கழக செயலவை கூட்டம் திருப்பூர்
திருப்பூரில் கூடிய தலைமை செயற்குழு முடிவுகள்
31-05-2014 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு, திருப்பூர், கழக செயலவைத் தலைவர் தோழர் சு. துரைசாமி அவர்கள் இல்லத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம், கழக செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையிலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. தலைமை கழகப் பொறுப்பாளர்களும் மண்டல அமைப்புச் செயலாளர்களும் கலந்து கொண்டு விவாதித்த இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன:
- திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையை எதிர்வரும் 21-06-2014 சனிக்கிழமை அன்று கோவையில் கூட்டுவது என்று முடிவெடுக்கப் பட்டது.
- தமிழ்நாட்டில் இயங்கிவரும் வருமான வரித்துறை, சுங்க வரித்துறை முதலிய மத்திய அரசு அலுவல கங்களில், அண்மைக் காலமாக, அனைத்து மட்டங்களிலும், இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்தவர்களே குவிந்து வருகிறார்கள். அவர்களின் தாய் மொழியான இந்தியில் தேர்வு எழுதும் வாய்ப்பினால் மட்டுமின்றி, வட மாநிலங்களில் நடக்கும் தேர்வு மையங்களிலும் அவர்களை தேர்ச்சியடைய செய்ய பல்வேறு முறைகேடு களும் கையாளப்படும் செய்திகளும் கசிகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்தின் மத்திய அரசு அலுவலகங்களிலும், அந்தந்த மாநிலங் களைச் சார்ந்தோரையே தேர்வு செய்து நியமிக்கும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதை வழியுறுத்தும் வகையில் வருகிற 23-06-2014 திங்கட்கிழமை அன்று சென்னையில், சமூக அக்கறை கொண்ட அரசு ஊழியர்கள், இயக் கங்கள், அமைப்புகளையும் உடன் இணைத்துக் கொண்டு இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
- கழக சார்பில் நடந்துவரும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை கோவை மாவட்டத்தில் 2014 ஜூன் 10 முதல் ஜூன் 20 வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
- 5-11-2013 அன்று சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் தோழர் க.சக்திவேல் அவர்களின் இல்லத்தில் கூடிய கழக தலைமைக் குழுவில், கழக ஒழுங்குமுறைகளுக்கு முரணாக செயல்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தற்காலிகமாக கழகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த தோழர்கள் நங்கவள்ளி பொ.கிருஷ்ணன், சேலம் ப.அம்பிகாபதி, மா.அருள்குமார் ஆகியோர் அளித்திருந்த, விளக்கங்களை சேலம் மண்டல குழு தனது 17-5-2014 நாளிட்ட கலந்துரையாடலின் போது ஆய்வு செய்து அளித்திருந்த பரிந்துரையை ஏற்று, மேற்கண்ட மூவரையும் மீண்டும் கழகத்தில் இணைந்து செயல்பட அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டது.
- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவராக பணியாற்றி வந்த தோழர் மா.டேவிட் பெரியார், சென்னை மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்த ஆ.வ.வேலு, காஞ்சிபுரம் -அய்யம்பேட்டை கழகத் தோழர் கா.இரவிபாரதி ஆகியோர் கழக செயலவையில் முடிவெடுக்கப்பட்ட தேர்தல் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டது கழகத்தின் ஒழுங்குமுறைகளுக்கும், கட்டுப் பாட்டுக்கும் எதிரானது என்பதைச் சுட்டிக் காட்டி, 3-5-2014 அன்று விளக்கம் கோரப்பட்டது. அக்கடிதத்திற்கு ஆ.வ.வேலு, கா.இரவிபாரதி ஆகியோர் அளித்த விளக்கங்களில் கழகத்தின் முடிவுகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மா.டேவிட் பெரியார் எவ்வித விளக்கக் கடிதமும் அனுப்பாததால் விளக்கம் அளிக்க ஏதுமில்லை என்பது அறிய வருவதால், மேற்குறிப்பிடப்பட்ட தோழர்கள் மா.டேவிட் பெரியார், ஆ.வ.வேலு, கா.இரவிபாரதி ஆகிய மூவரையும் திராவிடர் விடுதலைக் கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கிட முடிவெடுக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 12062014 இதழ்