தலையங்கம்-‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள்
மதத்தை மக்களிடம் நிலைநிறுத்துவதற்கு மதவாதிகள் உருவாக்கிய சடங்குகள், அதன் மீது திணிக்கப்பட்ட நம்பிக்கைகள் மக்களின் சிந்தனைகளை முடக்கிப் போட்டு விட்டன. இந்த நம்பிக்கைகள்தான் மக்களை விழாக்களில் இலட்சக்கணக்கில் கூடுவதற்கு தூண்டுகின்றன. பெரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்புகள் இல்லாதபோது அப்பாவி பக்தர்கள் உயிர்ப்பலியாகி விடுகிறார்கள். காதைக் கிழிக்கும் அளவுக்கு மதங்களையும் அதன் மீதான அரசியலையும் நீட்டி முழங்கிக் கொண்டிருப்பவர்கள், மத உணர்வில் வீழ்ந்துபட்ட பக்தர்கள் இப்படி உயிர்ப்பலியாகும் போது வாயை இறுக மூடிக் கொண்டுவிடுகிறார்கள்.
மதத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி, அப்பாவி மக்கள் பலியாகும் அவலம் தொடர்கதையாகிவிட்டது.ஆந்திராவில் கோதாவரியாற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் முழுக்குப் போட வந்த மக்களில் 29 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த துயர செய்தி அண்மையில் வெளி வந்திருக்கிறது. இந்த ‘புண்ணிய முழுக்குப்போடும் விழாவுக்கு கட்டுக்கடங்காத வகையில் கூட்டத்தைக் கூட்டச் செய்ததில் சாமியார்களுக்கு ஜோதிடர்களுக்கு பெரும்பங்கு உண்டு. இராஜமுந்திரியில் இவ்வாண்டு நடக்கும் ‘கோதாவரி புஷ்கரம் விழா’வின்போது (முழுக்குப் போடும் விழா) குருபகவான், சிம்ம இராசியில் பிரவேசிப்பதாக, ஏற்கெனவே ஜோதிடர்கள் கதைகளைப் பரப்பினார்கள். சாமியார்கள் அவர்களின் பங்குக்கு வேறு ஒரு கதையை பரப்பினார்கள். “இந்த ஆண்டு வருவது மகாபுஷ்காரம் என்றும், 144 ஆண்டுகளுக்குப்பிறகு வருவதால், மகாபுஷ்காரம் என்பதையும் கடந்து, ‘ஆதி புஷ்காரம்’ என்ற சிறப்புப் பெற்றுள்ளது என்றும் மக்களை நம்பவைத்தனர். அதுமட்டுமல்ல, முழுக்குப் போடும் அன்றைய நாளில்(ஜூலை 14) சரியாக காலை 6.25 மணிக்குத்தான் கோதாவரியில் குருபகவான் பிரவேசிக்கிறார் என்பதால், அந்த நேரத்தில் முழுக்குப் போடுவதே “புண்ணியத்தை”க் கொண்டுவந்து சேர்க்கும் என்றும் அறிவித்திருந்தனர்.
இவை அனைத்தையும் நம்பிய அப்பாவி மக்கள், பகுத்தறிவு சிந்தனையின்றி, பெரும் கூட்டமாகத் திரண்டதாலும், அதிலும் குறிப்பிட்ட அந்த ஒரு நிமிட நேரத்தில் முழுக்குப் போட்டுவிட வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு நின்றதாலும் பக்தர்களாக வந்தவர்கள், ‘சடலங்களாக’ திரும்பும் நிலை ஏற்பட்டு விட்டது. அதைவிட பெரிய அவலம், முக்கியப் புள்ளிகள் என்போரும், இந்த மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பதுதான்.அதே ‘புண்ணிய நேரத்தில்’, ஆந்திர முதல்வர் சந்திரபாபு, தனது குடும்பத்துடன் முழுக்குப் போட வந்து விட்டார். அரசு நிர்வாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் முதலமைச்சருக்கும் அவரது குடும்பத்துக்குமே திருப்பி விடப்பட்டன.
1992ஆம் ஆண்டு இதேபோல் தமிழ்நாட்டில் குடந்தை ‘மகாமக’த்தின்போதும் நடந்தது. அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா தோழி சசிகலாவுடன் முழுக்குப் போட மகாமகம் வந்தார். இவர்களது பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்திய காவல்துறை, மக்கள் பாதுகாப்பைப் புறக்கணித்ததால் 50 அப்பாவி உயிர்கள் பலியாயின.
‘சுதந்திர’ இந்தியாவில் இதுபோன்ற கூட்ட நெரிசலில் பக்தர்கள் திணறி இறந்த சம்பவங்களை நாளேடுகள் பட்டியலிட்டுள்ளன. 1954ஆம் ஆண்டு மகாகும்பமேளாவின் போது பெருமளவில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் இறந்தபோது பிரதமர் நேரு, முக்கிய பிரமுகர்கள் இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்காக, சங்பரிவாரங்கள் அவருக்கு மதவிரோதி என்று முத்திரை குத்தின.
மக்களிடம் மதவெறியை – மூடநம்பிக்கைகளைத் திணித்து -கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கூட்டச்செய்து, அவர்கள் மரணத்துக்குக் காரணமான சாமியார்கள், சோதிடர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவருமே இந்த மரணங்களுக்கு நியாயமாக பொறுப்பேற்க வேண்டும். இதற்காக அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும். ஆனால், இந்த மூடநம்பிக்கைகளுக்குப் பலியாக வேண்டாம் என்று மக்களிடம் பகுத்தறிவைப் பரப்புகிறவர்கள், மதவிரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். மக்களை நல்வழிப்படுத்தும் பகுத்தறிவு சிந்தனைகளை எடுத்துக்கூற அனுமதி மறுக்கப்படுகிறது. மத உணர்வைப் புண் படுத்தினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்படுகிறது.
சொல்லப்போனால், மக்கள் மீது கவலையுள்ள ஒரு ஆட்சி பகுத்தறிவைப் பரப்புவதை தனது கடமைகளில் ஒன்றாகக் கருதிட வேண்டும். அதையும் செய்யாமல் பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் தடுப்பது, மக்கள் விராதச் செயல்பாடன்றி வேறு என்ன?
பெரியார் முழக்கம் 23072015 இதழ்