நுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம்-ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும், தனியார் பள்ளிகளில் 25ரூ இட ஒதுக்கீட்டை முழுமையாக நடை முறைப்படுத்தவும், பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பை கைவிடக் கோரியும். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் மாநில அமைப்பாளர் பாரி சிவக்குமார் தலைமையில் 7.7.2016 அன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகை அருகே திரண்ட தோழர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர் பின்னர் ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்ட மாணவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இப் போராட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், விவேக், பல்லடம் மதிவாணன், மயிலாடுதுறை கார்த்திக், மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த பாரி மைந்தன், பார்வைதாசன், பகலவன், ரம்யா, கலை, செம்பியன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 14072016 இதழ்