப் பரம்பரையாக இரசித்து ருசித்து உன்னை மாற்றிக் கொள்வாய் என்றால், அந்த அதிகாரம் உனக்கும் கீழே செல்வதற்கான எல்லா  உரிமையும் உள்ளது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். இதுநாள் வரை உன்னை அடக்கியவனுக்கும்  உனக்கும் வித்தியாசம் வேண்டாமா? எனக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்தால் ‘நான் ஆண்ட பரம்பரை’ என்று எனக்குக் கீழ் உள்ளவர்களிடம் மார்தட்ட மாட்டேன். ‘நாமெல்லோரும் சமம்’ என்பேன். ஜாதிப் பெருமையும் ஜாதிஅடையாளமும் தேவையில்லை. பெரியார் ஜாதி ஒழிப்புக்காகப் போராடினார். அவர் ஜாதியை யாரும் அடையாளப்படுத்த வில்லை. ஆனால் அம்பேத்கரை அடையாளப் படுத்தினார்கள். ஏன் அம்பேத்கரையும் பெரியார் மாதிரியான ஒரு பொதுவான தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடாது? நம்மை எதிரியாக  நினைப்பவர்களிடம் நாம் உரையாடலாம். ஆனால் அதற்கு நாம் முதலில்  குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும். அது முக்கியம். நான் நினைப்பதற்கு மாறாக, ஜாதி யொழிப்புச் சிந்தனைக்கு எதிராக தன் ஜாதியைச் சேர்ந்தவன் என்று யாரும் என்னைக் கொண்டாடுவது எனக்கு சுமையாகவே முடியும். அது சமத்துவத்திற்கு எதிரானது.
  • கபாலி பட இயக்குநர் ரஞ்சித் பேட்டியிலிருந்து – அந்திமழை’ ஆகஸ்டு இதழ்

பெரியார் முழக்கம் 11082016 இதழ்

You may also like...