திருமண மந்திரங்களின் ஆபாசம் – வேத பண்டிதர்களே – ஒப்புதல்!

புரோகித திருமணங்களில் பார்ப்பனர்கள் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்கள் இழிவும் ஆபாசமும் நிறைந்தவை என்பதை வேத விற்பன்னரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாதாச்சாரியாரே கூறி யிருக்கிறார். ராமானுஜ தாதாச்சாரி இறந்துபோன காஞ்சி சீனியர் சங்கராச்சாரியுடன் நெருக்கமாக இருந்தவர். இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் நக்கீரன் ஏட்டில் இவர் எழுதிய தொடர் வைதிக பார்ப்பனர்களை கதிகலங்க வைத்தது. தொடரை நிறுத்துமாறு பார்ப்பனர்களிடமிருந்து வந்த அழுத்தங்களை புறந்தள்ளிவிட்டு அவர் எழுதினார்.

திருமணங்களில் கூறப்படும் மந்திரங்கள் குறித்து அவர் எழுதிய பகுதியையும் அதே திருமண மந்திரங்கள் குறித்து கீழாத்தூர் சீனிவாசாச்சாரியார் எழுதி, லிட்டில் ப்ளவர் கம்பெனி வெளியிட்டுள்ள விவாஹ மந்த்ரார்த்த போதினி நூலிலிருந்தும் சில மந்த்ரங்களைத் தொகுத்துத் தந்துள்ளோம்:

அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாதாச்சாரியாரின் “இந்து மதம் எங்கே போகிறது?” நூலிலிருந்து:

திருமணத்தில் வாத்யார்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் – ஒரு மந்திரத்தைப் பாருங்கள்.

“தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம்

மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி

விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே

பஷேபம்….”

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம் இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப் பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார் (புரோகிதர்). இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்… அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும்பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு… தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரிகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்…. என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவருடைய மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்தப் பெண் மகா புத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள். அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும்போது… வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல….

“ஸ்வாமீ… நிறுத்துங்கோ” என்றாள் அவள். வாத்யார் வாயடைத்துவிட்டார். “இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ? பெண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை… நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே…”

“வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்ல வில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் இன்ன அர்த்தம் என்றே தெரியாமல்… பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டத் தான்” – என்று தாதாச்சாரி எழுதியுள்ளார்.

கிழாத்தூர் சீனிவாசாச்சாரி தனது நூலில் எழுதியிருப்பதாவது:

தேவர்களுடன் இந்த கன்னிகைக்குள்ள சம்பந்தம் மந்த்ரங்களால் கூறப்படுகிறது.

ஒவ்வொரு கன்னிகையும் வரிசையாக ஸோமன், கந்தர்வன், அக்னி என்னும் தேவர்களை முதலில் கணவனாக அடைந்த பிறகே, நான்காவதாக மனித ஜாதியில் பிறந்தவனைக் கணவனாக அடைகிறாள் என்னும் அர்த்தமுள்ள மந்த்ரத்தைக் கணவன் கூறுகிறான். (இம் மூன்று தேவதைகளையும் இவள் கணவனாக அடைந்தாள் என்று கூறுவதற்கு, மேற்கண்ட மூன்று தேவதைகளும் முறையே அக் கன்னிகைக்கு பலம், அழகு, யௌவனம் இவைகளை உடனிருந்து அளித்தனர் என்பதே உட்பொருள்.)

“ஸோபம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: / த்ருதீயோ அக்நிஷ்டே பதி: / துரீயஸ்தே மநுஷ்யஜா:/

“ஸோமன் முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.”

“ஸோமோ (அ)தத் கந்தர்வாய கந்தர்வோ (அ) தத்அக்நயே / ரயிஞ்ச புத்ராகும்ச அதாத் அக்நிர் மஹ்யமதோ இமாம்.”

“ஸோமன் உன்னை கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்து, பிறகு எனக்குத் தந்தான்.”

அதாவது, “ஏ பெண்ணே! சந்திரன் உனக்கு பலத்தையும், கந்தர்வன் அழகையும், அக்னிதேவன் யௌவனத்தையும் அளித்து என் சுகத்திற்காக, நீ பிறந்த மனித ஜாதியில் பிறந்தவனான எனக்கு அளித்துள்ளார்கள். ஆகவே, நீ தெய்வாம்சத்துடன் வந்திருக்கிறாய்” என்று பெண்ணின் சிறப்பைக் கூற வந்தவையே இந்த மந்த்ரங்கள்.

அருந்ததியைப் பற்றிய மந்த்ரம்

ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா மருந்ததீம் / யத் த்ருவதாகும் ஹ நிந்யுஷ் ஷட்க்ருத்திகா முக்ய யோகம் வஹந்தீய மஸ்மாக மேத த்வஷ்டமீ //

“ஸப்தரிஷிகள், கிருத்திகை எனப் பெயர் கொண்ட தங்கள் மனைவிகளுக்குள்ளே முதலான வளான அருந்ததியை எப்படி நிலைத்திருக்கச் செய்தார்களோ, அப்படி மற்ற ஆறு கிருத்திகைகள் அருந்ததியின் முக்கியமான சேர்க்கையைச் செய் கின்றனர். இந்த அருந்ததியைத் தரிசனம் செய்ததால் என்னுடைய இந்த மனைவி எட்டாமவளாக வளர்ச்சி பெறட்டும்.”

தம்பதிகள் ஒரே சயனத்தில் (படுக்கையில்) படுத்தல்

கலியாணம் ஆன நாளிலிருந்து நான்கு நாட்களிலும் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால், அந்த சமயத்தில் பிரம்மசரிய விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இவர்களுடைய விரதத்தைக் காப்பாற்றுவதற்காக அரசு, ஆல், அத்தி இவைகளில் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த இரண்டு சமித்திற்குச் சந்தனம் பூசி, வஸ்திரத்தினால், அல்லது நூலினால் அலங்காரம் செய்து – அதில் விசுவாவசு என்னும் கந்தர்வனை ஆவாஹனம் செய்து, இந்த சமித்துக்களை தம்பதிகளின் இடையே படுக்கையில் வைக்க வேண்டும்.

இரவு கழிந்தபின், விடியற்காலையில், சேஷ ஹோமம் செய்வதற்கு முன் அந்த வசுவாசுவைக் கீழ்க்கண்ட இரண்டு மந்த்ரங்களைச் சொல்லி யதாஸ்தானம் செய்ய வேண்டும்.

உதீர்ஷ்வாதோ விஸ்வாவஸோ நம ஸேடா மஹேத்வா / அந்யா மிச்ச ப்ரபர்வயகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்ருஜ//

விசுவாசு என்னும் கந்தர்வனே, இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.”

“உதிர்ஷ்வாத: பதிவதீ ஹ்யேஷா விஸ்வாஸுந் நமஸா கீர்ப்பிரீட்டே / அந்யாமிச்ச பித்ருபதம் வ்யக்தாகும் ஸ தே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி //

“இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறானல்லவா? விசுவாசுவான உன்னை வணங்கித் துதித்துக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும் இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டதென்பதை நீ அறிவாயாக.”

குறிப்பு : திருமணத்துக்கு மட்டுமல்ல, “முதல் இரவுக்கும்” மந்திரங்கள் இருக்கின்றன. முதலிரவில் படுக்கையில் தம்பதிகளுக்கு இடையே படுத்திருக்கும் கந்தர்வனை எழுப்பிப் போகச் சொல்லி தம்பதிகள் உறவு கொள்ள அனுமதி கோருகிறது, மேற் குறிப்பிட்ட மந்திரம். திருமணத்துக்கு பார்ப்பனர் களை வைத்து ‘மந்திரம்’ ஓத விரும்புவோர்கூட முதலிரவுக்கு சாஸ்திரப்படி மந்திரங்கள் ஓதுவதை கைவிட்டு விட்டார்கள். அத்தகைய சடங்குகள் விபரீதமாகிவிடும் என்பதை பகுத்தறிவோடு புரிந்து கொள்ளும் பழமைவாதிகள், திருமணங்களில் புரோகித மந்திரங்களை ஏன் கைவிடக் கூடாது?

பெரியார் முழக்கம் 01052014 இதழ்

You may also like...