ஹரித்துவாரில் கங்கை கரையில் சிலை திறப்பை பார்ப்பனர்கள் தடுத்து நிறுத்தினர் திருவள்ளுவர் தீண்டப்படாதவராம்!

திருவள்ளுவர் தீண்டப்படாத சாதிக்காரர். எனவே அவர் சிலையை ஹரித்துவார் கங்கை நதிக் கரையில் நிறுவ அனுமதிக்க முடியாது என்று பார்ப்பன சாமியார்கள், பார்ப்பன அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளுவர் சிலை திறப்பையும் நிறுத்தி விட்டனர்.

தருண் விஜய் என்ற பா.ஜ.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்மைக்காலமாக திருக்குறள் மீது தனக்கு மிகவும் ஈடுபாடு இருப்பதாகக் கூறி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவப் போவதாக கன்யாகுமரியிலிருந்து திருவள்ளுவர் சிலையை பல ஊர்கள் வழியாக ‘யாத்திரை’யாகக் கொண்டு சென்றார். கடந்த ஜூன் 29ஆம் தேதி கங்கை நதிக்கரையில் ‘ஹர்கி பவுரி’ என்ற இடத்தில் சிலை நிறுவ ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஜன. 28ஆம் தேதியே பார்ப்பன புரோகிதர்களும் பார்ப்பன சாமியார்களும் சிலை நிறுவுவதை எதிர்த்து போராடத் தொடங்கிவிட்டனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம், “திருவள்ளுவர் தீண்டப்படாத சமுதாயத்தில் பிறந்த ஒரு தலித். அவரது சிலையை புனிதமான கங்கை நதிக் கரையில் அனுமதிக்க முடியாது” என்பதாகும். இதே நதிக்கரையில் பல்வேறு மதத் தலைவர்களின் சிலைகள் ஏற்கெனவே நிறுவப்பட் டிருக்கின்றன.

அதற்குப் பிறகு, ‘சங்கராச்சாரி சதுக்கம்’ என்ற இடத்தில் சிலையை நிறுவ முடிவு செய்து சிலையை அங்கே கொண்டு சென்றனர். இந்த இடத்திலும் திருவள்ளுவர் சிலையை அனுமதிக்க முடியாது என்று சுபரூபானந்த சரசுவதி எனும் பார்ப்பன சாமியார் தலைமையில் பார்ப்பனர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சதுக்கத்தில் ஆதி சங்கரர் சிலை இருக்கிறது. எனவே திருவள்ளுவர் சிலையை அனுமதிக்க முடியாது என்றும், இந்தப் பகுதியை அரசாங்கம், ஆதிசங்கரர் அறக்கட்டளைக்கு வழங்கி விட்டதால், இது அறக்கட்டளைக்கு உரிய இடம் என்றும் கூறி விட்டார்கள். எனவே அந்த இடத்திலும் சிலையை நிறுவ முடியாமல் உத்தரகாண்ட் அரசுக்கு சொந்தமான பொதுப் பணித் துறை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இப்போது வைக்கப்பட்டுள்ளது. இது திருவள்ளுவருக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கே இழைத்துள்ள அவமதிப்பு.

தருண் விஜய் என்ற பா.ஜ.க. முன்னாள் எம்.பி., உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜவுன்சார் பவார் எனும் பகுதியில் அங்குள்ள கோயிலில் தலித் மக்கள் அனுமதிக்க மறுக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். தலித் மக்களோடு சேர்ந்து கோயிலுக்குள் நுழைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பார்ப்பன புரோகிதர்கள், தருண் விஜய் மீதும் தலித் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். இதைக் கண்டித்து கடந்த மே 14ஆம் தேதி தருண் விஜய் அளித்த பேட்டியில், பார்ப்பன புரோகிதர்களைக் கடுமையாக விமர்சித்தார். பக்தர்கள் அதிகமாகக் கூடும் ஹரித்துவார் பகுதியில் புரோகித பார்ப்பனர்கள் ஜீன்ஸ் பேண்ட், ‘டி’ சட்டைகள், கூலிங் கிளாஸ் அணிந்து கோயில்களில் பூஜை செய்வதை அவர் கண்டித்தார். ‘இப்படி சம்பிரதாய ஆச்சாரங்களை மாற்றிக் கொள்ளும் புரோகிதர்கள், தலித் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மட்டும் மறுப்பது ஏன்?’ என்று கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பார்ப்பன புரோகிதர்கள், தருண் விஜய் உருவ பொம்மைகளை எரித்தனர். ‘தலித்’ மக்களை கோயிலுக்குள் அழைத்து வந்தவர், இப்போது தலித் திருவள்ளுவரை ஹரித்துவாருக்கு கொண்டு வருகிறார் என்று பார்ப்பனர்கள் ஜாதி வெறியோடு குற்றம் சாட்டுகிறார்கள்.

உலகப் பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவரை ஆரியப் பார்ப்பனர்கள் தீண்டப்படாதவர் என்று ஜாதி வெறியுடன் அவமதிப்பது தமிழர்களின் உணர்வுகளுக்கு விடும் சவால். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழியாகும். சமஸ்கிருதம், இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. தென்னாட்டில் ஊடுருவிய பார்ப்பனர்கள், தமிழர் வாழ்வையும் தமிழ் மொழியையும் சிதைத்து, சமஸ்கிருத மாக்கும் முயற்சிகளில் இறங்கினர். தமிழர்களின் ஊர்ப் பெயர்கள், கடவுள் பெயர்கள் சமஸ்கிருதமாக்கப்பட்டன. இதை எதிர்த்து பண்பாட்டுத் தளத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் மொழித் தளத்தில் மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்களும் போராடினர்.

ஆனால், சமஸ்கிருத பண்பாடு ஆழமாக ஊடுருவி நிற்கும் வட மாநிலங் களில், பார்ப்பனர்கள் வர்ணா ஸ்ரமத்தையும் தீண்டாமையையும் இப்போதும் பின்பற்றுகிறார்கள். எனவே தான் திருவள்ளுவர் சிலையைக்கூட தீண்டப்படாத சிலையாக அவமதிக் கிறார்கள். தமிழர்களிடத்தில் சமஸ்கிருதம் வழியாக பார்ப்பனியம் எப்படி ஊடுருவியது என்பதை வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (இவர் தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றம் செய்து கொண்டார்), தனது, ‘தமிழ் மொழியின் வரலாறு’ எனும் நூலில் விளக்குகிறார். சமஸ்கிருத வடமொழியாளர்கள் தமிழர்களின் ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து, அதற்கேற்ப வடமொழி நூல்களை எழுதினார்கள். தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு ஸ்தல புராணங்களையும் அவர்களே வடமொழியில் எழுதி தமிழர்கள் மீது திணித்தனர் என்று குறிப்பிடுகிறார்.

“தமிழர்களிடத்து இல்லாதிருந்த அந்தணர் (பிராமணர்), அரசர் (ஷத்திரியர்), வணிகர் (வைசியர்), வேளாளர் (சூத்திரர்) என்ற நால்வகை சாதிமுறையைமெல்ல மெல்ல நாட்டி விட்டனர். இன்னும் அவர்கள் புத்தி நலன் (சூழ்ச்சித் திறன்) காட்டித் தமிழ் அரசர்கள் எனவும், மேல் அதிகாரப் பிரபுக்கள் எனவும் அமைத்து கொண்டனர்” என்று குறிப்பிடுகிறார். இப்படி வடமொழி வழியாக தமிழர் அடையாளங்களை பார்ப்பனர்கள் சிதைத்தார்கள்.  உத்தரகாண்ட் மாநில முதல்வரும் கடைசி நேரத்தில் சிலை திறப்பு நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டார். தங்களது  கங்கைப் பகுதியில் பார்ப்பனியத்துக்கு நேர் எதிரான தமிழ் மறை தந்த திருவள்ளுவர் சிலையை இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பார்ப்பன இந்துத்துவம், சமஸ்கிருதத்தை ஒரு பக்கம் கல்வியில் திணிக்கிறது. ஆனால் வள்ளுவரை வடக்கே ‘இந்துத்துவ’ பார்ப்பனியம் ஏற்க மறுக்கிறது.

“தருண் விஜய் நடத்திய இந்த சிலை திறப்பு நிகழ்விற்கு உள்ளூர் பா.ஜ.க.வினர் ஆதரவோ, ஒத்துழைப்போ இல்லை” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூலை 1) செய்தி வெளியிட்டிருக்கிறது.

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

You may also like...