இந்து முன்னணி வன்முறை கும்பலை தடை செய்! திருப்பூரில் 2500 தோழர்கள் கைது!
தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுறுத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டு கைதானார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும், கடைகளுக்கு அச்சுறுத்தலாககலவரத்தை ஏற்படுத்தும் இந்து முன்னணியை தடை செய்யவும், அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய்யவும் வலியுறுத்திப் பேசினர்.கோவையில் வன்முறையாளர்கள் நடத்திய கலவரம், சூறையாடல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்களை காவல்துறை ஆங்காங்கே வழிமறித்து கைது செய்தது. மேட்டூர் காவலாண்டியூரிலிருந்து திருப்பூர் வந்த கழகத் தோழர்களை காவல்துறை பாதி வழியிலேயே கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்தது.
பெரியார் இயக்கம் – தமிழகத்தில் மிகச் சிறந்த மரபை உருவாக்கியிருக்கிறது. இஸ்லாமி யர்களுடன் நல்லுறவை வளர்த்தெடுத்த அந்த மரபின் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத் திருக்கிறது என்று நிகழ்வில் பேசிய இஸ்லாமிய தலைவர்கள் மனம் திறந்து பாராட்டினர். கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலை 7 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டனர்.
பெரியார் முழக்கம் 06102016 இதழ்