ஜாதியமைப்பு – ஏன் விவாதிக்கப்படுவதில்லை?
அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலுக்கு அருந்ததிராய் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதியை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருந்தது. இது தொடர்பாக ‘அவுட் லுக்’ பத்திரிகை யில் அருந்ததிராய் விரிவாக பேட்டி அளித் துள்ளார். அரசியல், பொருளாதாரம், ஊடகங் களில் பனியாக்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை புள்ளி விவரங் களுடன் சுட்டிக்காட்டிய அருந்ததிராய் அரசியல் கட்சிகள் ஜாதியமைப்பு ஜாதி பிரச்சினைகள் குறித்து ‘கண்டு கொள்ளாத’ போக்கை மேற்கொள்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார். ‘மண்டல்’ பரிந்துரை அமுலாக்கத்துக்குப் பிறகு சமகால இந்திய அரசியலில் ஜாதி ஒரு அடிப்படை அம்சமாக மாறியிருக்கிறதே என்ற வாதத்துக்கு அருந்ததிராய் பதிலளித் துள்ளார். இந்தியாவில் சமகாலத்தில் அதிகாரம், ஊடகம், பொருளாதாரங் களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்க ஜாதிப் பிரிவினரையும் உரிமைகள் மறுக்கப் பட்டோரையும் பார்க்க மறுக்கிறார்கள்.
மண்டல் குழு பரிந்துரை அமுலுக்கு வந்த பிறகு, ஜாதி அரசியலுக்குள் வந்துவிட வில்லை. அதற்கு முன்பே ஜாதி என்ற என்ஜின்தான் ‘இந்து’ சமூகத்தை மட்டுமல்ல, இந்திய சமூகத்தையே இழுத்துக் கொண்டிருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் மன்னராட்சிகள் முடிவுக்கு வந்து ‘தேசங்கள்’ உருவான போதும் சரி, அதற்குப் பிறகு ‘அரசாங்கம்’, ‘மக்கள் பிரதிநிதிகள்’ என்ற அமைப்புகள், கருத்துகள் வந்த போதும் சரி, எந்தெந்த சமூகப் பிரிவினர், எவ்வளவு எண்ணிக்கை யில் இருக்கின்றனர் என்பதே முக்கிய பிரச் சினையாக இருந்து வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டு களாக ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளை ஆதிக்க ஜாதிகள் அடக்கி வந்துள்ளனர். அதன் காரணமாக இஸ்லாமியர்களாகவும், அதற்குப் பிறகு, சீக்கியர்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மாறத் தொடங் கினர். பிறகு ‘இந்து’க்களின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறதே என்ற கவலையில் தான் இந்து “சீர்திருத்த வாதிகளாக” புறப்பட்ட சிலர், மதமாற்றங்களைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.
மதம் மாறிய “தீண்டப்படாத”வர்களை யும் ஆதிவாசிகளையும் அவர்களுக்கான “தூய்மைச் சடங்குகளை” நடத்தி மீண்டும் இந்து மதத்துக்கு மாற்ற “ஆரிய சமாஜ்”, “சுத்தி” இயக்கத்தைத் தொடங்கியது. அதே வேலையை இப்போதும் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் செய்து வருகின்றன. ஆக, இந்திய அரசியலில் அடிப்படையாகவே ஜாதி தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆனாலும்கூட ஜாதி ‘கண்டு கொள்ளப் படாத’ மய்ய அளவில் விவாதத்துக்குக் கொண்டு வரப் படாததை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. நமது நாட்டில் ‘அறிவு ஜீவிகளுக்கு’ குறிப்பாக இடதுசாதி ‘அறிவு ஜீவிகளுக்கு’ ஜாதி அமைப்பை விவாதிப்பது கசப்பாகவே இருக்கிறது. ஆய்வுக் கட்டுரை களில் அடிக்குறிப்புகளாக பயன்படுத்து வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அவர் களுக்கு விருப்பமில்லாத, சங்கடத்துக் களாக்குவதாகவே ஜாதியப் பிரச்சினை இருப்பதோடு, மார்க்சியம் கூறும் ‘வர்க்க’ விவாதங்களுக்கு ஜாதி பற்றிய விவாதங்கள் அவர்களுக்கு தேவையற்றதாகி விடுகிறது. “எங்களுக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை” என்று கூறுவதே சிறப்பாகவும் முற்போக்காகவும் கருதப்படுகிறது. இது தப்பித்துக் கொள்ளும் செயல்பாடுதான்.
ஜாதியை எதிர்த்துப் போராட வேண்டிய நியாயத்தைப் பேசாமல் ஒதுங்கிக் கொள்கிற போக்கு. நம்முடைய அனைத்து பண்பாட்டு நடவடிக்கைகளிலும் இப்படி ஜாதியம் குறித்த பார்வை அழுத்தம் தரப்படாமல் ஒதுக்கப்படுகிறது. பிரபலமான எழுத் தாளர்களின் எழுத்துகளிலோ, திரைப்படங் களிலோ, ஜாதி குறித்து பேசப்படுகிறதா? நீதி குறித்தும் அடையாளம் குறித்தும் பேசுவோரும் எழுதுவோரும் ‘புதிய பொருளாதார’த்தை விமர்சிப்போரும் ஜாதி பற்றி எவ்வளவு பேர் பேசுகிறார்கள்? எழுது கிறார்கள்? புரட்சிகரமான தீவிரவாத அமைப்புகள் கூட ஜாதிப் பிரச்சினையை ஒதுக்கி வைத்து விட்டன. 2001இல் தென்னாப்பிரிக்காவில் டர்பனில் நடந்த இனவெறி எதிர்ப்பு மாநாட்டில் ஜாதியும் ஒரு இனவெறியாகக் கருதப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது இந்திய ஆட்சி, அதை ஏற்காமல் மறுத்தது
எதைக் காட்டுகிறது?
அதேபோல் மக்கள் தொகைக் கணக் கெடுப்பிலும் இந்தியா ஜாதி குறித்த புள்ளி விவரங்களை கணக்கெடுக்க மறுத்து விட்டது. இதனால் ஜாதியின் பெயரால் மறுக்கப்படும் உரிமைகள், அடக்கு முறைகள் வெளியே தெரியாமல், இருட்டுக்குள்ளேயே நம்மை மூழ்கடித்து விட்டார்கள். அமெரிக்காவில் 1919இல் 165 கறுப்பின மக்கள் படுகொலை செய்யப் பட்டனர் என்றால், அதற்குப் பிறகு ஒரு நூற்றாண்டு காலம் கழித்து இந்தியாவில் 2012இல்8 1574 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
651 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். இது அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம்.
ஜனார்த்தன், திரிவேதி போன்ற காங்கிரஸ்காரர்கள் இடஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் வழங்கக் கூடாது; பொருளாதார அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கூறுவது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜாதி அடிப்படை யிலான இடஒதுக்கீடு மிக மிக அவசிய மானது. இடஒதுக்கீடு இருப்பதால்தான் குறைந்த அளவிலாவது தலித் மக்கள் உயர் பதவிகளிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் வர முடிந்திருக்கிறது. பல கல்வி நிறுவனங்களில், நீதித்துறையில், முற்போக்கு கல்வி நிறுவனங்களாகக் கருதப் படும் ஜவகர்லால் நேரு பல்கலையில்கூட முறையான இடஒதுக்கீடுகள் இல்லை. தெரு கூட்டுதல், சாக்கடைக் குழிக்குள் இறங்குதல் போன்ற உயிருக்கு ஆபத்தான உடலைப் பாதிக்கக்கூடிய வேலைகளுக்குத்தான் தலித் மக்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு இருக்கிறது. இந்தத் துறைகளில்கூட தனியார் மயம் வந்த பிறகு, இந்த துப்புரவு வேலை களுக்கு குறைந்த கூலியில் ஒப்பந்த அடிப் படையில் வேலைக்கு எடுக்கப்படும் நிலைக்கு ‘தலித்’ மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்” என்று கூறியுள்ளார் அருந்ததிராய்.
(மீதி அடுத்த இதழில்)
பெரியார் முழக்கம் 20032014 இதழ்