வாஸ்து மோசடியை எதிர்த்து நுகர்வோர் கழகத்தில் புகார்
அண்மைக் காலமாக வேகமாகப் பரவி வரும் மூட நம்பிக்கைகளில் ஒன்று ‘வாஸ்து’. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், செல்வந்தர்கள் என்று வசதி படைத்தவர்கள் ‘வாஸ்து’ மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றனர். தெலுங்கானா முதலமைச்சரான சந்திரசேகர ராவ், தனது ஆலோசகராக ‘வாஸ்து’ பண்டிதர் ஒருவரை நியமித் திருக்கிறார். பல தொலைக்காட்சி நிறுவனங்கள், ‘வாஸ்து’ மோசடிக்காரர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துவது தொலைக்காட்சிகளுக்கான நெறிமுறைகளுக்கே எதிரானது. கருநாடக மாநிலத்தில் ஒரு தொலைக்காட்சியில் ‘சரலா வாஸ்து’ என்ற நிறுவனம் ஒரு விளம்பர நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பேசிய வாஸ்து ‘குருஜி’ ஒருவர், தனது ‘வாஸ்து’ அறிவுரைப்படி வீடுகளை மாற்றியமைத் தவர்கள் பல்வேறு சிக்கல்கள், பிரச்சினைகளிலிருந்து விடுபட்ட தாகக் கூறினார்.
இதைப் பார்த்து நம்பிய கருநாடகத்தைச் சார்ந்த ஒருவர், இந்த நிறுவனத்தின் ஆலோசனை பெற்று, பல இலட்சம் ரூபாய் செலவு செய்து தனது வீட்டை மாற்றி யமைத்தார்.இந்த ஏமாந்த மனிதரின் பெயர் மகாதேவ் துதிதால். வாஸ்து நிறுவனம், இதற்காக அவரிடம் ரூ.11,600 வசூலித்தது. மாதங்கள் பல ஓடியும், ‘வாஸ்து’ மாற்றங்களால் அவர் பிரச்சினை ஏதும் தீராத நிலையில் இப்போது கருநாடக நுகர்வோர் அமைப்பில் புகார் செய்திருக்கிறார். புகாரை ஏற்றுக் கொண்ட நுகர்வோர் அமைப்பு, வாஸ்து நிறுவனத்துக்கு ‘நோட்டீசு’ அனுப்பியுள்ளது. ‘வாஸ்து’ நிறுவனத்துக்கே இப்போது ‘வாஸ்து’ சரியில்லை போலும்! தங்கள் நிறுவனத்தை வாஸ்து முறைப்படி மாற்றி அமைப்பார்களா என்பது தெரியவில்லை.
பெரியார் முழக்கம் 17032016 இதழ்