சமஸ்கிருத திணிப்பை மோடி அரசு கைவிடவேண்டும் – மன்னார்குடி திவிக ஆர்பாட்டம்
மன்னார்குடி ஜூலை 9
மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துக்கள் ஏராளம் இருப்பதாக கூறி, ஐஐடிகளிலும், மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும், சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அலுவல் மொழிகள் பட்டியலில் எட்டாவது மொழியாக சமஸ்கிருதத்தை அறிவித்துள்ளது. இவற்றை கைவிட வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி மனிதநேய ஜனநாயகட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜகபர்சாதிக், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் சேக்தாவூத், தொகுதி தலைவர் முகமது அலி தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறுநீலகண்டன், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாடசி சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் தொகுதி துணை செயலாளர் ஆதவன், மன்னை ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் முரளி, மாற்றத்திற்கான மக்கள் களம் அமைப்பாளர் சிமா மகேந்திரன், திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட அமைப்பாளர் பாரி உள்ளிடடோர் கண்டன உரையாற்றினர்.
சிறப்புரையாற்றிய தஞ்சை விடுதலைவேந்தன், தனது உரையில் இந்தியா என்பது ஒரு மதசார்பற்ற நாடு, இந்த நாட்டில் பல்வேறு மொழி பேசுகின்ற மக்கள் இருக்கின்றனர். பல்வேறு மதங்களை பின்பற்றக்கூடிய மதங்கள் இருக்கின்றன ஆனால் சில ஆயிரம் மக்கள் மட்டும் பேசும் சமஸ்கிருதத்தை மத்திய பாஜக அரசு மத்திய அர-சு பள்ளிகளில் கட்டாயம் என அறிவித்திருப்பது உயர்ஜாதி ஆதிக்கத்ததை இம்மண்ணில் மீண்டும் நிறுவதற்கு செய்கின்ற முயற்சியாகும்.
இது இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களுக்கு எதிராக மத்திய மோடியரசு சமஸ்கிருதத்தை கட்டாயமாக திணிப்பதன் மூலம் மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் இயங்குகின்ற மத்திய அரசு பள்ளிகளிலும், மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும், சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதனை மீறி எங்கள் மீது சமஸ்கிருதம் திணிக்கப்படுமேயானால் மத்திய அரசு பள்ளிகள் முன்பு மாபெரும் மறியல்போராட்டங்கள் நடைபெறும். மேலும், அப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களை தமிழகத்தில் இயங்குவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். உடனடியாக மத்திய அரசு சமஸ்கிருத தினிப்பை கைவிட்டு மத்திய அலுவல் மொழிகள் பட்டியலில் எட்டாவது மொழியாக சேர்த்திருக்கின்ற சமஸ்கிருதத்தை நீக்க வேண்டும் என கூறினார்.