தலையங்கம்: முதலமைச்சரின் கண்துடைப்பு அறிவிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நிர்ணயித்த 60 சதவீத மதிப்பெண் நிர்ணயத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல மாதங்களாக சமூக நீதி அமைப்புகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தபோதும், அதை மதிக்காமல் ‘கேளாக் காதுடன்’ இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இப்போது 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு மாநில அரசும் தகுதித் தேர்வு மதிப்பெண் நிர்ணயிப்பை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு குறைத்துக் கொள்ளலாம் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கூறியிருந்தாலும்கூட, முதலமைச்சர் அந்த உண்மையை மறைக்கவே துடித்தார்; பழியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் மீது தூக்கிப் போட்டார். அந்த அமைப்பு நிர்ணயித்த மதிப்பெண்ணைத்தான் தமிழக அரசு பின்பற்றுகிறது என்றார்.
ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை தமது ஆட்சி பின்பற்றி வருவதாக – ஏதோ, தமிழ்நாட்டு மக்கள் விவரம் தெரியாதவர்களாகக் கருதிக் கொண்டு அறிக்கைகளை விடுத்தார். தேர்வு கட்டத்திலேயே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை வடிகட்டிவிட்டு, அதற்குப் பிறகு, இடஒதுக்கீட்டை வழங்குகிறோம் என்பது அப்பட்டமான மோசடிவாதமாகும்.
தகுதி மதிப்பெண்ணை குறைக்கவே முடியாது என்று கூறிய இதே முதல்வர்தான், இப்போது வேறு குரலில் பேசியுள்ளார். “இந்த அவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப் படும்” என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
ஏதோ, சமூக நீதி உரிமைகள் இவரின் கருணையால் வழங்கப்படுவது போல் அவர் பேசுவது கண்டனத்துக்கு உரியதாகும். அதுவும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே அளவில் 5 சதவீதக் குறைப்பை அறிவித்திருப்பது – சமூக அநீதியாகும். ஒட்டகத்தின் முதுகில் சுமைகளை அதிகம் ஏற்றும்போது ஒட்டகத்தை ஏமாற்ற சுமையிலிந்து ஒரு துரும்பை எடுத்து கீழே போடுவதுபோல் இருக்கிறது, முதலமைச்சரின் இந்த அறிவிப்பு.
எதிர்கொள்ள வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக அரசின் இந்த சமூக அநீதி கடும் பாதிப்புகளை உருவாக்கிவிடும் என்று முதல்வர் கருதி, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கக்கூடும். உண்மையில் இந்த ‘அரைக் கிணறு தாண்டும்’. அறிவிப்புதான், மேலும் பாதிப்புகளை உருவாக்கும் என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
பல்வேறு மாநிலங்களில் இந்த மதிப்பெண் நிர்ணயம் தளர்த்தப்பட்டுள்ளதை முதலமைச்சர் அறியாமல் இருக்க முடியாது. ஆந்திர மாநில அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதமாகவும், தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீத மாகவும் குறைத்துள்ளது. ஒரிசாவில் 50 சதவீதமாகவும், பீகார், அசாம் மாநில அரசுகள் 55 சதவீதமாகவும் குறைத்துள்ளன. சமூக நீதிக்கு ஏனைய மாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டிய தமிழ்நாடு, எதிர்மறையாக செயல்படலாமா என்பதே நமது கேள்வி!
எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா, இடஒதுக்கீடுப் பிரிவினருக்கு அவர்களுக்கான ஒதுக்கீடுகள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்ற சமூகநீதிக் கண்ணோட்டத் தோடு மதிப்பெண் வரம்பை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனித் தனியாக தளர்த்த வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனைக்கான மருத்துவர் தேர்வில் இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி அரசு வெளியிட்ட அறிவிப்பைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் அரசு மருத்துவமனையிலிருந்தே திறமையான மருத்துவர்களை தேர்வு செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்தோம். அந்தக் கோரிக்கையை இப்போது தமிழக முதல்வர் ஏற்றுக் கொண்டுள்ளார். அரசின் முடிவை வரவேற்கிறோம்.
இந்த மருத்துவமனையை அரசின் மருத்துவத் துறையின் கீழ் இயங்கும் மருத்துவமனையாக நடத்துவதன் மூலம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதோடு, பணி வாய்ப்புகளும் நிரந்தரமாக உறுதிப்படுத்தப்படும் என்று வலியுறுத்து கிறோம்.
பெரியார் முழக்கம் 06022014 இதழ்