‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “காந்தி எங்க வீட்டுக்கு வந்திருக்கார்! ”

 

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி)

“வைக்கம் வீரர்னு உங்களுக்கு எப்படிப் பேர் வந்தது?” – மணியன் கேட்கிறார்

“அதுவா? அது ஒரு கதை… சொல்றேன். நீங்க என்னமோ கேட்டீங்களே என்னது?” என்று என் பக்கமாகத் தலையைச் சாய்த்து காதைக் கைவிரல்களால் அணைத்துக் கேட்கிறார்.

“காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?னு கேட்டேன்…” என்கிறேன் நான்.

“எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப் பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் ‘கூடாது’னு தடை பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அவர் சொன்னார்: “நீ என்ன இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப் பாக்கணும். அவங்களையெல்லாம் விட்டுட முடியுமா? உனக்கு வேணாம்னா, பேசாம இருந்துக்கோ”ன்னாரு. ஏன் அப்படிச் சொன்னாருங்கிற ரகசியம் எனக்குத்தான் தெரியும். என்ன ரகசியம்னா, காங்கிரஸ், சட்டசபைக்குப் போகலேன்னா ஜஸ்டிஸ் கட்சியே நிலைச்சு இருந்துடுங்கிற பயம்தான்!”

“அதுக்கப்புறம் நீங்க என்ன செய்தீங்க?”

“சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் ‘நான் பிராமின்ஸ்’க்கு ஒதுக்கணும்னு ஒரு தீர்மானம் கொண்டு வந்தேன். ‘இதைக் கொள்கையா வேணும்னா வெச்சுக்குவோம். தீர்மானமாப் போட வேண்டாம்னு’ ராஜாஜி  கேட்டுக்கிட்டார். 1920இல் திருநெல்வேலி மகாநாட்டிலே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தி ஒரு தீர்மானம் கொண்டு வந்தேன். அப்ப தலைவராயிருந்த எஸ்.சீனிவாசயங்கார் அதை அனுமதிக்காமத் தடுத்துட்டார். அப்புறம் திருப்பூர்ல, சேலத்துல, திருவண்ணாமலையில எல்லா இடத்துலேயும் தடுத்துட்டாங்க…”

“உங்க தீர்மானத்தை அதோடு விட்டுட்டீங்களா?”

“விட்டுடுவனா? திரு.வி.க.வை காஞ்சீபுரம் மகாநாட்டுக்கு தலைவராகக் கொண்டு வந்தேன். சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் நான் பிராமின்ஸ்க்கு ஒதுக்கணும்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். திரு.வி.க. ‘பாலிசிக்கு விரோதம்னு’ சொல்லி பிரசிடென்ட்டுங்கிற முறையிலே ‘டிஸ் அலவ்’ பண்ணிட்டார். நான் கொண்டு வந்த தீர்மானத்தை நான் கொண்டு வந்த தலைவரே அனுமதிக்க மறுத்துட்டார். எதிரிங்ககிட்டேயிருந்தும் எனக்கு அடி. என் ஆளுகிட்டேயிருந்தும் அடி. ஆக, ரெண்டு பக்கத்திலேருந்தும் அடி.”

“ரொம்பச் சங்கடம்தான்!”

“ஆனாலும் தீர்மானத்தை விட்டுடலே…. ஓபன் மகாநாட்டிலே கொண்டு வர்றதுக்குப் பாடுபட்டேன். ஓபன் மகாநாட்டிலே தீர்மானத்தை எடுத்துக்கணும்னா, அம்பது பேர் கையெழுத்து வேணும்னாரு. அம்பது என்ன? இந்தா எழுபத்தைந்து கையெழுத்துனு சொல்லிக் கையெழுத்தும் வாங்கிட்டுப் போனேன். திரு.வி.க., பயந்து போய் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்துட்டார். எனக்குக் கோவம் வந்துட்டுது. “முதலியாரே! உங்களை யோக்கியன்னு நினைச்சேன். ‘கையெழுத்து வாங்கிட்டுவா’னு சொல்றப்போ சொந்த புத்தி, இப்ப வேறு புத்தியா?னு கேட்டுட்டு, இப்படித்தான் துண்டை எடுத்து தோள் மேலே போட்டுக்கிட்டு (பக்கத்திலுள்ள டவல் ஒன்றை எடுத்துத் தோள் மீது போட்டுக் கொள்கிறார்) வெளியே நடந்துட்டேன்.

அப்புறம் எல்லாருமாப் பஞ்சாயத்துக்கு வந்தாங்க. காங்கிரஸ்காரங்க போக்கு எனக்குப் பிடிக்கலே. வெளியே வந்துட்டேன். ஆனா, அதுக்கப்புறமும் கொஞ்ச நாளைக்கு காங்கிரஸ்காரனாகத்தான் இருந்தேன். அப்படி இருந்துக்கிட்டே காங்கிரஸை எதிர்த்துப் பிரச்சாரம் பண்ணினேன். காங்கிரஸை எதிர்த்தாலும் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சாதகமா இல்லே.”

“உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதெல்லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருப்பது சரினு நினைக்கிறீங்களா? திறமையைப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக்கட்டுமே…” – மணியன் கேட்கிறார்.

பெரியாருக்குக் கோபம் வந்துவிடுகிறது.

“என்ன திறமை வேண்டியிருக்குது? வெங்காயம்! ஜெயிலுக்குள்ளேயே போய்ப் பாருங்க. ஜாதிக் கணக்குப்படித்தானே அங்கேயும் இருக்காங்க. பார்ப்பன ஜாதி கொஞ்சம் குறைச்சலா இருக்கும். அதுக்குக் காரணம் என்னன்னா, அவன் கொஞ்சம் பயந்தவன். கொலை, கொள்ளைக்குப் போவ மாட்டான். அவ்வளவுதானே? மத்தப்படி ஜாதி விகிதாசாரப்படிதானே ஜெயில்லயும் இருக்காங்க? ஆனபடியாலே சர்க்கார் உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதிலேயும் ஜாதி விகிதாச்சாரம் இருந்துட்டுப் போவட்டுமே…”

“காங்கிரஸை விட்டு விலகினீங்களே… அப்புறம் என்ன ஆச்சு?”

“‘கம்யூனல் ஃபிலிங்’ வளர ஆரம்பிச்சது. சி.என்.முத்துரங்க முதலியார், சி.பி.சுப்பையா, காம ராஜ் இவங்களை வெச்சு காங்கிரஸை வளர்த்துட் டாங்க…” சட்டென்று நண்பர் மணியன் பக்கமாகத் திரும்பி, “நீங்க என்னமோ கேட்டீங்களே? ஆமா… வைக்கம் சங்கதி… சொல்றேன், கேளுங்க…” என்றார்.

காலை நாங்கள் பெரியார் மாளிகைக்குள் சென்றபோது மணி ஒன்பதரை இருக்கலாம். அப்போது அவர் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்தார். எங்களுடன் பேசி முடிக்கும்போது மணி இரண்டு. அந்த இடத்தில் எப்போது உட்கார்ந்தாரோ தெரியாது. எங்களுடன் பேசி முடிக்கும் வரை அப்பால் இப்பால் நகரவில்லை. இடையில் காபி கொண்டு வந்து வைக்கப்பட்டபோதுகூட “ஐயா! காபி ஆறிப் போறது” என்று ஞாபகப்படுத்திய பின்னரே அதை எடுத்து அருந்தினார்.

இதற்குள் நான் இருபது முறை கால்களை மாற்றி போட்டுக் கொண்டேன். பின்பக்கம் சாய்ந்தேன். முன்பக்கம் சாய்ந்தேன். முகத்தை இடது கையினால் தாங்கிக் கொண்டேன். எத்தனைவிதமான கோணங்களில் உட்கார முடியுமோ, அப்படி யெல்லாம் மாறி மாறி உட்கார்ந்தேன்.

பத்து நிமிடங்களுக்கு மேல் எந்த இடத்திலும் நிலைத்து உட்கார முடியாதவர் நண்பர் மணியன். அவர் நான்கு முறை எழுந்து நின்றார். இரண்டு முறை டெலிபோனில் பேசிவிட்டு வந்தார். கைகளைச் சொடுக்கினார். கால்களை நீட்டினார். இப்படி ஏதேதோ தேகப் பயிற்சிகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார். சற்றும் சோர்வின்றி, அலுக்காமல், சலிக்காமல், சளைக்காமல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த பெரியாரின் அதிசய சக்தியைப் பற்றி நான் மனதுக்குள் வியந்து கொண்டிருந்தேன்.  பெரியார் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

“வைக்கம் என்கிற ஊர் கேரளாவிலே இருக்குது. அந்த ஊரிலே ஒரு தெரு வழியா தாழ்த்தப்பட்டவங்க யாரும் நடக்கக் கூடாதுனு ரொம்ப நாளாக் கட்டுப்பாடு. இந்தப் பக்கத்துலே உள்ளவங்க குடிதண்ணீர் கொண்டு வரம்ணும்னா, குறுக்கே உள்ள அந்தத் தெருவைத் தாண்டித்தான் போய் வரணும்.”

“வேற வழி இல்லையா?”

“வேறொரு தெருப் பக்கமாகவும் போகலாம். ஆனால், அது சுத்து வழி. ஜாதிப் பேரால நடக்கிற இந்த அக்கிரமத்தை ஒழிச்சுடணும். தெருவிலே நடந்து போறதுக்கு எல்லாருக்கும் சம உரிமை இருக்கணும்கிறதுதான் போராட்டம். அந்தப் போராட்டத்தை ஜார்ஜ் ஜோசப், நீலகண்ட நம்பூதிரி இவங்கள்லாம் நடத்தினாங்க. திருவாங்கூர் சர்க்கார் அவங்க எல்லோரையும் புடிச்சு ஜெயில்லே போட்டுது. போராட்டம் கலகலத்துப் போச்சு. எனக்கு லெட்டர் போட்டாங்க. யாரு? ஜார்ஜ் ஜோசப்பும் நீலகண்ட நம்பூதிரியும். நீங்க உடனே வைக்கத்துக்கு வந்து போராட்டத்தை ஏற்று நடத்தினால்தான் எங்க மானம் மிஞ்சும். கால தாமதம் செய்யாமல் புறப்பட்டு வரணும்னு ஜெயிலுக்குள்ளே யிருந்து லெட்டர் எழுதி அனுப்பிச்சாங்க.

அப்ப எனக்கு உடம்பு சரியில்லை. ஆனாலும், உடனே புறப்பட்டுப் போய்ப் போராட்டத்தை நடத்தினேன். ரொம்பப் பேர் என்னோடு சேர்ந்து வந்தாங்க. மலையாளத்துக்காரங்களும் வந்தாங்க. தமிழ்நாட்டுக்காரங்களும் வந்தாங்க. போராட்டம் வலுவடைஞ்சுது. நான் ரெண்டு முறை ஜெயிலுக்குப் போனேன். கடைசியிலே சத்தியாக்கிரகம் வெற்றி அடைஞ்சுது. அதோடு அந்தத் தெரு வழியா எல்லோரும் நடக்கலாம்னு ஆயிட்டுது.”

வைக்கத்திலே உள்ள கோயில், கோயிலுக்குப் பக்கத்திலே உள்ள அந்தத் தெரு, குடி தண்ணீருக்குச் சுற்றிக் கொண்டு போக வேண்டிய இன்னொரு வழி இவ்வளவையும் ஒரு காகிதத்தில் ‘பிளான்’ போட்டுக் காட்டுகிறார் பெரியார்.

“இரண்டு முறை எதுக்கு ஜெயிலுக்குப் போனீங்க?” நான் கேட்கிறேன்.”

“முதல் முறை ஒரு மாசம் போட்டாங்க. இருந் துட்டு வெளியே வந்தேன். அப்புரம் கேரளா வுக்குள்ளேயே கால் வைக்கக் கூடாதுனு தடை போட்டாங்க; மீறினேன். மறுபடியும் தண்டனை கொடுத்து திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயில்ல கொண்டுபோய்ப் போட்டாங்க…”

“அண்ணாதுரை உங்க கட்சியிலே எப்போது சேர்ந்தார்னு சொல்ல முடியுமா?” மணியன் கேட்கிறார்.

“பொப்பிலி ராஜாகிட்டே கணக்கு எழுதிட் டிருந்தாரு. என்கிட்டே வந்தாரு. இருக்கச் சொன்னேன். கூட்டத்துக்கெல்லாம் கூடவே வருவாரு. ஒருநாள் எழுந்து பேசினாரு. இப்படியே பேசிப் பேசித் தலைவனாயிட்டாரு…” (விடுங்க, இப்ப அந்தப் பேச்செல்லாம்’ என்ற பாவனை பெரியார் முகத்தில் தெரிகிறது.)

(அடுத்த இதழில்)

பெரியார் முழக்கம் 20022014 இதழ்

You may also like...