பேரறிவாளன் மனம் திறக்கிறார்!
வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து, தமிழக அரசின் விடுதலை முயற்சி, தன் தாய் அற்புதம்மாளின் போராட்டம் பற்றி பல கேள்விகளுக்கு வழக்கறிஞர் மூலம் விடை அளிக்கிறார்.
அரசியல் சாசன அமர்விற்கு உங்கள் விடுதலை வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
அரசியல் சாசன அமர்வில் நீதியரசர்கள் யார் யார் பங்கு பெறப் போகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருப்பினும் தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு இதில் எவ்வகையான நிலைப்பாடு எடுக்க உள்ளது என்பதையே நான் மிக ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். காரணம் தண்டனை குறைப்பு அதிகாரம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என நன்கு தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக சென்ற காங்கிரசு மத்திய அரசு தமிழக அரசின் முடிவை எதிர்த்தது – வழக்கு தொடுத்தது. தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு மாநில உரிமைகளை மதிக்கிற அரசாக இருககும் என நம்புகிறேன்.
மேலும், தற்போது நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள திரு.மோடி அவர்கள் மாநில முதல்வராக இருந்தவர் என்பதால் இதிலே எனக்கு கூடுதலாகவே நம்பிக்கை இருக்கிறது. அதேபோல் திரு.தியாகராசன் அவர்களின் வாக்குமூலத்தை தற்போதைய மத்திய அரசு கணக்கிலெடுத்து வழக்கின் தன்மையை எடைபோடும் எனவும் அதற்கு அமைய வழக்கை அணுகும் எனவும் உறுதியாக நம்புகிறேன்.
‘உயிர்வலி’ ஆவணப்படம் மிகப் பெரிய அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தி இருந்தாலும் அதில் இடம் பெற்றிருந்த சி.பி.ஐ. அதிகாரி தியாகராசனின் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்கவில்லையே?
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்குமுன் யாருக்குமே நிகழாத திருப்பம் எனது வழக்கில் நடந்தது. இது ஒரு அதிசய நிகழ்வு என்றுகூட சொல்லலாம். என்னை குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானிக்கக் காரணமாக இருந்தது எனது ‘தடா’ ஒப்புதல் வாக்குமூலம். இதை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தண்டிக்கும் முறை என்பது நாகரிக சமூகம் ஏற்றுக் கொள்ளாத சட்ட நடைமுறையாகும். ஆனால், அந்த அநாகரிகம் எமது வழக்கில் நடந்தது. அந்த ஆவணம் நம்பகத் தன்மையற்றது என கடந்த 22 ஆண்டுகளாக நான் கதறி கூக்குரலிட்டேன். எவருமே அதனை காது கொடுத்து கேட்கத் தயாராக இல்லை. ஏனெனில், குற்றவாளி என நான் முத்திரைக் குத்தப்பட்டபின் எனது குரலுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை. ஆனால் அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்து என்னை தவிர்த்து இன்னுமொரு மனிதர் மட்டுமே சான்று தர முடியும் என்பதை நான் நன்கு அறிவேன்.
அந்த மனிதர் – அந்த வாக்குமூலத்தை பதிவு செய்ததாக கூறப்படும் திரு.தியாக ராசன். எங்கள் இருவர் தவிர்த்து அந்த ஆவணத்தின் நம்பகத் தன்மை குறித்து பேச யாருக்கும் தகுதியில்லை. இந்த நிலையில் கடந்த 22.4.2013 அன்று எனது சிறை முகவரிக்கு திரு.தியாகராசன் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார். சட்டரீதியாக எனக்கு உதவ விரும்புவதாக தெரிவித்திருந்தார். பின்னர் ‘உயிர்வலி’ ஆவணப் படத்தில் தனது கருத்தை பதிவு செய்து உலகின் முன் அதிர்ச்சி தரும் உண்மைகளை போட்டுடைத்தார்.
அவர் சொல்கிறார் – “அறிவு ஒரு நிரபராதி” என்று. இதை காலம் கடந்து சொல்வதால் வரும் சட்ட விளைவுகளை சந்திக்கவும் தயார் என்கிறார், இருந்தும் தற்போது நடைமுறையில் சட்டத்தில் இதுபோன்ற புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதில் பெரும் இடர்களை சந்திக்க வேண்டியுள்ளது. மற்றபடி சட்டம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ திரு.தியாகராசன் அவர்களின் வாக்கு மூலத்திற்கு பின்பு என் தரப்பு உண்மைகளை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அம்மா-மகன் உறவு, அதாவது பேரறிவாளன்-அற்புதம்மாள் உறவினை திரைப்படம் ஆக்குவதாக ‘தேசிய விருது’ இயக்குநர் ராம் அவர்கள் கூறியுள்ளது பற்றி?
மிகவும் நெகிழ்ந்து போனேன். இயல்பாகவே ஒரு தாய்க்கும் மகனுக்குமான உறவு என்பது ‘அற்புதமானது’. அதனை சிறந்த படைப்பாளியான அண்ணன் ராம் அவர்கள் பதிவு செய்வது – அந்த கதைக்கான மாந்தர்களாக என்னையும் எனது தாயாரையும் தேர்வு செய்தது சொற்களால் விவரிக்க முடியாத மன நிறைவு தந்தது. எனது சிறிய வயதில் திரைப்படங்களில் வரும் சண்டைக் காட்சிகளை காண மிகவும் அஞ்சுவேன். எனவே எனது பெற்றோர், சகோதரிகளுடன் திரைப் படம் காண மறுத்து நண்பர்களுடன் விளையாடுவதுண்டு. ‘மூன்றாம் பிறை’ திரைப்படம்தான் முதன்முதலில் திரைப் படங்கள் மீதான என் பார்வையை – அச்சத்தைப் போக்கி, நேசிக்கக் கற்றுத் தந்தது. எனவே பெருமைக்குரிய இயக்குநர் அய்யா பாலுமகேந்திரா அவர்களின் குடும்பத்திலிருந்து வந்துள்ள அண்ணன் ராம் இப் பதிவினை – படைப்பினை மேற் கொள்வது மிகப் பொருத்தமே.
சிறிய சிறிய தோல்விகளை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ள இன்றைய இளைஞர்களிடையே தோல்விகளும், துரோகங்களும், நம்பிக்கை இழப்புகளையும் தாங்கிக் கொண்டு இன்றைய அளவிலும் வெற்றி பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறீர்களே…
உங்களின் இந்த மதிப்பீட்டிற்கு முதலில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன். உங்களின் கேள்வி அடிப்படையில் இரு கூறுகளைக் கொண்டுள்ளது. தோல்வி, துரோகம், நம்பிக்கை இழப்பு ஆகியவற்றை தாங்கிக் கொள்ளும் மனவலிமை குறித்து கேட்கிறீர்கள். அடுத்து இந்த துன்பங்களுக்கு இடையே – அவற்றை தாங்கிக் கொள்வதைத் தாண்டி, வெற்றி பெறுவதற்கான போராட்டம் குறித்தும் கேள்வி எழுப்புகிறீர்கள். இதற்கான விடையினை கூறுவது அத்தனை எளிதானது அ ன்று. காரணம் எனது வாழவு அத்தனை எளிதானது அன்று. காரணம் எனது வாழ்வு முழுவதும் பயின்ற கொள்கைகளும் பழகிய மனிதர்களும் குடும்பச் சூழலும் என பல்வேறு காரணிகள் இருக்கின்றன. தந்தை பெரியார், வள்ளுவர், புரட்சிக் கவிஞர் என தலைவர்கள் பலரின் தத்துவம் தந்த பக்குவம் இருக்கிறது. பலரிடம் நான் கற்றுக் கொண்டவை ஏராளம். இவை எல்லாவற்றையும் கடந்து – நீங்கள் குறிப்பிடும் மனவலிமையை 23 ஆண்டுகால தோல்விகள், துரோகங்கள், நம்பிக்கை இழப்புகள் ஆகியவற்றிலிருந்துதான் நான் அதிகம் பெற்றேன்.
எந்த பேட்டியிலும் தவிர்க்க முடியாத அந்த கேள்வி இந்த பேட்டியிலும்… உங்கள் தாயாரின் கால்நூற்றாண்டு கால போராட்டம் குறித்து….
மலைக்க வைக்கிறது. சி.பி.ஐ.யினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டதற்கு அடுத்த நாள் (12.06.1991) என்னை சந்திக்க எனது தாயார் ‘மல்லிகை’ அலுவலகம் வந்தபோது துவங்கியது அவரது பயணம். அந்தப் பயணம் இத்தனை நீண்டதாக இருக்கப் போகிறது என அப்போது அவரும் எண்ணியிருக்க மாட்டார் – நானும் கற்பனை செய்திருக்கவில்லை. அவரை சந்திக்க ஒவ்வொரு வியாழனன்றும் நான் தயாராகி செல்லும்போது வழியில் எதிர்ப்படும் சிறை ஊழியர்கள், “அறிவம்மா வந்துவிட்டார், அப்படியானால் இன்று வியாழக்கிழமை” என வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள். அவரது தொடர்ச்சியான உறுதிமிக்க உழைப்பும், போராட்டமும்தான் எமது வழக்கிற்கான மக்கள் ஆதரவை, அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. அந்த அர்ப்பணிப்பு நிறைந்த போராட்டத்திற் கான அங்கீகாரமாகத்தான் முதல்வர் அவர்களுடனான சந்திப்பு என கருதுகிறேன்.
மரண தண்டனையை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது குறித்து நீதிபதி ஏபி ஷா தலைமையிலான சட்ட ஆணையம் மக்கள் கருத்தை கோரியுள்ளது. இது பற்றி?
இத்தனை ஆண்டுகால மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் மகிழ்ச்சியான தருணம் இது. அதிலும் தவறான தீர்ப்பினால் மரண தண்டனையை அடைந்துவிடும் வாய்ப்பு குறித்தும் சட்ட ஆணையம் ஆராய முன் வந்திருப்பது என்போன்ற நிரபராதிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். எனவே சட்ட ஆணையத்தின் முன்பு மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கருத்துகள் குவிய வேண்டும் என விரும்புகிறேன். இதற்கான வேண்டு கோளையும் ‘அந்திமழை’ மூலமாக விடுக்கிறேன். நன்றி: ‘அந்திமழை’ மாத இதழ்
பெரியார் முழக்கம் 19062014 இதழ்