வினாக்கள்… விடைகள்…!
ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அணியிலிருந்த மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் ஆர்.எம். பழனிச்சாமி, அமைச்சர் சிதம்பரம் அணியில் சேர்ந்தார். – தினமலர் செய்தி
இனி எதிர்காலத்தில் இளங்கோவன் அணி யுடன் கூட்டணியோ, தொகுதிப் பங்கீடோ கிடையாது என்று பேட்டி அளித்தாரா?
தன்னை ஒரு டீக்கடைக்காரர் என்று கூறிக் கொள்ளும் மோடிக்கு, ஹெலிகாப்டரில் பயணம் செய்ய எங்கிருந்து பணம் வந்தது? – கெஜ்ரிவால் கேள்வி
இது என்ன கேள்வி? ‘சாமான்யன்’ மோடிக்கு, ‘சாமான்யர்’ அம்பானி உதவிடக் கூடாதா? மனிதாபிமானம் இல்லாமல் பேசக் கூடாது.
திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணம் செய்த முதியவரின் கையை எலி கடித்ததால் ரயில் ஈரோட்டில் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது. – செய்தி
எல்லா இரயில்களிலும் எலிகளுக்காக நான்கு ஏ.சி. கோச்சுகளை தனியாக ஒதுக்கியிருந்தா, இந்தப் பிரச்சினை வந்திருக்காதுல்ல.
ஒருபோதும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது. – தா. பாண்டியன்
ஆமாம்! விட்டுக் கொடுக்கவே கூடாது. அது சரி; நீங்கள் சொல்லும் தொகுதி, எந்த மாவட்டத்தில் இருக்கிறது, தோழர்?
காங்கிரசுடன் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் கூட்டணி சேரவில்லை. – செய்தி
அப்பட்டமான பொய்! வாசன் பிரிவு, சிதம்பரம் பிரிவு, இளங்கோவன் பிரிவுகளுடன் இணைந்து பலமான கூட்டணி உருவாகி வருகிறது, மறந்துவிட வேண்டாம்!
ராஜாஜி, இந்திரா காந்தி, காயிதே மில்லத் போன்றவர்களுடன் அரசியல் நடத்திய கலைஞர் தற்போது சில்லறை கட்சிகளுடன் பேசி வருகிறார். – மு.க. அழகிரி
உண்மையிலேயே அவமானம்தான்! ஆகவே மீண்டும் அழகிரியை கட்சிக்குள் கொண்டு வந்து ராஜாஜி, இந்திராவுடன் கலைஞர் அரசியல் நடத்த முன்வர வேண்டும். அப்படித் தானே?
குஜராத் வளர்ச்சியை நேரில் பார்வையிடச் சென்ற கெஜ்ரிவாலை எதிர்த்து மோடி ஆதரவாளர்கள் கறுப்புக்கொடி கலவரம். – செய்தி
வளர்ச்சியை நேரில் பார்க்க முடியாது என்பதற்குத்தானே பத்திரிகைகளில் புள்ளி விவரங்களோடு வெளியிட்டு வருகிறோம். இதுகூட புரியவில்லையா?
நாடு முழுதும் மோடி அலை வீசுகிறது என்றால், மோடி பாதுகாப்பான வாரணாசி தொகுதியைத் தேடுவது ஏன்? – சுஷ்மா சுவராஜ் எதிர்ப்பு
என்னங்க மேடம் இப்படி கேக்குறீங்க… மோடி அலையில் மோடியே அடிச்சுகிட்டுப் போயிட்டா, என்னாவது? ஒரு பாதுகாப்பு வேண்டாமா?
இந்தியா முழுதும் உள்ள பல்வேறு நகரங்களில் டீக்கடைக்கு வந்தவர்களுடன் மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ தொழில்நுட்பம் வழியாக பேசினார். – செய்தி
அதெல்லாம் இருக்கட்டும்; குஜராத்தில் கிராம டீக்கடைகளுக்குப் போய் அவர்களிடம் பேசி அங்கே தலித் மக்களுக்கு வைக்கப்பட்டுள்ள தனிக் குவளையை முதலில் ஒழிக்கச் சொல்லுங்க!
பெரியார் முழக்கம் 20032014 இதழ்