சிறப்பு வினா… விடைகள்…

சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன், விஜயேந்திரன் விடுதலை.  – செய்தி

‘ஆன்ம விடுதலை’ கிடைக்கிறதோ இல்லையோ; இந்த ‘பூத’ உடலுக்காவது விடுதலை கிடைத்ததே!

நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டபோது ஜெயேந்திரர் முகம் இறுக்கத்துடன் காணப் பட்டது. விஜயேந்திரர் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். – செய்தி

அப்படி என்ன சிந்தித்துவிடப் போகிறார்கள்? போயும் போயும் ஒரு ‘சூத்திர’ நீதிபதி நம்ம ‘தலைவிதி’யை நிர்ணயிக்கிறானே என்று சிந்தித்திருப்பார்கள்!

தீர்ப்பு வெளிவந்தவுடன் செய்தியாளர்கள், ஜெயேந்திரனிடம் பேச முற்பட்டபோது அவர் கையை மட்டும் அசைத்தார். ‘சுவாமிகள் மவுனவிரதம்’ இருப்பதாக சீடர்கள் தெரி வித்தனர்.  – செய்தி

மவுன விரதம் இருப்பதாக – சாமிகள் சீடர்களிடம் கூறியிருப்பார் போல!

தீர்ப்பு வந்தவுடன் ஜெயேந்திரர் புதுச்சேரி யிலிருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து காரில் திருச்செந்தூர் போய் சாமி தரிசனம் செய்தார்.  – செய்தி

ஆதி சங்கரர் நடந்தே போனார்; அவரது ‘வாரிசு’ தனி விமானத்தில் பறக்கிறது.

பாரத வரலாற்றில் மகான்கள் தங்கள் தவவலிமையில் இன்னல்களைக் கடந்து இறைவனின் ஆட்சியை நிறுவிய வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது.  – இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை

அரசு சாட்சிகளைப் பல்டி அடிக்க வைப்பதற்கும் ‘தவ வலிமை’ பயன்படும் போல!

தீர்ப்பு வந்தவுடன் சீடர்கள் புதுச்சேரி நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதி தேவதை சிலை முன் தேங்காய் உடைத்து பூஜை செய்ய முயன்றனர்.  – செய்தி

‘நீதி’ தேவதை யை இந்து கடவுள் பட்டியலில் சேத்துட்டேளா? அது ‘சூத்திரன்’ வடித்த ‘பிரதிஷ்டை’ செய்யப்படாத சிலை, தெரியுமோ?

திருச்செந்தூர், திருப்பதியில் ஜெயேந்திரர் தரிசனம் செய்தார்.   – செய்தி

வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு எப்போது ‘விஜயம்’ சாமி?

காஞ்சி சங்கர மடத்தில் சீடர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி.   – செய்தி

நல்லா கொண்டாடுங்கோ! வெடிச் சத்தம் சங்கர்ராமன் குடும்பத்துக்கு கேட்கனும்!

பெரியார் முழக்கம் டிசம்பர் இதழ்

பெரியார் முழக்கம் இதழ் 05122013

You may also like...