பெண்களின் புதிய அகராதி

சமூகத்தைக் கட்டமைப்பதில் மொழியின் பங்கு முக்கியமானது., மொழி கடவுளின் படைப்பல்ல. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டு, காலம்தோறும் வளர்த்தெடுக்கப்படுவது. ஆணாதிக்கச் சமூகம் மொழியைத் தன் தேவைக்கேற்ப வளர்த்தெடுத்துள்ளது.

மொழியில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் ஏராளம். அண்ணல், வீரன் போன்ற தமிழ்ச் சொற்களுக்கு இணையான பெண்பால் சொற்கள் கிடையாது. அதுபோல, விதவை, மலடி, வாழாவெட்டி, கற்புக்கரசி, பதிவிரதை, முதிர்கன்னி, மோகினி, அணங்கு போன்ற சொற்களுக்கு இணையான ஆண்பால் சொற்கள் கிடையாது. வைப்பாட்டி, தாசி, வேசி, அமங்கலி, வாயாடி, ஓடுகாலி என்று பெண்களைச் சிறுமைப்படுத்தும் ஆணாதிக்கச் சொற்கள் பல தமிழில் உண்டு.

ஆணாதிக்கச் சமூகம் பெண்ணை எப்படிப் பார்க்கிறதோ, அப்படியே அவர்களால் உருவாக்கப்பட்ட மொழியும் பெண்ணைப் பார்க்கிறது. பெண்ணுக்கு உரிய வயதில் திருமணமாகாவிட்டால், அவளை ‘முதிர்கன்னி’ என்று ஏசுகிறது. ஆனால் திருமணமாகாத ஆண், ‘பிரம்மச்சாரி’என்று போற்றப்படுகிறான்.

பெண், திருமணமாகி கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்தால், ‘வாழாவெட்டி’என்று தூற்றப்படுகிறாள். மனைவியைப் பிரிந்து வாழும் ஆடவனுக்கு இந்த அவச் சொல் கிடையாது. குழந்தை பெற்றுத் தராதவள் ‘மலடி’ என்று பழிக்கப்படுகிறாள். ஆணின் மலட்டுத்தன்மை வெளியே சொல்லப்படு வதேயில்லை. கணவனை இழந்த பெண் ‘அமங்கலி’ என்றும் ‘விதவை’ என்றும் பழிக்கப்படுகிறாள்.

ஆனால், மனைவியை இழந்த ஆணுக்கு, ‘புது மாப்பிள்ளை’ என்ற அடையாளம் உண்டு. திருமணமான ஆடவனின் காமத் துக்கு இரையாகும் பெண், ‘வைப்பாட்டி’, ‘சின்ன வீடு’என்றெல்லாம் தூற்றப்படு கிறாள். ஆனால், அதில் ஈடுபடும் ஆண் ‘மைனர்’ என்று கொண்டாடப்படுகிறான்.

புகழ்ச்சியும் மாயையே

ஆணாதிக்கச் சமூகம் பெண்களை பூ, நிலா, தென்றல், தேன், மான், தெய்வம் என்று போற்றுவதைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது. இந்தச் சொற்கள் பெண்களைப் போற்றுவதைப் போல் தோற்றம் தந்தாலும், அவர்களை அடிமைத் தளையில்தான் சிக்க வைக்கின்றன.

பொதுவாக, இந்தச் சமூகத்தில் பெண்கள் கையாளும் சொற்கள், அவர்களிடம் புழங்கும் சொற்கள் மிகக் குறைவே. பெண் அகராதி – அரிசி, சோறு, சாம்பார், கூட்டு, பொரியல், ஊறுகாய், வற்றல், வடகம், புடவை, நகை, தாலி, மெட்டி, மஞ்கள், பொட்டு, அழகுக் குறிப்பு, கோலம் போன்றவற்றைத் தாண்டி அகலமாக்கப்பட வேண்டும். அந்த அகராதியில் மறந்தும் கற்பழிப்பு, பலாத்காரம், பாவப்பட்டவள், விதவை, மலடி போன்ற சொற்கள் இடம்பெறக் கூடாது. மேலும் அச்சம், மடம், நாணம், கற்பு போன்ற சொற்களும், மல்லிகை, அல்வா என்று ஒரு காலத்தில் பெண்களை இழிவுபடுத்திய சொற்களும் இடம் பெறவே கூடாது. பெண் அகராதியில் பெண்ணை ஆணுக்குச் சமமாக முன் நிறுத்தும் புதிய சொற்கள் இடம்பெற வேண்டும்.

பூமி, சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு என்று இயற்கை, மனித சமூகத்துக்குப் பொதுவானதாக அமைந்திருப்பது போல மொழியையும் மனித சமூகத்துக்குப் பொது வானதாக அமைக்க முற்படுவோம்.

‘தமிழ் இந்து’

பெரியார் முழக்கம 03112016 இதழ்

You may also like...