7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!
முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது கரைபுரண்ட உற்சாகம் – உச்சநீதிமன்றம் – இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தபோது தலைகீழாக மாற்றி ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.
5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய 7 சட்டப் பிரச்சினைகளை முன் வைத்துள்ளது, தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு. சட்டங்களின் நுணுக்கங்கள் விவாதங்கள் எப்படி இருந்தாலும், ஒரு சாமான்யனின் பார்வையில் நீதி மறுக்கப்படுகிறது என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட இவர்கள், 23 ஆண்டுகாலம் சிறையில் கழித்துவிட்டார்கள். மரண தண்டனையைக் குறைக்கக் கோரி கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு, அது 11 ஆண்டுகாலம் அது கிடப்பில் போடப்பட்டது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான உயிர் வாழும் உரிமைக்கு எதிரானது இந்தக் கால தாமதம் என்று கூறி உச்சநீதிமன்றமே அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துவிட்டது. இப்போது அவர்கள் அனைவரும் ஆயுள் கைதிகள். ஒரு ஆயுள் தண்டனை கைதி, சிறையில் இருக்க வேண்டிய காலம் குறைந்தது 14 ஆண்டுகள் என்று 1979 ஆம் ஆண்டிலேயே சட்டம் திருத்தப்பட்டு விட்டதாக சட்டம் படித்தவர்கள் கூறுகிறார்கள்.
தண்டிக்கப்பட்ட தமிழர்கள், ராஜிவ் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்களும் அல்ல; சதித் திட்டம் தீட்டியதாகவே குற்றச்சாட்டு. ‘தடா’ சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரித்ததே தவறு என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம் இது பயங்கரவாத செயல் அல்ல என்பதையும் உறுதிப்படுத்திவிட்டது. தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதிமன்றமே – மாநில அரசு கருதினால், இவர்களை விடுவிக்கும் சட்டரீதியான உரிமைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டியது. ஆனாலும் விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கு இல்லை; மத்திய அரசுக்குத்தான் என்று காங்கிரஸ் ஆட்சி முடியப் போகும் நிலையிலும் எதிர் மனு போட்டு இழுத்தடிக்கத் துடிக்கிறது. இவர்களை இறுதி காலம் வரை சிறைக்குள்ளேயே அடைத்து வைத்து வைக்க வேண்டும் என்ற பழி வாங்கும் உணர்வுக்காக சட்டப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதில் என்ன நேர்மை இருக்கிறது என்ற கேள்வியைத்தான் மனித நேயமுள்ள எவரும் கேட்பார்கள்.
மத்திய அரசின் உரிமைகளுக்குக் கீழே வரும் சட்டங்களிலும் மாநில அரசு உரிமைகளுக்குக் கீழே வரும் சட்டங்களிலும் இவர்கள் தண்டிக்கப்பட்டவர்கள் என்பது உண்மைதான். ஆனால் மத்திய அரசு உரிமையின் பாற்பட்ட ‘தந்தி-ஒயர்லஸ்’ சட்டங்கள், கடவுட் சீட்டுக்கான சட்டங்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான சட்டங்களின் கீழ் வழங்கப்படக் கூடிய அதிகபட்ச தண்டனையை ஏற்கனவே இவர்கள் அனுபவித்து விட்டார்கள். அந்த அடிப்படையில்தான் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 19 பேரை விடுதலையும் செய்துவிட்டது. இப்போது இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதே மாநில அரசின் கீழ் வரக்கூடிய குற்றங்களுக்காகத்தான்!
எல்லாவற்றுக்கும் மேலாக, பேரறிவாளன் தந்த வாக்குமூலத்தையே திருத்தி எழுதி தவறு செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பெற்ற சி.பி.அய். அதிகாரியே வெளிப்படையாகக் கூறி விட்டார். இதற்குப் பிறகும் சிறையில் அடைத்து வைக்கத்தான் வேண்டுமா?
இந்திரா படுகொலையில் குற்றத்தில் நேரடியாக ஈடுபடாதவரையும் சதி செய்த குற்றத்தின் கீழ் தூக்கில் ஏற்றி மகிழ்ந்தது, காங்கிரஸ் ஆட்சி. நேரடிக் குற்றத்தில் ஈடுபடாத ஒருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கியது – இதுவே முதல் முறை. அதே இந்திரா கொலையைத் தொடர்ந்து, டெல்லியில் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். குற்றவாளிகளை தண்டிப்பதில் காங்கிரஸ் ஆட்சி எந்தக் கவலையும் எடுத்துக் கொள்ளவில்லை. போபால் விஷ வாயுக் கசிவால் பல்லாயிரம் பேர் மாண்டனர். இன்னும் ஊனமுற்ற குழந்தைகள் அங்கே பிறந்து கொண் டிருக்கின்றன. குற்றவாளியான அமெரிக்க நிறுவனம் யூனியன் கார்பைடு தலைமை நிர்வாகியை பத்திரமாக விமானம் ஏற்றி அனுப்பி வைத்தது – இதே காங்கிரஸ் ஆட்சி தான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரண உதவி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், ராஜிவ் காந்தி மரணத்துக்காக மட்டும் பழி வாங்கும் வெறியோடு காங்கிரஸ் ஆட்சி அலைகிறது.
ஆட்சி மாற்றங்கள், அரசியல் மாற்றங்களை நாடு சந்திக்கும் சூழலில், ஏழு தமிழர் விடுதலைக்கான நியாயங்களை வலியுறுத்தியும், இதற்கு எதிராக அணி வகுக்கும் சக்திகளை அம்பலப்படுத்தியும் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. தூக்குத் தண்டனைக்கு எதிரான இயக்கம் வேறு எங்கும் இல்லாத அளவில் தமிழகத்தில்தான் நடந்தது. தூக்கிலிருந்து காப்பாற்றுவதில் அந்த இயக்கம் வெற்றி பெற்றது. தண்டனைக் குறைப்பு, விடுதலைக்கான இயக்கத்தை முன்னெடுப்போம்.
இறுதி வெற்றி, மனித உரிமைக்குத்தான்!