வினாக்கள்… விடைகள்…!

பொற் கோயிலுக்குள் இராணுவம் நுழைந்து 700 பேர் வரைக் கொன்றுக் குவித்த 30 ஆம் நினைவு நாளன்று பொற்கோயிலில் இரு சீக்கிய பிரிவினர், வாள், ஈட்டியுடன் மோதிக் கொண்டனர்.              – செய்தி

இப்படித்தான் அன்றைக்கு இராணுவம் நுழைந்த போதும் நடந்தது என்பதை செயல்முறையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் போல!

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம்; 4 அமைச்சர்களிடம் மோடி ஒப்படைத்தார்.  – செய்தி

முதலில் ‘பாவம்’ செய்த பக்தர்கள் ‘பாவத்தை’ கங்கையில் தொலைப்பதற்கு தடை போடுங்க! அதுவரை கங்கை “பாவங்களின்” நதியாகத்தான் இருக்கும்; தூய்மையாகாது.

போரில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த ராஜபக்சே நியமித்துள்ள விசாரணைக் குழுவிடம், 18,590 புகார் மனுக்கள் வந்துள்ளன.      – செய்தி

அப்புறம், இந்த மனுக்களும் காணாமல் போகும்; அதைக் கண்டுபிடிக்க ராஜபக்சே மற்றொரு குழு போடுவார். இந்திய வெளியுறவுத் துறை அதையும் வரவேற்று அறிக்கை விடும். அட, போங்கப்பா!

“கற்பழிப்பு” குற்றவாளிகளை கடவுளால் மட்டுமே தடுக்க முடியும். ஆட்சியாளர்களை குறை சொல்லக் கூடாது.  – ம.பி. உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர்

அப்ப, கடவுள் ஏன் தடுக்க மாட்டேங்குறாரு? இதைக் கேட்டா, அதுக்கு கடவுளால் மட்டுமே பதில் சொல்ல முடியும்னு பேசுவீங்க… விளங்கிடுவீங்க…

திருப்பதியில் தரிசனத்துக்கு வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு கியூவில் நின்ற பக்தர்களிடம் குறைகளைக் கேட்டார்.  – செய்தி

அதுவும் சரிதான்! முதல்வரிடம் குறைகளைக் கொட்டினால் ஏதாவது தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏழுமலையானுக்கு அருகிலேயே அரசுக்கு மனு போடுவதற்கு ஒரு புகார்ப் பெட்டியை நிரந்தரமாக வச்சிடுங்க!

என் காலிலோ, தலைவர்களின் காலிலோ விழும் பழக்கத்தை – நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைவிட வேண்டும்.     – பிரதமர் மோடி

இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தமான அடிமைப் பண்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்த மோடியைப் பாராட்ட வேண்டும். தமிழகத் தலைவர்களே, உங்கள் காதுகளில் கேட்கிறதா?

காங்கிரசில் ‘கோஷ்டி’களே இல்லை. ஞானதே சிகன் திட்டவட்டம்.   – ‘தமிழ் இந்து’ செய்தி

உண்மைதான்! கோஷ்டிகள் தான் காங்கிரசாக இருக்குது!

ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த ‘தடா’ நீதிமன்ற நீதிபதி மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பாதுகாப்பு அலவன்ஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த 30 சதவீத கூடுதல் ஊதியத்தை தமிழக அரசு நிறுத்தியுள்ளது.  – செய்தி

இது நியாயமில்லைங்க. 26 பேருக்கு தூக்கு வழங்கிய நீதிபதிக்கு குறைந்தது 26 ஆண்டு களுக்காவது இந்த கூடுதல் ஊதியத்தை நீடிக்க வேண்டாமா?

அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், உமாபாரதி, நாடாளுமன்ற உறுப்பினராக சமஸ்கிருதத்தில் உறுதி ஏற்றனர்.       – செய்தி

அதோட நிறுத்துங்க. கோப்புகளிலும் சமஸ்கிருதத்தில் குறிப்பு எழுதி, கோப்புகளை கோயிலுக்கு அனுப்பி வச்சுடாதீங்க.

சத்தியமூர்த்தி பவனில் காமராசருக்கு சிலை; எதிர்காலத்தில் தோல்வியிலிருந்து காப்பாற்ற ஜோதிடர் தந்த ஆலோசனையை ஞானதேசிகன் ஏற்றார்.  – ‘தினமலர்’ செய்தி

இப்ப, காமராசர் சிலையை வைப்பீங்க… சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தோல்விக்குக் காரணம் காமராசர் சிலையை வச்சதுதான்னு ஒரு கோஷ்டி கிளம் பும்; காமராசர் பாவம்; அவரை விட்டுடுங்கய்யா…

சேவல் சண்டை – தமிழர் பண்பாட்டு விளை யாட்டு; நீதிமன்றத் தடைக்கு தமிழ் அமைப்புகள் கண்டனம். – செய்தி

ஜாதியோ, வாய்க்கால் வரப்பு தகராறோ இல்லாத பறவைகளை சண்டை போட வைச்சு சாகடிப்பது தான் தமிழர் பண்பாடுன்னு சொல்ல வர்ரீங்களா?

பெரியார் முழக்கம் 12062014 இதழ்

You may also like...