அபிஷேகத் தீர்த்தமா… அய்யய்யோ ஆபத்து!
‘ஆன் லைன்’ வழியாக ‘ஆர்டர்’ செய்தால் ‘கங்கை நீர் பாக்கெட்’ அஞ்சலகம் வழியாக இல்லங்களைத் தேடி வரும் திட்டத்தை பா.ஜ.க. ஆட்சி தொடங்கப் போகிறதாம். உலகிலேயே மிகவும் ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டுள்ள ‘கங்கை’ நீர் புனிதமானது என்று மக்களை நம்ப வைக்கிறது மோடி ஆட்சி. கங்கையை சுத்தப்படுத்தப் போவதாக ரூ. 25000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்காகவே ஒரு அமைச்சர் முழு நேர வேலையாக அலைந்து கொண்டிருக்கிறார்.
நோய்க் கிருமிகளும் கழிவுகளும் நிறைந்து சாக்கடையாக மாறி நிற்கிறது கங்கை நீர். இங்கே அன்றாடம் ஆயிரக்கணக்கான பிணங்கள் எரியூட்டப்படுகின்றன. அவற்றின் சாம்பல் கரைக்கப்படுவது இந்த கங்கையில்தான். கங்கையில் கரைப்பதற்காகவே வெளியூர் களிலிருந்து ‘சாம்பல்கள்’ கொண்டு வரப்படுகின்றன. இறந்துபோன பிணங்களை எரியூட்டாமல் அப்படியே கங்கையில் வீசும் பழக்கமும் தொடருகிறது. கங்கையில் சாம்பலை கரைத்தால் உடனே ‘மோட்ச’த்தில் அவர்களுக்கான இடம் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது என்ற மூட நம்பிக்கையே இதற்குக் காரணம். கங்கை நதிக்கரையோரம் உள்ள நகரங்களிலிருந்து வெளிவரும் தொழிற்சாலை கழிவுகள், சாக்கடைகள் கங்கையில்தான் கலக்கின்றன.
இதைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் நீண்டகாலமாக வேலை செய்து வருபவர் சித்தானந்த சரசுவதி எனும் சாமியார். அவர் ஒரு அபாயச் சங்கை ஊதியிருக்கிறார். “கங்கை நீரைக் குடிப்பதால் ஆண்டுதோறும் உயிர் இழப்போர் எண்ணிக்கை 10 இலட்சம்” என்கிறார். அதிர்ச்சியடைந்த பா.ஜ.க. தலைவர் அத்வானி, “தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலைவிட ஆபத்தானது கங்கை நீர்” என்று தனது டிவிட்டரில் பதிவிட்டார். ஆனாலும் என்ன?
மோடி ஆட்சி, ‘இந்து’ மக்களின் உயிரைவிட இந்து மதத்தின்
‘புனித’த்தை உயர்வாக மதிக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறது? மகாமக குளத்தில் முழுக்குப் போட்டால் செய்த பாவம் எல்லாம் பறந்தோடிப் போகும் என்று நம்புகிறார்கள். அந்த குளத்தில் தண்ணீர் இல்லை. ‘புனித நீர்’ குளத்துக்கு வெளியே ஆழ் குழாய் அமைத்து குளத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடி நீரை அசுத்தமாக்கி, அதில் முழுக்குப் போட்டு, ‘பாவம்’ தொலைக்கிறார்கள். இராமேசுவரத்தில் ‘மகாளய அமாவாசை’ நாளில் அங்குள்ள கடலில் முழுக்குப் போட்டு ‘பாவம்’ தொலைப்பதற்கு ‘அக்னி தீர்த்தம்’ என்கிறார்கள். மூழ்குவது தண்ணீரில், அதற்குப் பெயரோ அக்னி தீர்த்தமாம்; அதாவது நெருப்பு தீர்த்தம். பார்ப்பான் எப்படி எல்லாம் காதில் பூ சுற்றுகிறான் பாருங்கள்.
கோயிலில் கருப்பகிரகத்தில் பகவானுக்கு அன்றாடம் பார்ப்பனர்கள் ‘அபிஷேகம்’ செய்கிறார்கள். அதாவது ஆண்டவனை குளிக்க வைக்கிறார்கள். மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் ‘அபிஷேக தீர்த்தம்’ குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி ஆய்வு செய்தார்.
அவரது பெயர் இந்திரா காந்தி.
அந்த ‘அபிஷேக தீர்த்தம்’ சென்னை கிண்டியில் உள்ள ‘கிங் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அப்போதுதான் அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்தன. ‘அபிஷேக நீரில்’ ஆபத்தான நோய்க் கிருமிகள் இருந்தன. இது அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.
‘நோய்க் கிருமி’களை சாகடிக்கும் சக்தி, வேத மந்திரம் ஏற்றப்பட்ட
‘மூலவர்’ பகவானுக்கே கிடையாது என்பதுதான் உண்மை.
‘மடப்பள்ளி’களில் விற்கப்படும் ‘பிரசாதங்கள்’, உணவுக் கட்டுப்பாடு
சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதாக தெரியவில்லை.
அப்படி ஒரு கோரிக்கை வந்தால் அய்யோ, ஆகமத்துக்கு எதிரானது என்று அலறத் தொடங்கி விடுவார்கள்.
தமிழர்களே, எத்தனை காலம்தான் இந்த மூடநம்பிக்கைகளில்
மூழ்கிக் கிடக்கப் போகிறீர்கள்?
பெரியார் முழக்கம் 23062016 இதழ்