பாசிசத்தை ஆதரிக்கும் பார்ப்பனிய அமைப்பு பா.ஜ.க.
காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜன.30 அன்று சென்னையில் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாசிச எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து:
பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு அமைப்பு. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் தேர்வு செய்யப்பட்டவர். மோடி-ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து, பிறகு பா.ஜ.க.வுக்குள் திணிக்கப்பட்டவர். மோடியை பிரதமர் வேட்பாளராக அத்வானி ஏற்க மறுத்தார். உடனே ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு சமரசம் செய்தது. அத்வானி விருப்பம் இல்லாவிடிலும் ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்கு அடிபணிந்தார். இப்போது ‘தேசம் – தேச முன்னேற்றம் – வல்லரசு – இந்திய குடிமகன்’ என்ற சொல்லாடல்களை முன் வைத்து பா.ஜ.க.வும் மோடியும் தேர்தலை அணுகுகிறது. தங்களின் ‘மதவாதம் – இந்துராஷ்டிரம்’ என்ற அடிப்படையான கொள்கைகளை தற்காலிகமாக மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்., இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைத்து இந்துக்களின் ராஷ்டிரத்தை வேத புராண சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கு வதை இலட்சியமாகக் கொண்டு செயல்படக் கூடிய அமைப்பு. அதற்கு ஆட்சி அதிகாரம் தேவை. அந்த அதிகாரத்தைக் கைப்பற்ற தங்களின் சுதேசி கொள்கைகளையும் காற்றி பறக்கவிட்டு, பன்னாட்டு பகாசுர தொழில் நிறுவனங்களின் ஆதரவோடு களத்துக்கு வந்துள்ளார்கள். இந்திய அதிகாரத்தை இப்போதும் தங்கள் பிடிக்குள் வைத்துள்ள பார்ப்பன அதிகார வர்க்கம் பா.ஜ.கவுக்கும் – கார்ப்பரேட் நிறுவனங்களை இணைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. இதே சக்திகளோடு தான் காங்கிரசும் கட்டிபுரண்டு உறவாடியது. அந்த உறவுதான் ஊழல்களாக வெளிவந்தன. காங்கிரஸ் மக்கள் வெறுப்பை சந்திக்கும் என்பது உறுதியான நிலையில். அதே சக்திகள் காங்கிரசை கைகழுவி பா.ஜ.க.வை அரவணைக்கத் தொடங்கி விட்டன.
வி.பி.சிங் மண்டல் அறிக்கையை அமுல்படுத்திய போது அதைக் கடுமையாக எதிர்த்து நாடாளு மன்றத்தில் தண்ணீரைக் குடித்துக் கொண்டே நீண்டநேரம் பேசியவர்தான் ராஜிவ் காந்தி; மறந்து விடக் கூடாது. மண்டல் பரிந்துரையை அமுல்படுத்தி யதற்காக ராமன் கோயில் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு வெறியாட்டம் ஆடி, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்ததும் பா.ஜ.க. தான். பா.ஜ.க., வி.பி.சிங் ஆட்சிக்குத் தந்த ஆதரவை திரும்பப் பெற்றது. இது வரலாறு. தனியார் துறையில் இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, தொழில் நிறுவனங்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்து அதை கிடப்பில் போட்டதையும் மறந்துவிடக் கூடாது. அர்ஜூன் சிங் மனித வளத் துறை அமைச்சராக இருந்தபோது உயர் கல்வியில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொண்டுவர முயற்சித்தபோது, பார்ப்பன-பன்னாட்டு நிறுவனங்களில் எதிர்ப்புக்கு அடிபணிந்து அதை நீர்த்துப் போகச் செய்ததும் இதே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தான்!
மண்டல் பரிந்துரையைக் கொண்டுவந்த வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த அதே பா.ஜ.க.தான், தமிழ்நாட்டில் மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் என்றும், பிற்படுத்தப்பட்டவரை முதல்வராக்கப் போகிறோம் என்றும் காதில் பூ சுற்றுகிறது. அவர் ஆட்சி செய்யும் குஜராத்தில் பிற்படுத்தப்பட் டோருக்கான உரிமைகளையும் வாரி வழங்கிட வில்லை. மோடியின் குஜராத்தில் அவர் மூன்று முறை அவர் ஆட்சியைக் கைப்பற்றியும், ஒரு முஸ்லீம்கூட அவரால் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்தப் பட்டதில்லை. குஜராத் கலவரத்தில் மோடி பொடாவில் கைது செய்த அத்தனை பேரும் இஸ்லாமியர்களே! படுகொலை செய்த வன்முறை யாளர்களைக் காப்பாற்றவே அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர் மோடி.
இப்போது ‘இந்தியா’ என்ற நாட்டை வல்லர சாக்கிக் காட்டுகிறேன் என்று மோடி சூளுரைக்கிறார். ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். பா.ஜ.க.வானாலும் சரி, ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகளானாலும் சரி, எந்த அமைப்பாவது ‘இந்தியா’ என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறதா? ஏன் பயன்படுத்தவில்லை? அதற்கு பதில் சொல்லத் தயாரா? அவர்கள் சொல்ல மாட்டார்கள். நாங்கள் அதற்கான காரணத்தைக் கூறுகிறோம். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். சும் ‘இந்தியா’வை ஏற்கவில்லை. அவர்கள் ‘பாரத்’, ‘பாரதியம்’ என்பதைத்தான் ஏற்கிறார்கள். இதற்கான காரணத்தை ஆர்.எஸ்.எஸ். சுக்கு கொள்கைகளை வழங்கிய கோல்வாக்கர் இவ்வாறு விளக்குகிறார்:
“ ‘பாரத்’ என்பது நமது தாயைக் குறிக்கிறது. ஒரு பெண்ணை – அவளுடைய மகனின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதே நமது கலாச்சார மரபு. அதன்படி, நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பு, நமக்கு முன்னால் பிறந்த நமது மூத்த சகோதரன் பரதன். அவன் மாவீரன். வெற்றிகரமான அரசன். இந்து ஆண் மகனின் சின்னம்; மகனின் பெயரால் – தாயைக் குறிப்பிடுவதும், நமது கலாச்சார மரபின்படி – தாய் நாட்டை ‘பாரத மாதா’ என்கிறோம். நாம் அனைவரும் பாரதியர்கள்.
‘பாரதியா’ என்பது நம்முடைய பழமையான பெயர். நமக்கு நினைவு தெரியாத காலம் முதல் இந்தப் பெயர் இருக்கிறது. வேதத்தில்கூட இந்தப் பெயர் இடம் பெற்றுள்ளது. நமது புராணங்கள் கூட நமது தாய்நாட்டை ‘பாரத்’ என்றும் – நமது மக்களை ‘பாரதியர்கள்’ என்றும் சுட்டுகிறது. உண்மையில் – ‘பாரத்’ என்பது – ‘இந்து’ என்பதுதான்! இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான் – என்று விளக்குகிறார் கோல்வாக்கர்.
ஆக பாரத நாடு என்பதும் – பாரதிய ஜனதா கட்சி என்பதும், ‘பாரத வங்கி’ என்பதும் (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்பதற்கு அந் நிறுவனம் தந்துள்ள தமிழ்ப் பெயர் இது) இந்து மதத்தோடு தொடர்புடைய குறியீட்டுச் சொற்களேயாகும். ‘இந்து தேசம்’ என்பதன் மறுபெயர்தான் ‘பாரத தேசம்’ என்கிறார் கோல்வாக்கர்!
ஆனாலும், ‘பாரதியம்’ – ‘பாரதம்’ என்ற சொற்கள் சரியான பொருளில் இப்போது பயன்படுத்தப் படாததால் – அதற்குப் பதிலாக ‘இந்து’ என்றே இப்போது குறிப்பிடுவதாகச் சுட்டிக் காட்டுகிறார் கோல்வாக்கர். மேலும் அவர்…
“இன்று, பாரதியம் – பாரத் என்ற சொற்கள் கூட – தவறான பொருளில் பயன்படுத்தப்படு கின்றன. ‘இந்தியா-இந்தியன்’ என்ற சொல் லுக்கு மாற்றாக, அதைப் பயன்படுத்து கிறார்கள். ‘இந்தியன்’ என்ற சொல், இந்த நாட்டில் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி போன்ற பல்வேறு சமூகத்தவரையும் சேர்த்துத் தான் குறிக்கிறது. நம்முடைய சமூகமான ‘இந்து’வை மட்டும் குறிப்பதில்லை! நம்முடைய சமூகத்தை மட்டும் குறிக்கும் ‘பாரதிய’ என்ற சொல்லை, மற்ற சமூகத்தினரையும் இணைத்துக் கொள்ளும் சொல்லாகக் குறிப்பிடுகிறார்கள்; எனவேதான், ‘இந்து’ என்ற குழப்பமில்லாத சரியான சொல்லையே இப்போது நாம் பயன்படுத்துகிறோம்” என்கிறார் கோல்வாக்கர்!
ஆக, இந்தியா என்ற சொல்லையே – ‘சங் பரிவாரங்கள்’ ஏற்க மறுக்கின்றன; அதனால் தான் தங்களது அரசியல் கட்சிக்குக்கூட ‘பாரதிய ஜனதா கட்சி’ என்றே பெயர் சூட்டுயிருக்கின்றன. இந்தியா என்ற கோட் பாட்டையே – மதவெறிக் கண்ணோட்டத்தில் ஏற்க மறுக்கும் ஒரு கட்சிதான் இந்தியாவின் தேச பக்திக்கு உரிமை கொண்டாடி, நாடகம் நடத்தி வருகிறது.
பா.ஜ.க.வும் – ஆர்.எஸ்.எஸ்.சும் ‘பாசிசம்’ என்று ஹிட்லர், முசோலினி முன் வைத்த இனவெறுப்பு, இன அழிப்புக் கொள்கையின் வாரிசுகள். பார்ப்பன மேலாண்மையை வலியுறுத்தும் ‘இந்து’ சமூக அமைப்பைச் சுட்டிக் காப்பாற்றுவதற்கு பிற மதத்தினரை மதமற்றவர்களை எதிரிகளாகக் கருதி ஒழிப்பதற்கு ஹிட்லர், முசோலினி கொள்கைதான் சரியானது என்பதை ஏற்றுக் கொண்டவர்கள் இவர்கள்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கொள்கையை வகுத்துக் கொடுத்த கோல்வாக்கர், இதை வெளிப்படையாகவே எழுத்து மூலமாகவே எழுதி வைத்திருக்கிறார்:
“ஜெர்மன் இனப் பெருமை இன்று உலகம் முழுதும் பேசப்படுகிறது. அது தனது இனத்தை யும் தூய்மையான கலாச்சாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளவே ‘செமிட்டிக்’ இனத்தவரான யூதர்களை வெளியேற்றி, உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதான் ஒரு இனத்தின் பெருமையை வெளிப்படுத்தும் மிக உயர்ந்தபட்ச நடவடிக்கை. ஆழமான வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு இனங்களையும், கலாச்சாரங் களையும் ஒன்றுபடுத்தவே முடியாது என்பதை ஜெர்மன் நிரூபித்திருக்கிறது. இந்துஸ்தானத்தில் வாழும் நமக்கு இது ஒரு படிப்பினை” – (கோல்வாக்கர் ‘நாம் அல்லது நமது தேசத்தின் வரையறை’ நூல்)
இந்துக்களை இனமாகக் கட்டமைப்பதே கோல்வாக்கரின் அடிப்படை நோக்கமாக இருந்தது. எனவே இந்தத் தேசம் ‘இந்துக்களின் தேசம்’ என்றார். இந்தத் தேசத்தின் எதிரிகளாக இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சித்தரிக்ககிறார்.
“இந்துக்கள்தான் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள்; வேறு எங்கிருந்தும் இங்கே வந்துவிட வில்லை; நாம் எங்கிருந்து தோன்றினோம் என்பதை எத்தகைய வரலாற்றுச் சிந்தனைக் குள்ளும் அடக்க முடியாது. நமக்குத் துவக்கமே கிடையாது; நாம் அநாதிகள்” என்கிறார் கோல்வாக்கர். (மேற் குறிப்பிட்ட அதே நூல்)
இப்படி கோல்வாக்கர் கூறும் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள்தான்! இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை ஒதுக்கிய – வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக் கொண்ட ஆரிய தேசத்தை அமைப்பதையே லட்சியமாகக் கொண்டவர்கள்.
முசோலினியுடன் சந்திப்பு
இது தொடர்பாக மற்றொரு வரலாற்றுத் தகவலையும் சுட்டிக் காட்ட முடியும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாக்பூரில் உருவாக்கிய அய்ந்து பார்ப்பனர்களில் ஒருவரான பி.எஸ். மூஞ்சே, 1930இல் லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்து இத்தாலிக்குச் சென்று பாசிசத் தலைவர் முசோலினியை சந்தித்துப் பேசியதை கிறிஸ்டோப் ஜாபர்லெட் தனது ஆய்வு நூலில் (இந்துதேசிய இயக்கமும்,இ இந்திய அரசியலும்) சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மார்சியா காசலோரி எனும் இத்தாலிய ஆய்வாளர், இது தொடர்பாக இத்தாலி மற்றும் மும்பை ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆய்வேடுகளைப் படித்து ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழில் (ஜன. 22, 2000) ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
வட்ட மேஜை மாநாட்டுக்குச் சென்ற பி.எஸ். மூஞ்சே, 1931இல் இத்தாலிக்குச் சென்று முசோலினியைச் சந்தித்தார். முசோலினி இயக்கம் நடத்திய பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களை நேரில் பார்த்து 13 பக்கங்களுக்குக் குறிப்புகள் எழுதியிருக்கிறார் மூஞ்சே. 1931 மார்ச் 19 ஆம் தேதி மாலை 3 மணியளவில் வெனிஷீய அரண்மனையில் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியை சந்தித்து, அவர் நடத்தி வந்த பாசிச அமைப்புகளை வெகுவாகப் பாராட்டினார்.
“வளரும் நாடுகளுக்கு இதுபோன்ற இராணுவ அமைப்புகள் மிகவும் தேவை. குறிப்பாக இந்தியாவுக்குப் புத்துயிர் ஊட்ட இதுபோன்ற இராணுவ அமைப்புகள் அவசியம் தேவை. இதே நோக்கில் நானாகவே சிந்தித்து, எங்கள் நாட்டில் ஏற்கனவே ஒரு அமைப்பை நான் உருவாக்கியுள்ளேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் நாட்டு இராணுவ அமைப்புகள் பற்றிப் புகழ்ந்து பேசுவேன்” என்று கூறி விடைபெறுகிறார் மூஞ்சே.
இளைஞர்களிடம் பாசிசக் கருத்துக்களைத் திணிப்பதுதான் இந்நிறுவனங்களின் நோக்கமாகும். இதை முன்மாதிரியாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அமைப்புகளை இந்தியாவில் உருவாக்கினர்.
மூஞ்சே இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு ஹெட்கேவருடன் இணைந்து பாசிசம் பற்றித் தீவிரமாக விவாதித்தார். 1934இல் பாசிசமும்-முசோலினியும் என்ற தலைப்பில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தவர் காவ்தே சாஸ்திரி என்ற பார்ப்பனர், ‘தி மரார்த்தா’ என்ற பத்திரிகைக்கு மூஞ்சே ஒரு பேட்டியளித்தார். “இந்தியாவில் இராணுவ ரீதியான இளைஞர் இயக்கம் அமைக்கப்பட வேண்டும். ஜெர்மனி இளைஞர் இயக்கத்தைப் போலவும், இத்தாலியில் உள்ள பலில்லா இயக்கத்தைப் போலவும் (இராணுவப் பயிற்சியுடன் பாசிச சிந்தனைகளையும் பயிற்றுவிக்கும் இயக்கம்) அந்த இயக்கம் அமைய வேண்டும். இந்த இயக்கங்களை நானே நேரில் சென்று பார்வையிட்டேன். என்னுள் மிகப் பெரும் தாக்கத்தை இந்த இயக்கங்கள் உருவாக்கிவிட்டன” என்று அந்தப் பேட்டியில் மூஞ்சே கூறினார்.
“இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் இந்துயிசக் கோட்பாட்டை உருவாக்கி இந்தியா முழுவதும் பரப்புவதற்கான திட்டம் ஒன்றை ஆலோசித்து வருகிறேன். ஆனால் சிவாஜி, முசோலினி அல்லது ஹிட்லரைப் போன்ற ஒரு இந்து சர்வாதிகாரியின் கீழ் நமக்கு சுயராஜ்யம் கிடைத்தால்தான், இந்தத் திட்டத்தை அமுல்படுத்த முடியும். அதற்காக, சர்வாதிகாரிகள் உருவாகிறவரை, நாம் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. நாம் விஞ்ஞான ரீதியாக ஒரு திட்டத்தை உருவாக்கிப் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்” என்று ஹெட்கேவர், கோகலே ஆகியோரை சந்தித்துப் பேசும்போது மூஞ்சே கூறுகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் உளவுத் துறை அறிக்கைகளும், மூஞ்சேயின் இந்தத் திட்டங்களை உறுதி செய்கின்றன. “எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு – இத்தாலி ‘பாசிச’மாகவும், ஜெர்மனி நாசிசமாகவும் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளும். இது மிகைப்படுத்தப்பட்டதாகக் கருத வேண்டாம்” என்று பிரிட்டிஷ் உளவுத் துறை அறிக்கையும் இந்த ஆபத்தைப் பதிவு செய்திருக்கிறது.
இவை எல்லாம் ஏதோ கடந்தகால வரலாறுகள் அல்ல. இப்போதும் இவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைகள்தான். பா.ஜ.க. ஆட்சி செய்த மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்ட கொள்கைகளே இதற்கு சான்றுகள்!
பெரியார் முழக்கம் 06022014 இதழ்